மரியாவின் பணியாளர்கள் சபையினருடன் திருத்தந்தை மரியாவின் பணியாளர்கள் சபையினருடன் திருத்தந்தை   (ANSA)

நட்பு மற்றும் அமைதியைத் தாங்குபவர்களாக இருங்கள் - திருத்தந்தை

மரியாவின் பணியாளர்கள் சபையினருடைய பாரம்பரியத்தின் மூன்று தூண்களாக விளங்கும், உடன்பிறந்த உறவு, சேவை மற்றும் மரியன்னை ஆன்மிகம் குறித்த சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நற்செய்தியின்படி வாழ்க்கை என்பது கடவுள் மீதும் மனிதர்மீதும் ஒரு பேரார்வத்தை ஏற்படுத்துகிறது என்றும், இது விண்ணுலகையும் மண்ணுலகையும் மிகை ஆர்வமுடன் அன்புகூர்ந்திட வழிவகுக்கிறது" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 24, இத்திங்களன்று, மரியாவின் பணியாளர்கள் சபையினரை அவர்தம் 215-வது பொதுப்பேரவையை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, கடவுள் மீதும் மற்றவர்கள் மீதும் உள்ள அன்பை ஆழப்படுத்துவதன் வழியாக தங்கள் பணியைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்தினார்.

கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள உதவும் நற்செய்தி, புனித அகுஸ்தினாரின் வாழ்வு, மற்றும் அவர்களின் ஆன்மிக பாரம்பரியத்திலிருந்து வலிமையைப் பெற அவர்களை ஊக்குவித்த திருத்தந்தை, ஏழைகளின் அழுகைக்குச் செவிசாய்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு வலியுறுத்தினார்.

அவர்களின் பாரம்பரியத்தின் மூன்று  தூண்களாக விளங்கும், உடன்பிறந்த உறவு, சேவை மற்றும் மரியன்னை ஆன்மிகம் குறித்த சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. 

கிறிஸ்துவில் ஒன்றுபட்ட நண்பர்கள் குழுவிலிருந்து அவர்களின் சபை பிறந்ததால், மோதல்கள், சமத்துவமின்மை அல்லது கலாச்சார மற்றும் மத வேறுபாடுகளால் பிரிவினைக்கு உள்ளான இடங்களுக்கு நட்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சிறப்பு அழைத்தல் அவர்களுக்கு இருப்பதாக எடுத்துக்காட்டினார்.

ஏழைகள், புலம்பெயர்ந்தோர், கைதிகள் மற்றும் நோயாளர்கள் போன்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பணியாற்றவும், படைப்பு மற்றும் வலுகுறைந்த மக்களைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த சூழலியலை தொடர்ந்து ஊக்குவிக்கவும், நற்செய்தியை ஆர்வத்துடன் வாழ்ந்து காட்டவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, துன்பப்படுபவர்களுடன் எப்படி உண்மையாக உடன் நிற்பது என்பதைக் கற்றுக்கொடுத்த திருத்தந்தை, ஆறுதல், உறவு ஒன்றிப்பு மற்றும் இரக்கத்தை அளிக்கும் அன்னை மரியாவிடம் பக்தியை வளர்க்கும்படி அவர்களை ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 நவம்பர் 2025, 12:30