நாம் படைப்பின் பாதுகாவலர்கள், அதன் எதிராளர்கள் அல்ல!

"கடவுளின் படைப்பை பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அது போதாது என்றும், உறுதியான நடவடிக்கைகள் தேவை" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாம் படைப்பின் பாதுகாவலர்கள், அதன் அழிவுக்குக் காரணமாகும் எதிராளர்கள் அல்ல என்றும், கடவுளின் படைப்பின் நிர்வாகிகளாக, அவர் நம்மிடம் ஒப்படைத்த இந்த உயரியக் கொடையைப் பாதுகாக்க, விசுவாசத்துடனும் இறைவாக்குடனும் விரைவாகச் செயல்பட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பிரேசிலில் நடைபெறும் COP30 எனப்படும் காலநிலை குறித்த மாநாட்டில் பங்கேற்கும் உலகளாவிய தெற்கு ஆயர்கள் மற்றும் கர்தினால்களுக்கு நவம்பர் 17, இத்திங்களன்று அனுப்பியுள்ள காணொளிச் செய்தியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, ஒன்றிப்பின் அவசியத்தையும் வார்த்தைகளை விட செயல்களையும் தேர்வுசெய்திடல் வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

கடவுளின் படைப்பை பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அது போதாது என்றும், உறுதியான நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை. காலநிலை நெருக்கடியின் அவசரத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

வெள்ளம், வறட்சி, புயல்கள் மற்றும் தொடர்ச்சியான வெப்பநிலை காரணமாக, படைப்பு நம்மை நோக்கிக் கூக்குரலிடுகிறது என்று  சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, காலநிலை மாற்றம் ஏற்கனவே வலுகுறைந்த மக்களை மேலும் மேலும் பாதித்து வருகிறது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

உலக வெப்பநிலையை 1.5°C க்கும் குறைவாக வைத்திருக்க விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, மக்களையும் இப்புவியையும் பாதுகாப்பதற்கான முக்கிய கருவியாக அமைந்துள்ள பாரிஸ் ஒப்பந்தத்தை தான் ஆதரிப்பதாகவும் உரைத்துள்ளார்.

இருப்பினும், இப்புவியைப் பாதுகாப்பதில் தோல்வி என்பது ஒப்பந்தத்தில் இல்லை, அரசியல் விருப்பமின்மையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, உண்மையான தலைமை என்பது சேவை மற்றும் வலுவான காலநிலை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் அடங்கியுள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இறுதியாக, பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை ஒத்துழைப்புக்கு உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, மனிதகுலம் என்பது படைப்பின் பாதுகாவலர்கள் தானே தவிர அதனை அழித்தொழிக்கும் அதன் எதிராளர்கள் அல்ல என்றும்  மொழிந்து தனது காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 நவம்பர் 2025, 14:11