லெபனோனே, நீதி மற்றும் உடன்பிறந்த உறவின் தாயகமாக இரு!

"உங்கள் துன்பங்களையும் நம்பிக்கைகளையும் என் இதயத்தில் சுமந்து செல்லும் அதே வேளையில், நீதியின் கதிரவனாகிய இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தால் இந்த மத்திய தரைக்கடலின் கிழக்குக் கரையோரப் பகுதி (Levant) எப்போதும் ஒளிரட்டும் என்று நான் இறைவேண்டல் செய்கிறேன்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமையன்று, பெய்ரூத்தின் கடற்கரையில் (Waterfont) இடம்பெற்ற திருப்பலியை தலைமைதாங்கி நடத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அதில் மறையுரை வழங்கினார்.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே!

நாம் மகிழ்ச்சியுடன் ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட இந்த உணர்வுமிக்க நாட்களின் முடிவில், கடவுளுடைய நன்மையின் பல கொடைகளுக்காகவும், நம்மிடையே அவரது பிரசன்னத்திற்காகவும், அவர் நமக்கு ஏராளமாக வழங்கும் வார்த்தைகளுக்காகவும், நாம் ஒன்றித்திருக்க அனுமதித்ததற்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இறைத்தந்தையைப் போற்றுவோம்

நாம் இப்போது நற்செய்தியில் கேட்டபடி, இயேசுவும் இறைத்தந்தைக்கு நன்றி செலுத்தும் வார்த்தைகளைக் கொண்டிருந்தார், மேலும் அவரை நோக்கி, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்" (லூக் 10:21) என்று இறைவேண்டல் செய்தார்.

இருப்பினும், இறைபுகழ்ச்சி எப்போதும் நமக்குள் இடம் பெறுவதில்லை. சில வேளைகளில், வாழ்க்கையின் போராட்டங்களால் பாரமடைந்து, நம்மைச் சுற்றியுள்ள பல பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுகையில், தீமையை எதிர்கொள்ளும் வலிமையின்மையால் முடங்கிப் போய், பல கடினமான சூழ்நிலைகளால் ஒடுக்கப்பட்ட நிலையில், இறைவனைப் புகழ்ந்து அவருக்கு நன்றி சொல்வதைக் காட்டிலும் புலம்புவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம்.

அன்பான லெபனோன்  மக்களே, எப்போதும் இறைபுகழ்ச்சி மற்றும் நன்றியுணர்வை வளர்த்துக் கொள்ள உங்களை அழைக்கிறேன். உங்கள் நிலத்தை இறைவன் அலங்கரித்த அரிய அழகைப் பெறுபவர்கள் நீங்கள். அதே நேரத்தில், தீமை அதன் பல்வேறு வடிவங்களில் எவ்வாறு இந்த மகத்துவத்தை மறைக்க முடியும் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறீர்கள்.

லெபனோன் ஓர் அழகுமிகுந்த நாடு

கடலை நோக்கிய இந்த அகலிடத்திலிருந்து, திருவிவிலியத்தில் பாடப்பட்டுள்ள லெபனோனின் அழகை நானும் சிந்திக்க முடிகிறது. "ஆண்டவரின் மரங்களுக்கு — லெபனோனில் அவர் நட்ட கேதுரு மரங்களுக்கு — நிறைய நீர் கிடைக்கின்றது" (திபா 104:16). இருப்பினும், இந்த அழகு வறுமை மற்றும் துன்பத்தால், உங்கள் வரலாற்றைக் குறிக்கும் காயங்கள். மறைக்கப்பட்டுள்ளது.  உங்கள் நாட்டின் அழகு, உங்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகள், பலவீனமான மற்றும் பெரும்பாலும் நிலையற்ற அரசியல் சூழல், மிகப்பெரும்  பொருளாதார நெருக்கடி மற்றும் பண்டைய அச்சங்களை மீண்டும் எழுப்பிய வன்முறை மற்றும் மோதல்களால் மறைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, மோதல் இடம்பெற்ற இடத்தில் இறைவேண்டல் செய்வதற்காக நான் துறைமுகத்திற்குச் சென்றேன்.

