திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 19, புதன்கிழமை, வத்திகானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. முன்னதாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், வத்திக்கான் வளாகம் முழுவதும் தனது திறந்த வாகனத்தில் வலம் வந்து அங்கு நிறைந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். அப்போது மகிழ்ச்சி பொங்க திருப்பயணிகள் அனைவரும் தங்கள் கரங்களைத் தட்டி திருத்தந்தையை வரவேற்றனர். சரியாக காலை 10 மணிக்கு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார். முதலில் யோவான் நற்செய்தியிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டது. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால், அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். (யோவா 20:14-16)
அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே,
எதிர்நோக்கிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த யூபிலி ஆண்டில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் இன்றைய உலகின் சவால்களுக்கும் - அதாவது நமது சவால்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வருகின்றோம்.
சிலவேளைகளில், "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்?" என்று வாழும் இயேசு நம்மிடமும் கேட்க விரும்புகிறார். உண்மையில், சவால்களை நாம் தனியாக எதிர்கொள்ள முடியாது, மேலும் கண்ணீர் நம் கண்களைத் தூய்மைப்படுத்தி, நம் பார்வையைத் தெளிவாக்கும்போது அது வாழ்க்கையின் கொடையாக அமைகிறது.
மற்ற நற்செய்திகளில் காணப்படாத ஒரு விவரத்திற்கு நற்செய்தியாளர் யோவான் நம் கவனத்தை ஈர்க்கிறார். அதாவது, வெற்றுக் கல்லறைக்கு அருகில் மகதலா மரியா அழுது கொண்டிருந்தபோது, அவர் உயிர்த்தெழுந்த இயேசுவை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை, ஆனால் அவர் அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்தார் என்று நமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.
அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் (யோவா 19:40–41) என்று புனித வெள்ளியன்று, கதிரவன் மறையும் வேளையில், இயேசுவின் அடக்கம் பற்றி விவரிக்கும், வாசகம் மிகவும் துல்லியமாக இருக்கின்றது. இவ்வாறு, ஓய்வுநாளின் அமைதியிலும், ஒரு தோட்டத்தின் அழகிலும், இறைமகன் இயேசுவின்மீதான துரோகம், கைது, கைவிடுதல், கண்டனம், அவமானம், கொலை ஆகியவற்றால் கட்டவிழ்த்து விடப்பட்ட இருளுக்கும் ஒளிக்கும் இடையிலான வியத்தகு போராட்டம் முடிகிறது.
தோட்டத்தைப் பயிரிடுவதும் பராமரிப்பதும்தான் இயேசு நிறைவேற்றிய தொடக்கப்பணி பணி (ஒப்பீடு. தொநூ 2:15). சிலுவையில் அவர் கூறிய இறுதி வார்த்தையான “எல்லாம் நிறைவேறிற்று” (யோவா 19:30) என்பது ஒவ்வொரு நபரும் அவர் ஆற்றிய அதே பணியை மீண்டும் ஆற்றிட வேண்டும் என்ற அழைப்பை விடுக்கிறது. இந்தக் காரணத்திற்காகதான், "தலை சாய்த்து, அவர் ஆவியை ஒப்படைத்தார்" (வச. 30).
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, மகதலா மரியா, தோட்டக்காரரைச் சந்திப்பதாக நினைத்ததில் முற்றிலும் தவறு இருக்கவில்லை! உண்மையில், அவர் மீண்டும் தனது சொந்த பெயரைக் கேட்டு, புதிய மனிதரிடமிருந்து தனது சொந்தப் பணியைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. யோவான் எழுதிய திருவெளிப்பாட்டு நூலில், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (திவெ 21:5) என்ற இறைவார்த்தை இதனை எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது.
“மனிதர் தோட்டத்தின் பாதுகாவலராக இல்லாவிட்டால், அவர் அதை அழிப்பவராக மாறுகிறார் என்பதை ஆழ்நிலை அருள்சிந்தனையின் பார்வையின் அவசரத் தேவை” என்று முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் எழுதிய 'இறைவா உமக்கே!' புகழ்! (Laudato si’) என்ற திருத்தூது மடலில் சுட்டிக் காட்டியுள்ளார். ஆகவே, கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது, இன்று அனைத்து மனிதகுலமும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதிலளிக்கிறது, அதாவது, சிலுவையில் அறையப்பட்டவர் ஒரு விதை போல வைக்கப்பட்ட தோட்டத்தில் தங்கி, உயர்ந்து அதிக கனிகளைக் கொடுப்பதன் வழியாக.
