திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

அமைதி மற்றும் ஒன்றிப்புக்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்!

திருத்தந்தை அவர்களின் இந்தத் திருத்தூதுப் பயணம், துருக்கி மற்றும் லெபனோன் உள்ளிட்ட இரு நாடுகளிலும் உள்ள கிறிஸ்தவச் சமூகங்களை ஆதரிப்பதோடு, அமைதி மற்றும் ஒன்றிப்புக்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

நவம்பர் 27 முதல் டிசம்பர் 2, வரை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் துருக்கி மற்றும் லெபனோன் திருத்தூதுப் பயணம், கிறிஸ்தவ உரையாடல், மதங்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் தலத்திரு அவை சமூகங்களுக்கான ஆதரவை மையமாகக் கொண்டுள்ளது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

துருக்கியின் இஸ்னிக் நகரில் இடம்பெற்ற நீசேயா திருச்சங்கத்தின் 1700- வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் இந்தத் திருத்தூதுப் பயணம், அங்குள்ள சமய மற்றும் அரசியல் தலைவர்களுடனான உறவுகளை வலுப்படுத்தும் என்றும் அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திருத்தூதுப் பயணத்தின்போது  திருத்தந்தை, அங்காரா, இஸ்தான்புல் மற்றும் இஸ்னிக் ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று குறிப்பிட்டுள்ள  அச்செய்தித் தொடர்பகம், அந்நாட்டின் அரசுத் தலைவர், முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்களைச் சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்னிக்கில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கொண்டாட்டத்தில், திருத்தந்தையும், கான்ஸ்டான்டினோப்பிளின் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களும் நீசேயா திருச்சங்கத்தின் இந்த வரலாற்று நிகழ்வை  நினைவுகூருவார்கள் என்றும் உரைத்துள்ளது.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடான லெபனோனில் உள்ள பெய்ரூட் துறைமுகத்திற்குச் சென்று, அங்குக் கடந்த 2020 - ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவேண்டல் செய்வார் என்றும், கிறிஸ்தவச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் செய்தியாக, ப்கெர்கேயில் லெபனோன் இளையோருடன் கூட்டம் ஒன்று இடம்பெறும் என்றும் அச்செய்திக் குறிப்பு எடுத்துக்காட்டுகிறது.

திருத்தந்தை அவர்களின் இந்தத்  திருத்தூதுப் பயணம்,  துருக்கி மற்றும் லெபனோன் உள்ளிட்ட இரு நாடுகளிலும் உள்ள கிறிஸ்தவச் சமூகங்களை ஆதரிப்பதோடு, அமைதி மற்றும் ஒன்றிப்புக்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 நவம்பர் 2025, 15:02