திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

இலாத்தரன் பல்கலைக் கழகம் தனித்துவமானது!

"பல்கலைக்கழகம் ஒன்றிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் மீதான மரியாதையின் அடையாளமாக விளங்கிட வேண்டும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"உண்மையில், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் படிப்பு, ஆராய்ச்சி, உருவாக்கம், உறவுகள் மற்றும் அது அமைந்துள்ள எதார்த்தத்துடன் ஈடுபாடு கொண்ட ஓர் இடமாகத் திகழ்கிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 14, வெள்ளிக்கிழமையன்று, பாப்பிறை இலாத்தரன் பல்கலைக் கழகத்தின் கல்வியாண்டின் தொடக்க விழாவிற்கு வழங்கியுள்ள உரையொன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை குறிப்பாக, திருப்பீடத்தால் நிறுவப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட திருஅவைசார் மற்றும் பாப்பிறை பல்கலைக்கழகங்கள், விசுவாசத்தின் தேவையான கலாச்சார ஒத்துணர்வு வளர்க்கப்படும் சமூகங்களாக உள்ளன என்றும், அவை அறிவின் பிற பிரிவுகளுடன் திறந்த உரையாடல் மூலம், இயேசு கிறிஸ்துவில் அதன் முதன்மையான மற்றும் முடிவற்ற நிலையின் மூலத்தைக் காண்கின்றன என்றும் தெரிவித்தார்.

இன்று பாப்பிறை இலாத்தரன் பல்கலைக் கழகத்தின் 253-வது கல்வியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று உரைத்த திருத்தந்தை, அதன் நீண்ட வரலாற்றை நாம் போற்றும் வேளையில், திருஅவைக்குப் பணியாற்றுவதில் இந்த நிறுவனத்தின் எதிர்காலப் பணியை எதிர்நோக்குகிறோம் என்றும் மொழிந்தார்.

இலாத்தரன் பல்கலைக் கழகம் தனித்துவமானது, திருத்தந்தை மற்றும் வத்திக்கான் தலைமை அலுவலகத்துடன் அது ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக இறையியல், தத்துவம், திருஅவைச் சட்டம் மற்றும் குடிமைச் சட்டம் ஆகியவற்றின் வழியாக, நம்பிக்கை உலகத்துடன் ஈடுபடும் ஓர் இடத்தை வழங்குவதே இதன் நோக்கமாக உள்ளது என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் இந்தப் பல்கலைக்கழகம் அமைதி ஆய்வுகள் மற்றும் சூழலியலிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், மனிதநேயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய நீதி போன்ற சமகாலப் பிரச்சினைகளைக் கையாள்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

அறிவியல் ரீதியான தீவிரம், கல்விசார் சிறப்பு, உடன்பிறந்த உறவு, உரையாடல் மற்றும் அனைத்து மக்களுக்கும் மரியாதை செலுத்தும் கலாச்சாரத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு தான் அவர்களைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறிய திருத்தந்தை, அதிகரித்து வரும் தனிநபர்வாத உலகில், பல்கலைக்கழகம் ஒன்றிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் மீதான மரியாதையின் அடையாளமாக விளங்கிட வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

உண்மையைத் தேடும் மற்றும் பொது நன்மைக்காக பணியாற்றும் அர்ப்பணிப்புள்ள அறிஞர்களை நீங்கள் தொடர்ந்து உருவாக்குவீர்களாக என்று அவர்களை வாழ்த்திய திருத்தந்தை, வரும் கல்வி ஆண்டில் உங்களின் வெற்றிக்கும் வழிகாட்டுதலுக்கும் நான் இறைவேண்டல் செய்கிறேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 நவம்பர் 2025, 14:27