அத்தகைய சூழ்நிலையில், நன்றியுணர்வு எளிதில் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கிறது, இதயம் பாழ்பட்ட நிலையில் துதிப் பாடல்கள் இடம் பெறாது, நிச்சயமற்ற தன்மை மற்றும் குழப்பத்தால் நம்பிக்கை வறண்டு போகும். இருப்பினும், இரவின் மையத்தில் ஒளிரும் நம்பிக்கை என்னும் சிறிய விளக்குகளைக் கண்டுபிடிக்க ஆண்டவருடைய வார்த்தை நம்மை அழைக்கிறது, இரண்டும் நாம் நன்றியுணர்வு கொள்ளவும், இந்த நிலத்திற்காக ஒரு பொதுவான அர்ப்பணிப்புடன் வாழவும் நம்மைத் தூண்டுகிறது.

நாம் கேள்விப்பட்டபடி, இயேசு இறைத்தந்தைக்கு நன்றி செலுத்துவதற்கான காரணம் அவருடைய அசாதாரண செயல்களுக்காக அல்ல, மாறாக அவர் தனது மகத்துவத்தை குறிப்பாக மிகச் சிறியவர்களுக்கும், தாழ்மையானவர்களுக்கும், கவனத்தை ஈர்க்காதவர்களுக்கும், சிறியதாகவோ அல்லது ஒன்றுமில்லாததாகவோ கருதப்படுபவர்களுக்கும், குரல் இல்லாதவர்களுக்கும் வெளிப்படுத்துகிறார்.

இயேசு என்னும் தளிர்

இயேசு தொடங்கிவைக்க வரும் இறையாட்சி, உண்மையில், இறைவாக்கினர் எசாயா விவரித்த அதே பண்பால் குறிக்கப்படுகிறது: அது ஒரு தளிர், ஒரு மரத்தடியிலிருந்து முளைக்கும் ஒரு சிறிய கிளை (காண்க. எசா 11:1). மற்ற அனைத்தும் இறந்து கொண்டிருக்கும்போது மறுபிறப்பை உறுதியளிக்கும் நம்பிக்கையின் ஒரு சிறிய அடையாளம் இது. உண்மையில், மெசியாவின் வருகை ஒரு சிறிய தளிர் போல அறிவிக்கப்பட்டது, ஏனென்றால் அவரை மிகச் சிறியவர்களால் மட்டுமே அடையாளம் காண முடியும்.

இது நமக்கு ஓர் அறிகுறியாகவும் இருக்கிறது, இதனால் வேதனையான காலகட்டத்தின் மத்தியிலும் வெளிப்பட்டு வளரும் தளிரின் சிறிய தன்மையை அடையாளம் காணும் திறன் கொண்ட கண்கள் நமக்கு இருக்கலாம். இங்கேயும் இப்போதும் கூட, வரலாற்றின் இந்தக் காலத்தில், இரவில் ஒளிரும் சிறிய விளக்குகளையும், முளைக்கும் சிறிய தளிர்களையும், வறண்ட தோட்டத்தில் நடப்பட்ட சிறிய விதைகளையும் நாம் காணலாம்.

உங்கள் குடும்பங்களில் வேரூன்றி, கிறிஸ்தவப் பள்ளிகளால் வளர்க்கப்பட்ட உங்கள் உண்மையான மற்றும் நேராமையான நம்பிக்கையை நான் நினைக்கிறேன். மக்களின் கேள்விகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்ய பங்குத்தளங்கள், துறவு சபைகள் மற்றும் இயக்கங்களின் தொடர்ச்சியான பணியை நான் நினைக்கிறேன். பல சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் பல அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகளையும், சமூகத்தில் தொண்டு பணிகளுக்கும் நற்செய்தியை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் பொதுநிலையினரையும் நான் நினைக்கிறேன்.

