ஒன்றிப்பை வளர்ப்பது கத்தோலிக்கத் திருஅவையின் முன்னுரிமைகளில் ஒன்று!

"உலகளாவிய திருஅவையில் எனது குறிப்பிட்ட பங்களிப்பு என்பது அனைவருக்கும் பணியாற்றுவதிலும், ஒன்றிப்பையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதிலும் பாதுகாப்பதிலும் உள்ளது" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 30, ஞாயிறன்று, காலை 10.30 மணிக்கு இஸ்தான்புல்லில் உள்ள புனித ஜார்ஜ் பேராலயத்தில் இடம்பெற்ற இறைபுகழ்ச்சி வழிபாட்டின் இறுதியில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புநிறைந்த சகோதரர் சகோதரிகளே,

இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டலின் போது, ​​பல்வேறு திருச்சபைகளின் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ உலக ஒன்றிப்பு சபைகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, நீசேயாவின் நம்பிக்கை அறிக்கை நம்மை உண்மையான ஒன்றிப்பில் ஒன்றிணைத்து, ஒருவரையொருவர் சகோதரர் சகோதரிகளாக அங்கீகரிக்க அனுமதிக்கிறது என்பதை நினைவு கூர்ந்தோம்.

புதிய பாதையில் பயணம்

கடந்த காலங்களில், வெவ்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்களிடையே பல தவறான புரிதல்களும் மோதல்களும் கூட இருந்துள்ளன, மேலும் முழுமையான ஒன்றிப்பை அடைவதைத் தடுக்கும் தடைகள் இன்னும் உள்ளன. ஆயினும்கூட, ஒன்றிப்பை வளர்க்க கடும் முயற்சி செய்வதில்  நாம் தளர்ந்துவிடக்கூடாது. நாம் ஒருவரையொருவர் கிறிஸ்துவுக்குள் சகோதரர் சகோதரிகளாகக் கருதி, அதற்கேற்ப ஒருவரையொருவர் அன்புகூர வேண்டும்.

இந்த விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்டு, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தந்தை அத்தேனாகோரஸ் இருவரும் 1054 -ஆம் ஆண்டு சமய விலக்குகளுக்கு வழிவகுத்த எதிர்பாராத விதமான முடிவுகளையும் சோகமான நிகழ்வுகளையும் திருச்சபையின் நினைவிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆணித்தரமாக அறிவித்தனர்.

நமது மதிப்பிற்குரிய முன்னோர்களின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல், கத்தோலிக்கர்களுக்கும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒப்புரவு, அமைதி மற்றும் வளர்ந்து வரும் ஒன்றிப்புக்கான பாதையைத் திறந்து வைத்தது, இது அடிக்கடி ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளல், சகோதர சந்திப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய இறையியல் உரையாடல் மூலம் வளர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்ட முன்னேற்றங்களின் ஒளியில், திருஅவை மற்றும் சட்ட நிலைகளில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இன்று நாம் முழுமையான ஒன்றிப்பை மீட்டெடுப்பதில் இன்னும் அதிகமாக நம்மை அர்ப்பணிக்க அழைக்கப்படுகிறோம்.

ஒன்றிப்பை வளர்ப்பதற்கு முன்னுரிமை

இது சம்பந்தமாக, கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும் இடையிலான இறையியல் உரையாடலுக்கான கூட்டு அனைத்துலக ஆணையத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முயற்சியில் அனைத்து தன்னியக்க ஆர்த்தடாக்ஸ் திருச்சபைகளும் மீண்டும் தீவிரமாக பங்கேற்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன்.

