இறையாட்சி ஏழைகளுக்கு உரியது! - திருத்தந்தை

நவம்பர் 16, ஞாயிறன்று, சிறப்பிக்கப்பட்ட உலக வறியோர் நாள் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், ஏழைகளுடன், குறிப்பாக துன்பங்கள் மற்றும் துயரங்களின் காலங்களில் ஒன்றித்து நிற்க அழைக்கும் திருஅவையின் வேண்டுகோளை மையமாகக் கொண்டு தனது மறையுரைச் சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூகத்திலும் துன்புறுத்தல்கள், துன்பங்கள், போராட்டங்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில், கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை. அவர் நமக்குப் பக்கபலமாக இருப்பவராகத் தன்னை வெளிப்படுத்துகிறார்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 16, ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட, உலக வறியோர் நாளை முன்னிட்டு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, குழந்தைகள், கைவிடப்பட்டோர், அந்நியர்கள் மற்றும் கைம்பெண்களின் பக்கம் எப்போதும் இருக்கும் கடவுளின் கதையை விவரிக்கும் பொன் நூலால் நெய்யப்பட்டுள்ளது திருவிவிலியம் என்றும் எடுத்துக்காட்டினார்.

இறையாட்சி ஏழைகளுக்கு உரியது

இன்றைய வழிபாட்டு வாசகங்களைப் பற்றி, குறிப்பாக மலாக்கியாவின் இறைவாக்குரைத்தலையும், இயேசுவின் போதனைகளையும் ஒப்புமைப்படுத்தி "ஆண்டவரின் நாள்" என்பது எதிர்கால நிகழ்வு மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவில் வெளிப்படும் இறையாட்சியின் வருகையில் நிகழ்கால எதார்த்தம் என்பதை விசுவாசிகளுக்கு வலியுறுத்தினார்.

இந்த இறையாட்சி என்பது, குறிப்பாக ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது என்றும், அவர்கள் கடவுளிடமிருந்து நீதியையும் ஆறுதலையும் பெறுவார்கள் என்றும் மொழிந்தார்.

வறுமை அனைவருக்கும் ஒரு சவால்

வறுமை கிறிஸ்தவர்களுக்குச் சவாலாக இருக்கும் அதேவேளையில், அது சமூகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களுக்கும் சவாலாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார் திருத்தந்தை.

ஏழைகளுக்கு வரவேற்பு மற்றும் நீதி வழங்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற திருஅவையின் பணியை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இந்த நோக்கத்தை வாழ்ந்து காட்டவும், பொருள் சார்ந்த வறுமையைக் கடந்து ஆன்மிக மற்றும் தார்மீகம் சார்ந்த வறுமையை நிவர்த்தி செய்யவும், குறிப்பாக இளையோரிடையே வலியுறுத்தினார்.

கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் செவிமடுத்து, அக்கறை காட்டும் கலாச்சாரத்தை வளர்ப்பதன் வழியாக உதவியின்மை மற்றும் தனிமையின் சுவர்களை உடைக்க வேண்டும் என்று விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு தார்மீக மற்றும் ஆன்மிகப் பிரச்சினையும் கூட என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, உலகின் அரசியல் மற்றும் சமூக சவால்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

நீதியின் வழியாக மட்டுமே அமைதி சாத்தியம்

நீதியின் வழியாக மட்டுமே உண்மையான அமைதியை அடைய முடியும் என்பதால், ஏழைகளின் அழுகைக்குச் செவிமடுக்குமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஏழைகளுக்குப் பணியாற்றுவதன் வழியாக, கிறிஸ்துவின் அன்பைக் காண்பதில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட பிறரன்புப் பணியாளர்கள், மற்றும் தன்னார்வலர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

விசுவாசிகள் கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து, தனிமையில் அல்ல, மற்றவர்களுடன் ஒன்றிப்புடன்  வாழவும், அனைவருடனும் உடன்பிறந்த உறவையும், மாண்பையும் வளர்க்கவும் அறிவுறுத்தினார் திருத்தந்தை,

அன்னை மரியாவின் பாடலால் ஈர்க்கப்பெறுவோம்

இல்லமற்றவர்களின் பாதுகாவலரான பெனடிக்ட் ஜோசப் லாப்ரே போன்ற புனிதர்களின் முன்மாதிரியைப் பின்பற்றவும், ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு கடவுள் அளிக்கும் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொள்ள வைக்கும் அன்னை கன்னி மரியாவின் பாடலால் (காண்க. லூக் 1:46-56) ஈர்க்கப்படவும் விசுவாசிகளை ஊக்குவித்தார் திருத்தந்தை.

இறுதியாக, பணிவு, சேவை மற்றும் அன்பின் அடையாளமாக விளங்கும் வாழ்க்கை முறையைத் தழுவி, தங்கள் செயல்களிலும் உறவுகளிலும் கடவுளின் இறையாட்சியைப் பிரதிபலிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டு தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 நவம்பர் 2025, 12:33