திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

தொழில்நுட்பம் நமது கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ உதவும்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது இணையதள காணொளிச் செய்தியில், இளம் கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்துகாட்டவும், தங்கள் திறமைகளை திருஅவைக்கு வழங்கிடவும், நற்செய்தியின் மறைப்பணியாளர்களாகவும், இயேசுவில் அவர்கள் காணும் மகிழ்ச்சியையும் ஒளியையும் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செயற்கை நுண்ணறிவு, நமது காலத்தின் வரையறுக்கும் குறிக்கோளாக மாறிவிட்டது என்றும், பாதுகாப்பு என்பது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, கல்வி மற்றும் தனிப்பட்ட பொறுப்பு மூலம் நலம்தரும் முடிவுகளை எடுக்க மக்களுக்கு  வலிமை அளிப்பதும் ஆகும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.  

நவம்பர் 21, இவ்வெள்ளியன்று, அமெரிக்காவின் இண்டியானாபொலிஸில் இடம்பெற்ற தேசியக் கத்தோலிக்க இளைஞர் மாநாட்டில் (NCYC) கலந்து கொண்ட 15,000-க்கும் மேற்பட்ட இளையோரை காணொளி இணைப்பில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஒவ்வொரு கருவியும் நமது நம்பிக்கை மற்றும் அறிவுசார் வளர்ச்சிப் பயணத்தைத் தடுக்காமல் அவற்றின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று கூறினார்.

Katie Prejan McGrady அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வில், ஆறு இளம் கத்தோலிக்கர்கள், அருளடையாளங்கள் மற்றும் மனநலம் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் திருஅவையின் எதிர்காலம் வரையிலான தலைப்புகளில் திருத்தந்தையுடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

திருத்தந்தையின் முக்கியச் சிந்தனைகள்

நம்பிக்கை மற்றும் நல்லிணக்கம்:

நாம் பாவத்துடன் போராடும்போது கூட, கடவுளின் இரக்கத்தை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, "பாவம் ஒருபோதும் இறுதி வார்த்தையைக் கொண்டிருக்கவில்லை" என்பதை இளைஞர்களுக்கு நினைவூட்டிய அதேவேளை, ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக கிறிஸ்துவை எதிர்கொள்ள அவர்களை ஊக்குவித்தார்.

மனநலம்

சோகம் மற்றும் பெரும் உணர்வுகள் போன்ற போராட்டங்களுக்கு மத்தியில் இளையோர் இறைவேண்டலில் ஈடுபடவும், இயேசுவுடன் ஆழமான உறவை ஏற்படுத்திக்கொள்ள திறந்த மனம்கொண்டவர்களாக இருக்கவும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

பெற்றோர் அல்லது இளையோரை நல்வழிபடுத்தும் அமைச்சர்கள் போன்ற நம்பகத்தன்மை கொண்டவர்களின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, கடினமான காலங்களில் இயேசுவைத் தேட உதவும் உண்மையான நண்பர்களுக்காக இளைஞர்கள் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொழில்நுட்பம் மற்றும் இறைநம்பிக்கை

நிகழ்நிலை  இறைவேண்டல் அல்லது திருவிவிலிய வாசிப்புகள் வழியாக மக்களை இணைப்பதிலும் நம்பிக்கையை ஆதரிப்பதிலும் தொழில்நுட்பத்தின் நேர்மறையான பங்களிப்பை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, இருப்பினும், தொழில்நுட்பம் ஒருபோதும் உண்மை வாழ்க்கை உறவுகளுக்கோ அல்லது திருநற்கருணைக்கோ மாற்றாக அமைந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்தார்.

செயற்கை நுண்ணறிவின் சாத்தியமான ஆபத்துகளையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இளைஞர்கள் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்காமல் அதை அறிவார்ந்த வித்ததில் பயன்படுத்துமாறு அவர்களிடம் அறிவுறுத்தினார்.

திருஅவையின் எதிர்காலம்

"பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" என்று இயேசு உறுதியளித்தது போல, திருஅவையின் எதிர்காலம் பாதுகாப்பானது என்று இளம் கத்தோலிக்கர்களுக்கு உறுதியளித்தார் திருத்தந்தை.

திருஅவையில் அவர்கள் எப்போதும் செயல்திறனுடையவர்களாக இருக்கவும், திருமணம், குருத்துவம் அல்லது துறவு வாழ்வு எதுவாக இருந்தாலும் அவர்களின் இறையழைத்தலைத் தெளிந்து தேர்ந்து கொள்ளவும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஒன்றிப்பு மற்றும் அரசியல் பிளவுகளைத் தவிர்ப்பது

இளையோர் அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருக்கவும், தங்கள் இறைநம்பிக்கையை வரையறுக்க அரசியல் அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்திய திருத்தந்தை, திருஅவை எந்த அரசியல் கட்சியுடனும் அணிசேர்ந்திருக்கவில்லை, ஆனால் ஞானத்துடனும் அன்புடனும் செயல்பட நேர்மையுணர்வை (மனச்சான்றை) உருவாக்க உதவுகிறது என்று எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, இளம் கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்துகாட்டவும், தங்கள் திறமைகளை திருஅவைக்கு வழங்கிடவும், நற்செய்தியின் மறைப்பணியாளர்களாகவும், இயேசுவில் அவர்கள் காணும் மகிழ்ச்சியையும் ஒளியையும் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து தனது இணையதள காணொளிச் செய்தியை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 நவம்பர் 2025, 14:30