உண்மையான அமைதி அகிம்சையால் அடையப்படுகிறது!

"மக்கள் அமைதியை அனுபவிக்கவில்லை, வளர்க்கவில்லை, பாதுகாக்கவில்லை என்றால், பகைமை வீட்டிலும் சமூகத்திலும் பரவிவிடும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உண்மையான அமைதி என்பது ஆயுதங்கள் அல்லது அச்சத்தின் வழியாக அடையப்படுவதில்லை, மாறாக அகிம்சை, உரையாடல், பணிவு மற்றும் நீதி மற்றும் மனித மாண்பிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு வழியாக அடையப்படுகிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 18, வியாழக்கிழமையன்று, வரும் புத்தாண்டு ஜனவரி முதல் நாளன்று சிறப்பிக்கப்படவிருக்கும் 59-வது உலக அமைதி நாளுக்காக வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, அமைதி இதயத்தில் தொடங்குகிறது, நாம் என்ன செய்கிறோம் என்பதில் வெளிப்படுகிறது, மேலும் அது வீட்டிலும் உலகிலும் நமது தேர்வுகளை வழிநடத்த வேண்டும் என்று மொழிந்துள்ளார்.

"உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக! ஆயுதமற்ற மற்றும் ஆயுதம் களையும் ஓர் அமைதியை நோக்கி" என்ற தலைப்பில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் திருத்தந்தை.

01. அமைதி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கொடை

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக! " என்ற இயேசுவின் வாழ்த்தை நினைவு கூர்ந்து தனது செய்தியைத் தொடங்கியுள்ள திருத்தந்தை, உண்மையான அமைதி என்பது மோதல்கள் இல்லாதது மட்டுமல்ல, இதயங்களை ஒளிரச் செய்து வன்முறையை வெல்லும் ஒரு மாற்று சக்தியாகும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இருள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியிலும் கூட அமைதி நிலவுகிறது என்றும், மேலும் அதற்கு வெளிப்படைத்தன்மை, விழிப்புணர்வு மற்றும் அதற்காக உழைத்தவர்களை நினைவுகூருதல் தேவை என்பதையும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

02. ஆயுதமற்ற அமைதி

உண்மையான கிறிஸ்தவ அமைதி இயேசுவின் வன்முறையற்ற முன்மாதிரியைப் பின்பற்றுகிறது என்றும், அது ஆயுதமற்றது, பணிவு மற்றும் விடாமுயற்சி கொண்டது என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அணு ஆயுதங்கள் உட்பட இராணுவ பலம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை நவீன காலத்தில் நம்பியிருப்பது அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் உறுதியற்றத்தன்மையை ஏற்படுத்தும் என்று விமர்சிக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, அதேவேளையில் கல்வி மற்றும் ஊடகத் திட்டங்கள் பெரும்பாலும் அமைதியை வளர்ப்பதற்குப் பதிலாக தற்காப்பு மனநிலையை ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்துள்ள திருத்தந்தை, தனிப்பட்ட முறையிலும் சமூகத்திலும் போரை நிராகரித்து அமைதியைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

03. ஆயுதங்களைக் களைந்த அமைதி

அமைதிக்கு அரசியல் உடன்பாடுகள் அல்லது ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, வெளிப்படைத்தன்மை, உரையாடல் மற்றும் பணிவு ஆகியவை தேவை என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, ஒருங்கிணைந்த ஆயுதக் குறைப்பு என்பது இதயங்களையும் மனதையும் புதுப்பித்தல், வன்முறை, தேசியவாதம் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்ப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் உரைத்துள்ளார்.

நம்பிக்கை, நீதி மற்றும் மன்னிப்பை வளர்ப்பதற்கு ஆன்மீக நடைமுறைகள், மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் சமூக முயற்சிகள் அவசியம் என்று கூறியுள்ள திருத்தந்தை, தனிப்பட்ட மற்றும் சமூகப் பொறுப்பு, வன்முறையற்ற பங்கேற்பு மற்றும் மறுசீரமைப்பு நீதி ஆகியவை சமூகங்களை மாற்றவும் மோதல்களைக் குறைக்கவும் உதவுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

04. நம்பிக்கை மற்றும் செயல்பாடு

அமைதி சாத்தியம் என்றும், அது தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் ஆர்வமுடனும் வளர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, ஆயுதங்கள் அமைதிக்கான கருவிகளால் மாற்றப்பட்டு, ஆயுதக் குறைப்பு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஓர் உலகத்திற்கு அழைப்பு விடுத்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 டிசம்பர் 2025, 11:33