திரைப்படம் என்பது ஓர் ஆன்மிகக் கலையாக இருக்க வேண்டும்

“திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற கலாச்சார வசதிகள், நமது சமூகங்களின் துடிப்புமிகு இதயங்களாக இருக்கின்றன, ஏனெனில் அவை அவர்களை மேலும் மனிதர்களாக மாற்றுவதற்கு பங்களிக்கின்றன” : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திரைப்படம் என்பது வெறும் திரையையும் தாண்டி அதிகமான செய்திகளைச் சொல்லக்கூடியது என்றும், அது ஆசைகள், நினைவுகள் மற்றும் கேள்விகளின் சந்திப்பாகும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 15, சனிக்கிழமையன்று, உலகத் திரைப்படத் துறையின் நிபுணர்களின் குழு ஒன்றை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஆழமான மனித அனுபவங்களை ஊக்குவிக்கவும் வெளிப்படுத்தவும் திரைப்படம் வலிமையைக் கொண்டுள்ளது என்றும் உரைத்தார்.

திரைப்படம் என்பது பொழுதுபோக்கு மற்றும் ஆழமான ஆன்மிகச் சிந்தனைகளை இணைக்கும் ஒரு கலை வடிவமாக எடுத்துக்காட்டிய திருத்தந்தை, தங்களின் சொந்த வாழ்க்கையையும் மனித நிலையின் சிக்கல்களையும் ஆராயுமாறு அவர்களை ஊக்குவித்தார்.

திரைத்துறைகள் போன்ற கலாச்சார இடங்களின் வீழ்ச்சி குறித்துக் கவலை தெரிவித்த திருத்தந்தை, இந்த மதிப்புமிக்க கலை வடிவத்திற்கு அதிக ஆதரவைக் கோரியதுடன், சமூகத்தையும் மனிதநேயத்தையும் வளர்ப்பதில் அதன் பங்கையும் வலியுறுத்தினார்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் அழகு, நம்பிக்கை மற்றும் உண்மையை வெளிக்கொண்டு வருவதில் தங்களின் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்றும், வன்முறை, வறுமை மற்றும் போர் போன்ற உலகின் சவால்களை எடுத்துக்காட்டுவதற்கு வெட்கப்படக்கூடாது என்றும் அவர்களிடம் தெரிவித்தார்.

திரைப்படம் என்பது ஆன்மிகக் கலையாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் ஆழமான அர்த்தங்களுடன் இணைவதற்கும் மனித அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் அது உதவ வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

திரைப்படத் தயாரிப்பின் ஒத்துழைப்பு இயல்பு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, இயக்குநர்கள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை சம்பந்தப்பட்ட அனைவரின் பங்களிப்பையும் தனது உரையில் பாராட்டி மகிழ்ந்தார்.

வாழ்க்கை மற்றும் கடவுளின் மறையுண்மைகளைத் தூண்டும், அமைதி, அழகு மற்றும் வியப்புணர்வைத் தூண்டும் திரைப்படங்களை உருவாக்குவதில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 நவம்பர் 2025, 11:49