ஏழைகளின் சிறிய சகோதரிகள் இல்லத்தில் திருத்தந்தை

“முதியவர்களுக்குப் பணியாற்றுவது எளிதானது அல்ல, ஏனெனில் இதற்கு மிகுந்த பொறுமையும் இறைவேண்டலும் தேவை” - திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

நவம்பர் 28, வெள்ளியன்று, இஸ்தான்புல்லில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகள் இல்லத்திற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சென்று அங்குள்ள அருள்சகோதரிகளுக்கு வழங்கிய அருளுரை

அன்பு  நிறைந்த சகோதரர் சகோதரிகளே,

உங்களுடைய வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக உங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் என்பது இந்த இல்லத்திற்கு உண்மையாகவே கடவுள் வழங்கியுள்ள ஒரு கொடை.மேலும் இந்தப் பலன் ஏழைகளின் சிறிய சகோதரிகள், பணியாளர்கள், கொடையாளர்கள் மற்றும் அனைவராலும் உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகக் கொண்டு வரப்படுகிறது.

இந்நேரத்தில் உங்களுடன் நான் இரண்டு சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சகோதரிகளாக உடன் பயணிக்க அழைப்பு

முதலாவது, "ஏழைகளின் சிறிய சகோதரிகள்" என்ற உங்கள் பெயரே முதலில் ஈர்ப்புடையதாக அமைந்துள்ளது என்பதால் உங்கள் பெயரால் ஈர்க்கப்பட்டது. இது ஓர் அழகான பெயர் என நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. ஆம்! ஆண்டவர் உங்களை ஏழைகளுக்கு உதவி செய்யவோ அல்லது ஆதரவு அளிக்கவோ மட்டுமல்லாமல், அவர்களுக்குச் சகோதரிகளாக” இருக்கவும் அழைத்துள்ளார்.

இயேசுவை இறைத்தந்தை அனுப்பியது நமக்கு உதவிபுரியவும், பணியாற்றவும் மட்டுமல்ல, நாம்  சகோதரராகவும் இருக்க வேண்டும் என்பதால், நீங்கள் இயேசுவைப் போல இருக்க வேண்டும், கிறிஸ்தவ அன்பின் இரகசியம் என்னவென்றால், நாம் மற்றவர்களுக்காக இருக்கிறோம் என்று சொல்வதற்கு  முன்பு, உடன்பிறந்த உறவை அடிப்படையாகக் கொண்ட ஒரு கூட்டுப்பொறுப்புணர்வு உள்ளவர்களாக நாம்  மற்றவர்களுடன் இருக்க வேண்டும்.

முதியவர்கள் நம் மக்களின் ஞானம்

இரண்டாவது இவ்வில்லத்தில் வாழும் முதியவர்களைப் பற்றி சிந்திக்க விருப்புகின்றேன். "முதியவர்கள்" என்ற இந்த வார்த்தை இன்று அதன் உண்மையான அர்த்தத்தை இழக்கும் ஆபத்தில் உள்ளது. 

பல சமூக சூழல்களில், செயல்திறன் மற்றும் பொருள்முதல்வாதம் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில், முதியோர்களுக்கான மரியாதை உணர்வு இழக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, திருமறைநூல்களும் நல்ல மரபுகளும் நமக்குக் கற்பிக்கின்றன. முன்னாள்  திருத்தந்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியதுபோல, முதியவர்கள் மக்களின் ஞானமாகவும், அவர்களின் பேரக்குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு கருவூலமாகவும் திகழ்கிறார்கள்.

எனவே, உடன்பிறந்த உறவின் பெயரால் மக்களை வரவேற்கும், குறிப்பாக வயதானவர்களை வரவேற்கும் இந்த இல்லத்திற்கு எனது சிறப்பான நன்றிகள். முதியவர்களுக்குப் பணியாற்றுவது எளிதானது அல்ல, ஏனெனில் இதற்கு மிகுந்த பொறுமையும் இறைவேண்டலும் தேவை என்பதை நாம் அறிவோம். எனவே, இப்போது, ஆண்டவர் உங்களுக்குத் துணையாக இருந்து உங்களை வழிநடத்தும்படி  நாம் இறைவேண்டல் செய்வோம். உங்கள் அனைவர்மீதும் இறை ஆசீரை இறைஞ்சுகிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 நவம்பர் 2025, 14:44