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் மற்றும் எனது முன்னோடிகளின் படிப்பினைகளின் தொடர்ச்சியாக, எனது பங்கிற்கு, சட்டபூர்வமான வேறுபாடுகளை மதிக்கும் அதேவேளையில், தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்குப்  பெற்ற அனைவரிடையேயும் முழுமையான ஒன்றிப்பை வளர்ப்பது கத்தோலிக்க திருஅவையின்  முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

குறிப்பாக, உரோமையின் ஆயராக எனது பணியின் முன்னுரிமைகளில் இதுவும் ஒன்றாகும். உலகளாவிய திருஅவையில் எனது குறிப்பிட்ட பங்களிப்பு என்பது அனைவருக்கும் பணியாற்றுவதிலும், ஒன்றிப்பையும்  ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதிலும் பாதுகாப்பதிலும் உள்ளது.

விசுவாசத்தில் நம் சகோதரர் சகோதரிகளை மட்டுமல்ல, மனிதகுலம் முழுவதையும், படைப்பு முழுவதையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆண்டவர் இயேசுவின் விருப்பத்திற்கு உண்மையாக இருக்க, நமது திருச்சபைகள் இன்று தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கு ஒன்றாக பதிலளிக்க வேண்டும்.

மூவகை சவால்கள்

01. அமைதியை உருவாக்குபவர்களாக

முதலாவதாக, அருகிலும் தொலைதூரத்திலும் இரத்தக்கறை படிந்த மோதல்கள் மற்றும் வன்முறைகள் நிறைந்த இவ்வேளையில், கத்தோலிக்கர்களும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் அமைதியை  உருவாக்குபவர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள். இதன் பொருள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பது, தேர்வுகளை மேற்கொள்வது மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் சைகைகளை ஏற்றுக்கொள்வது, அதேவேளையில், அமைதி என்பது மனித முயற்சியின் பலன் மட்டுமல்ல, அது கடவுளிடமிருந்து வந்த ஒரு கொடை என்பதை ஒப்புக்கொள்வதும் ஆகும்.

எனவே, அமைதியை இறைவேண்டல், தவம், தியானம் மற்றும் இறைவனுடன் ஓர் உயிருள்ள உறவை வளர்ப்பதன் மூலம் தேட வேண்டும். அமைதியின் பணியில் நாம் உண்மையிலேயே ஈடுபடுவதற்கு என்ன வார்த்தைகள், சைகைகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள அவர் நமக்கு உதவுகிறார்.

02. படைப்பைப் பராமரிப்பவர்களாக

நமது திருச்சபைகள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால் அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் நெருக்கடியாகும். இது திசையை மாற்றுவதற்கும் படைப்பைப் பாதுகாப்பதற்கும் ஆன்மிக, தனிப்பட்ட மற்றும் சமூக மாற்றத்தை நம்மிடமிருந்து கோருகிறது என்று கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் அடிக்கடிக் கூறியுள்ளார்.  கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள படைப்பைப் பராமரிப்பதற்கான பொறுப்பை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில், ஒரு புதிய மனநிலையை ஊக்குவிப்பதில் கத்தோலிக்கர்களும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற அழைக்கப்படுகிறார்கள்.

03. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்களாக 

நான் குறிப்பிட விரும்பும் மூன்றாவது சவால், குறிப்பாக தகவல் தொடர்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது. மனிதகுலத்திற்கு அவை வழங்கக்கூடிய மகத்தான நன்மைகளை அறிந்த கத்தோலிக்கர்களும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் அவற்றின் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிப்பதில் ஒத்துழைக்க வேண்டும்.  உண்மையில், இந்தத் தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியின் சேவையில் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் அவை உலகளவில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும், இதனால் அவற்றின் நன்மைகள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கோ அல்லது சலுகை பெற்ற சிலரின் நலன்களுக்கே மட்டுமே ஒதுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தச் சவால்களைச் சந்திப்பதில், அனைத்துக் கிறிஸ்தவர்களும், பிற மத மரபுகளைச் சேர்ந்தவர்களும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து ஆண்களும் பெண்களும் பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுவதில் இணக்கமாக ஒத்துழைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 நவம்பர் 2025, 13:51