உ லக காரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகளுடன்  திருத்தந்தை உ லக காரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை   (@Vatican Media)

உலக காரித்தாஸ் அமைப்பு திருஅவையின் பணிக்கு ஒரு சான்று!

ஒன்றிப்பை வளர்ப்பது, தலத்திருஅவையை ஆதரிப்பது, பொதுநிலையினர் தலைவர்களை உருவாக்குவது போன்ற பணிகளை தொடர்ந்து செய்யுமாறு அனைத்துலக காரித்தாஸ் அமைப்பினரைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

நவம்பர் 21, இவ்வெள்ளியன்று, அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் ஏழைகளுக்காகப் பரிந்து பேசுவதிலும் அதன்  அர்ப்பணிப்பைக் குறித்துப் பாராட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஏழைகள் மீது கிறிஸ்து கொண்டுள்ள அன்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்குச் சேவை செய்வதற்கான திருஅவையின் பணிக்கு காரித்தாஸ் அமைப்பு ஒரு வலிமை வாய்ந்த சான்றாக விளங்குகிறது என்றும்  எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அண்மையில் தான் எழுதிய "நான் உங்களை அன்புகூர்ந்திருக்கின்றேன்" (Dilexi te) என்ற அப்போஸ்தலிக்கத் திருமடல் குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவிடமிருந்து நாம் பெறும் அன்பு மற்றவர்களுக்கு சேவை செய்ய நம்மைத் தூண்டுகிறது என்று மொழிந்தார்.

திருஅவையின்  தாயுள்ள அன்பை வெளிப்படுத்தி, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதிலும், ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும்  அயராது உழைக்கும்  காரித்தாஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை.

மேலும், காரித்தாஸ் அமைப்பின் அன்றாடப் பணிகளான மாண்புடன் பணியாற்றுவது, பாதிக்கப்படக்கூடியவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பரிவிரக்கமுள்ள உடனிருப்பை வழங்குவது  ஆகியவை யாவும் திருஅவையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகின்றன என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

காரித்தாஸ் உறுப்பினர்களை  ஊக்குவித்த அதேவேளை, ஒன்றிப்பை வளர்ப்பது, தலத்திருஅவையை  ஆதரிப்பது, பொதுநிலையினர் தலைவர்களை உருவாக்குவது போன்ற பணிகளை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை,  தூய ஆவியாரின் வழிகாட்டுதலின்படி செயல்படும்போதுதான்  திருஅவையின் பணி சிறக்கும் என்றும் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக,  அவர்கள் மேற்கொள்ளும் பணிகளில் தொடர்ந்து  துணிவு, விடாமுயற்சி மற்றும் மகிழ்வை வழங்குபடி  ஏழைகளின் அன்னையாம் கன்னி மரியாவிடம் பரிந்துரை செய்யும்படி இறைவேண்டல் செய்து, தனது உரையை நிறைவு செய்தார்  திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 நவம்பர் 2025, 14:38