இரவின் இருளைப் ஒளிரச் செய்யும் விளக்குகள்

இரவின் இருளைப் ஒளிரச் செய்யும் இந்த விளக்குகளுக்காகவும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் திறக்கும் இந்த சிறிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத தளிர்களுக்காகவும், இன்று நாம் இயேசுவுடன் சேர்ந்து "தந்தையே உம்மைப் போற்றுகிறேன்!" என்று கூறுகிறோம். நீர் எங்களுடன் இருப்பதாலும், எங்களைத் தடுமாற விடாததாலும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். அதேவேளையில், இந்த நன்றியுணர்வு ஓர் உள்நோக்கமாகவும், பொய்த்தோற்றமான ஆறுதலாகவும் இருந்துவிடக் கூடாது. அது நம்மை இதய மாற்றத்திற்கும், வாழ்க்கையின் மாற்றத்திற்கும், கடவுள் நம்மை நம்பிக்கையின் ஒளியிலும், எதிர்நோக்கின் வாக்குறுதியிலும், அன்பின் மகிழ்ச்சியிலும் வாழவே படைத்துள்ளார் என்பதை உணரவும் வழிவகுக்கும்.

இதன் விளைவாக, நாம் அனைவரும் இந்தத் தளிர்களை வளர்க்க, அதாவது, சோர்வடையாமல் இருக்கவும், வன்முறையின் தர்க்கத்திற்கும் பணத்தின் சிலை வழிபாட்டிற்கும் அடிபணியாமல் இருக்கவும், பரவும் தீமையை எதிர்கொண்டு நம்மை நாமே விட்டுக்கொடுக்காமல் இருக்கவும் அழைக்கப்படுகிறோம்.

ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும், மேலும் இந்த நிலம் அதன் முந்தைய மகிமைக்குத் திரும்புவதற்கு நாம் நமது முயற்சிகளை ஒன்றிணைக்க வேண்டும். நமது இதயங்களில் பகைமை உணர்வை அகற்றுவதே இதைச் செய்வதற்கான ஒரே வழி. நமது இன மற்றும் அரசியல் பிளவுகளின் கவசத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒருவருக்கொருவர் ஒப்புரவு செயல்களில் ஈடுபட்டு, நமது இதயங்களில் ஒன்றுபட்ட லெபனோனின் கனவை மீண்டும் எழுப்புவோம்.

லெபனோனில் சமத்துவ ஆட்சி மலரட்டும்

அமைதியும் நீதியும் ஆட்சி செய்யும் லெபனோன், அனைவரும் ஒருவரையொருவர் சகோதரர் சகோதரிகளாக அங்கீகரிக்கும் லெபனோன், இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் நிறைவேறக்கூடிய லெபனோன் "ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக் கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்" (எசா11:6)துலங்கட்டும். இதுதான் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கனவு; அமைதியின் கடவுள் உங்கள் கரங்களில் வைப்பது இதுதான். லெபனோன், எழுந்து நில்! நீதி மற்றும் உடன்பிறந்த உறவின் தாயகமாக இரு! மத்திய தரைக்கடலின் கிழக்குக் கரையோரப் பகுதி (Levant) முழுவதும் அமைதியின் தீர்க்கதரிசன அடையாளமாக இரு!

லெவண்ட் (Levant) எப்போதும் ஒளிரட்டும் 

சகோதரர் சகோதரிகளே, நானும், "தந்தையே! உம்மைப் புகழ்கிறேன்" என்ற இயேசுவின் வார்த்தைகளை மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.  இந்த நாள்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக ஆண்டவராம் இயேசுவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் துன்பங்களையும் நம்பிக்கைகளையும் என் இதயத்தில் சுமந்து செல்லும் அதேவேளையில், நீதியின் கதிரவனாகிய இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தால் இந்த மத்திய தரைக்கடலின் கிழக்குக் கரையோரப் பகுதி (Levant) எப்போதும் ஒளிரட்டும் என்று நான் இறைவேண்டல் செய்கிறேன். அதேபோல், கிறிஸ்துவின் அருளால், லெபனோன் ஏமாற்றமடையாத அந்த நம்பிக்கையில் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் இறைவேண்டல் செய்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 டிசம்பர் 2025, 14:13