2-வது உலக குழந்தைகள் தினக் கொடிக்கருகில் திருத்தந்தை 2-வது உலக குழந்தைகள் தினக் கொடிக்கருகில் திருத்தந்தை  (ANSA)

2026-இல் உரோமையில் இடம்பெறும் 2-வது உலக குழந்தைகள் தினம்!

2026-ஆம் ஆண்டு சிறப்பிக்கப்படவிருக்கிற உலக குழந்தைகள் தினவிழா, அவர்களின் குரல்களை மதிப்பதற்கும், அமைதி மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்குமான திருஅவையின் உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இரண்டாவது உலக குழந்தைகள் தினம் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை உரோமையில் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 19, இப்புதனன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்ட திருத்தந்தை, அதிகாரப்பூர்வ சின்னம் கொண்ட கொடி ஒன்றினை ஆசீர்வதித்து  அதில் கையெழுத்திட்டார். இந்தக் கொடியை காசாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் மஜ்த் பெர்னார்ட் மற்றும் அருள்பணியாளர் என்ஸோ ஃபோர்த்துநாத்தோ இருவரும் திருத்தந்தையிடம் வழங்கினர்.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத்துறையால் ஏற்பாடு செய்யப்படவிருக்கும் இந்த நிகழ்வு, குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இறைவேண்டல், கொண்டாட்டம் மற்றும் சந்திப்புக்காக ஒன்று திரட்டும் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த இத்துறையின் முன்னாள் தலைவர் கர்தினால் Kevin Farrell அவர்கள், "குழந்தைகள் அமைதியைக் கற்றுக்கொள்ளும் இயற்கையான இடமாக குழந்தைப் பருவத்தையும் குடும்பத்தையும் திருஅவை முன்னிலைப்படுத்த விரும்புகிறது" என்றும், “இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என நான் நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.

உலகளவில், குறிப்பாக மோதல் நிகழ்ந்து வரும் பகுதிகளில், பல குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறிப்பிட்டு, “இந்தக் குழந்தைகள் தின விழா ஒருவருக்கொருவர் செவிமடுப்பதையும் பகிர்வதையும் ஊக்குவிக்கும்” என்று என்ஸோ ஃபோர்த்தினாத்தோ அவர்கள் மேலும் கூறினார்.

இந்த இலச்சினையில் குழந்தைப் பருவம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஏழு கண்டங்களைக் குறிக்கும் ஏழு வண்ணமயமான கால்தடங்கள் இடம்பெற்றுள்ளன, இவை புனித பேதுரு பெருங்கோவில் குவிமாடத்தால் தழுவப்பட்டுள்ளன.

2024-ஆம் ஆண்டு இடம் பெற்ற முதல் உலக குழந்தைகள் தினம் 101 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1,00,000 குழந்தைகளை ஒன்றிணைத்தது. வரும் 2026-ஆம் ஆண்டு சிறப்பிக்கப்படவிருக்கிற இவ்விழா, குழந்தைகளின் குரல்களை மதிப்பதற்கும் அமைதி மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்குமான திருஅவையின் உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 நவம்பர் 2025, 11:56