விண்ணுலகு தொலைந்து போகவில்லை, ஆனால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் ஒருங்கிணைந்த சூழலியலின் ஆன்மிகத்தின் அடித்தளமாகும். அது இல்லாமல் விசுவாசத்தின் வார்த்தைகள் எதார்த்தத்தில் ஈர்ப்பு இல்லாமல் இருக்கும். மேலும் அறிவியலின் வார்த்தைகள் இதயத்தைத் தொடாது வெறுமனே வெளியே இருக்கும். "சுற்றுச்சூழல் சீரழிவு, இயற்கை வளங்களின் குறைவு மற்றும் மாசுபாடு ஆகியவற்றால் எழும் பிரச்சினைகளுக்கு அவசர மற்றும் பகுதியளவு பதில்களின் தொடராக சுற்றுச்சூழல் கலாச்சாரத்தை குறைக்க முடியாது. அது ஒரு மாறுபட்ட பார்வை, ஒரு சிந்தனை, ஓர் அரசியல், ஒரு கல்வித் திட்டம், ஒரு வாழ்க்கை முறை மற்றும் ஓர் எதிர்ப்பிற்கு வடிவம் கொடுக்கும் ஆன்மிகமாக இருக்க வேண்டும்" (இறைவா உமக்கே புகழ் 111).
இந்தக் காரணத்திற்காகவே நாம் ஒரு சுற்றுச்சூழல் மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறோம், இதை கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பின்பற்றுவது அவர்களிடமிருந்து கோரும் போக்கின் மாற்றத்திலிருந்து பிரிக்க முடியாது. அந்த உயிர்ப்பு நாள் காலையில் மரியா திரும்பி வருவது என்பது, மனமாற்றத்திற்குப் பிறகு மனமாற்றத்தின் வழியாக மட்டுமே நாம் இந்தக் கண்ணீர் பள்ளத்தாக்கிலிருந்து புதிய எருசலேமுக்கு செல்கிறோம் என்பதன் அடையாளமாக அமைகின்றது
இதயத்தில் தொடங்கும் ஆன்மிக ரீதியான இந்தப் பகுதி, வரலாற்றை மாற்றுகிறது, நம்மைப் பொதுவெளியில் ஈடுபடுத்துகிறது, மேலும் மேய்ப்பராகிய ஆட்டுக்குட்டியின் பெயராலும் வலிமையாலும் ஓநாய்களின் பேராசையிலிருந்து மக்களையும் உயிரினங்களையும் பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்புணர்வைச் செயல்படுத்துகிறது.
இவ்வாறு, இன்று திருஅவையின் மகன்களும் மகள்களும் இலட்சக் கணக்கான இளைஞர்களையும், ஏழைகளின் மற்றும் பூமியின் கூக்குரலைக் கேட்டு, அதனால் தங்கள் இதயங்கள் மாற்றம்பெற அனுமதித்த நல்லெண்ணமுள்ள பிற ஆண்களையும் பெண்களையும் சந்திக்க முடியும். படைப்புடனான நேரடி உறவின் மூலம், பல பிரிவுகளுக்கு அப்பால் தங்களை வழிநடத்தும் ஒரு புதிய இணக்கத்தை பலர் விரும்புகிறார்கள்.
மறுபுறம், “இன்னும் "வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது" (திபா 19:1-4) என்று திருப்பாடலில் வாசிக்கின்றோம்.
குரல் இல்லாதவர்களின் குரலைக் கேட்கும் திறனை தூய ஆவியார் நமக்கு வழங்குவாராக! அப்போது நம் கண்கள் இன்னும் காணாததை நாம் காண்போம். அதாவது, நமது சொந்தப் பணிகளை முடிப்பதன் வழியாக, நம்மிடமிருந்து மறைந்திருக்கும் அந்தத் தோட்டத்தை அல்லது விண்ணுலகை நாம் இறுதியில் காண்போம்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
