புலம்பெயர்ந்தோரின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும்!

காஸ்தல் கந்தோல்போவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இடம்பெயர்வு, உக்ரைன் போர், நைஜீரியாவின் தற்போதைய நிலைமை மற்றும் தான் மேற்கொள்ளவிருக்கும் எதிர்காலத் திருப்பயணங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புலம்பெயர்ந்தோரின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்க ஆயர்களின் அறிக்கையை தான் ஆதரிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

நவம்பர் 18, இத்திங்களன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானத்துடனும் மாண்புடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் போர்

உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை என்றும், அங்கே  மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, போரை முடிவுக்குக் கொண்டுவர போர் நிறுத்தம் மற்றும் உரையாடல் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்க இடம்பெயர்வு கொள்கை

புலம்பெயர்ந்தோரை இன்னும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் அண்மையில் கூறியதை ஆமோதித்த திருத்தந்தை, கத்தோலிக்கர்களும் நல்லெண்ணமுள்ள மக்களும் புலம்பெயர்ந்தோரை மாண்புடன் நடத்த வேண்டும் என்ற ஆயர்களின் அழைப்பிற்குச் செவிமடுக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தார்.

எல்லைகளைக் கட்டுப்படுத்தும் உரிமை நாடுகளுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்திய அதேவேளை, நீண்டகாலமாக ஆவணமின்றி குடியிருப்போரைத் தவறாக நடத்துவதை விமர்சித்த திருத்தந்தை, குறிப்பாக, நாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்து வரும் மக்களை அவமரியாதையாக நடத்துவது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.

நைஜீரியாவில் பயங்கரவாதம்

நைஜீரியாவில் இடம்பெற்று வரும் வன்முறையைக் கண்டித்த திருத்தந்தை, இது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட இரு சமூகத்தினரையும் பாதிப்பதாக கூறியதுடன், வன்முறையை போர் பொருளாதாரம் மற்றும் நிலத்திற்கான போட்டியுடன் (இடங்களைக் கைபற்றும்) இணைத்து, மதச் சுதந்திரம் மற்றும் அமைதியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

எதிர்காலப் பயணத் திட்டங்கள்

தான் ஒரு மறைப்பணியாளாராகப் பணியாற்றிய பெரு உட்பட இலத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கான சாத்தியமான எதிர்காலப் பயணத்திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை,  திட்டமிடல் சவாலானது என்றாலும், பயணம் செய்வதை தாம் விரும்புவதாகவும், அடுத்த ஆண்டுக்கான பயணங்களைத் திட்டமிடத் தொடங்குவதாகவும் அவர் கூறினார்.

தனிப்பட்ட ஓய்வு 

காஸ்தல் கந்தோல்போவில் அவரது ஓய்வு நாள் குறித்து கேட்டபோது, ​​வேலைகளுக்கு மத்தியில் ஓய்வு மிகவும் அவசியம் என்றும், உடல் மற்றும் ஆன்மா இரண்டையும் பராமரிக்க வேண்டியதன் தேவை உள்ளது என்பதையும் அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.

ஆயர் இரஃபேல் சோர்னோசா வழக்கு

1990-களில் பாலியல் முறைகேடுகள் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆயர் இரஃபேல் சோர்னோசா (Rafael Zornoza) பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை, விசாரணை நடந்து வருவதாகவும், இவ்விசாரணையில் திருஅவை தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் உறுதியளித்தார்.

சட்டச் செயல்முறையை மதிப்பதன் முக்கியத்துவத்தையும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிப்பதில் ஆதரவளிப்பதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 நவம்பர் 2025, 15:24