ஒவ்வொரு நபரும் மரியாதைக்கு உரியவர்! : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"ஒவ்வொரு நபரும் மரியாதைக்கு உரியவர், ஒவ்வொரு மனிதருக்கும் மாண்பு உண்டு" என்றும், "நாம் அனைவருக்கும் நன்மையையும் அமைதியையும் விரும்பும் மக்களாக இருக்க வேண்டும்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 25, இச்செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைவிடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் துருக்கி மற்றும் லெபனோனுக்கு தான் மேற்கொள்ளவிருக்கும் முதல் திருத்தூதுப் பயணம் குறித்த தனது சிந்தனைகளைச் செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்டபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இஸ்னிக் நகரில் உள்ள நீசேயா திருச்சங்கத்தின் 1,700-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான தனது திருப்பயணத்தைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்தவர்களிடையே ஒன்றிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இது உலகளாவிய அமைதியை வளர்க்கும் என்றும் அவர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
கான்ஸ்டான்டினோப்பிளின் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளையும் நினைவு கூர்ந்தார் திருத்தந்தை
பெய்ரூட்டில் நிகழ்ந்த வன்முறை, குறிப்பாக ஹெஸ்பொல்லா சுற்றுப்புறங்களில் இஸ்ரேலிய குண்டுவெடிப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்த திருத்தந்தை, வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த அதேவேளை, குறிப்பாக, மத்திய கிழக்கில் உள்ள அனைத்து மக்களிடையேயும் உரையாடலையும் மரியாதையையும் வலியுறுத்தினார்.
மேலும் பல மோதல்கள் அடிப்படை அநீதிகளிலிருந்து உருவாகின்றன என்பதால், அமைதிக்கு நீதி அவசியத் தேவையாக அமைகிறது என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.
உக்ரைனில் இடம்பெற்று வரும் போரைப் பற்றிப் பேசுகையில், அமைதி முயற்சிகள் குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், பல உயிர்கள் தொடர்ந்து இழக்கப்படுவதால், அனைத்துத் தரப்பினரும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைதான் தீர்வுக்கான திறவுகோல் என்றும் மீண்டும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
நவம்பர் 25, செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, இளைஞர்களின் கல்வியில் தொடங்கி, ஒவ்வொரு நபரின் மாண்பிற்கும் மரியாதை செலுத்துவதை வலியுறுத்தி, ஒரு கலாச்சார மாற்றத்திற்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
