திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

உலக மறைப்பணி ஞாயிறு தினத்திற்குத் திருத்தந்தையின் செய்தி

செபங்கள், ஆதரவுகளினால், நற்செய்தியைப் பரப்பவும், மேய்ப்பு மற்றும் மத போதனைத் திட்டங்களை வழங்கவும், புதிய ஆலயங்களைக் கட்டவும், மறைப்பணிப் பகுதிகளில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் நலவாழ்வு மற்றும் கல்வித் தேவைகளைப் பராமரிக்கவும் உதவுவோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மக்களிடையே எதிர்நோக்கின் திருப்பயணிகளாக என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்படும் இந்த உலக மறைப்பணி ஞாயிறானது நமது ஞானஸ்நான அழைப்பை நாம் ஒன்றாகச் சிந்திக்க அழைப்புவிடுக்கின்றது என்றும், ​​பூமியின் எல்லை வரை நமது எதிர்நோக்காம் கிறிஸ்து இயேசுவை கொண்டு செல்லும் இனிமையான மற்றும் மகிழ்ச்சியான பணியில் நம்மை நாமே புதிதாக அர்ப்பணிப்போம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 19, ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மறைப்பணி ஞாயிறுக்கான காணொளிச்செய்தி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், முழு திருஅவையும் ஒன்றிணைந்து, மறைப்பணியாளர்களுக்காகவும் அவர்களது திருத்தூது உழைப்பின் பலனிற்காகவும் செபிக்க இந்நாள் சிறப்பிக்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.

பெருவில் ஒரு மறைப்பணி அருள்பணியாளராகவும் ஆயராகவும் தான் பணியாற்றியபோது, ​​உலக மறைப்பணி ஞாயிற்றுக்கிழமை அன்று மக்களிடையே வெளிப்படும் நம்பிக்கை, செபம் மற்றும் தாராள மனப்பான்மை எவ்வாறு முழு சமூகங்களையும் மாற்றும் என்பதை தான் நேரடியாகக் கண்டதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

உலகில் உள்ள ஒவ்வொரு கத்தோலிக்க திருஅவையையும் உலக மறைப்பணி ஞாயிற்றுக்கிழமையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை அவர்கள், செபங்கள், ஆதரவுகளினால், நற்செய்தியைப் பரப்பவும், மேய்ப்பு மற்றும் மத போதனைத் திட்டங்களை வழங்கவும், புதிய ஆலயங்களைக் கட்டவும், மறைப்பணிப் பகுதிகளில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் நலவாழ்வு மற்றும் கல்வித் தேவைகளைப் பராமரிக்கவும் உதவுவோம் என்றும் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள மறைப்பணியாளர்களுக்கு உதவ மக்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என்று கூறி தனது காணொளிச்செய்தியினை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 அக்டோபர் 2025, 09:29