திருஅவையின் ஒன்றிப்பின் அடையாளமாக பாடகர் குழுக்கள் அழைக்கப்படுகின்றன.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இசை, குறிப்பாகப் பாடல் என்பது அன்பு மற்றும் பக்தியின் வெளிப்பாடாகும் என்றும், இது ஆழமாக நமது உணர்வுகளை வெளிப்படுத்தவும், தெய்வீகத்துடன் இணையவும் நம்மை அனுமதிக்கிறது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 23, இஞ்ஞாயிறன்று, கிறிஸ்து அரசரின் பெருவிழாவில் பாடகர் குழுக்களின் யூபிலியைக் கொண்டாடிய திருத்தந்தை, திருஅவைக்குள் அன்பு, ஒன்றிப்பு மற்றும் ஒன்றிணைந்த பயணத்தின் பணியாக ஊழியத்தை மீண்டும் கண்டுபிடிக்க பாடகர்களையும் இசைக்கலைஞர்களையும் அழைத்தார்.
இறைவனை நோக்கிப் பாடுவதை அன்பின் செயல் என்று புனித அகுஸ்தினார் விவரித்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இது முழு திருஅவைக்கும் ஒன்றாக கடவுளைப் புகழ்வதற்கான அழைப்பாகவும் செயல்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
ஒரு பாடகர் குழுவில் பாடுவது என்பது ஒரு கூட்டுச் செயலாகும் என்றும், இது ஒன்றிப்பையும் வழிபாட்டில் பங்கேற்பையும் வளர்க்கிறது என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை, பாடகர்கள் தங்கள் பணியில் உண்மையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களின் ஆன்மிக வாழ்க்கை அவர்களுடைய சேவையின் அருளை வெளிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, பாடகர் குழுக்கள் பணிவுடன் இருக்கவும், மிகைப்பட்ட நடத்தைப் பண்பினைத் தவிர்க்கவும், முழு விசுவாசிகளின் கூட்டத்தையும் வழிபாட்டில் ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தவும் ஊக்குவித்த திருத்தந்தை, திருஅவையின் இறைவேண்டலின் உண்மையான வெளிப்பாடாக தங்கள் இசையை மாற்றவும், நல்லிணக்கம் மற்றும் அழகின் கருவிகளாக விளங்கிடவும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பாடகர்களின் பாதுகாவலியாம் புனித சிசிலியாவின் பரிந்துரைக்கான இறைவேண்டலை எழுப்பிய திருத்தந்தை, இறை இல்லமாம் விண்ணுலகை நோக்கி அவர்கள் பயணிக்கும்போது மகிழ்ச்சியுடன் தொடர்ந்து பாடுவதற்கான அழைப்பொன்றையும் விடுத்து தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
