எல்லா நிலையிலும் அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருங்கள்!

நவம்பர் 30, ஞாயிறன்று லெபோனின் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அரசுத்தலைவர் மாளிகையில் லெபனானுக்கான தனது திருத்தூதுப் பயணத்தின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை நம்பிக்கை, ஒப்புரவு மற்றும் அமைதியின் வலிமை குறித்த செய்தியாக இருந்தது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 30, ஞாயிறன்று, மாலை 06.00 மணிக்கு லெபனோனின் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அரசுத் தலைவர் மாளிகையில்  அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே,

லெபனோன் சிக்கலான மற்றும் சவாலான வரலாற்றைக் கொண்டிருந்தாலும் அமைதியை வளர்ப்பதில் அதன் மீள்தன்மை மற்றும் அதன் அதிகாரிகள், சிவில் சமூகம் மற்றும் நிறுவனங்களின் முக்கிய பங்கு குறித்து நான் பெரிதும் மகிழ்கின்றேன்.

01. அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்

இலட்சக்கணக்கான லெபனோனியர்கள் அமைதிக்காக  அமைந்த மனதுடன் உழைக்கும் அதே வேளையில், அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் ஒரு சிறப்புப் பங்கைக் கொண்டுள்ளனர். அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அமைதியை நிலைநிறுத்தவும், லெபனோனின் சிக்கலான சூழ்நிலைகளில் அமைதியை உருவாக்குபவர்களாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி சிந்திக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.

02. லெபனோனின் அடையாளம் மீள்திறன்

சோதனைகளை எதிர்கொள்ளும் லெபனோனின் நீடித்த வலிமை  மற்றும் மீள்தன்மையை நான் மனதார பாராட்டுகிறேன். பின்னடைவுகளுக்குப் பிறகு துணிவுடன் மீண்டும் எழும் அதனின் திறனைப் பற்றி நான் பெருமையடைகிறேன். இது அதன் மக்களை உண்மையான அமைதியை உருவாக்குபவர்களாக மாற்றும் ஒரு பண்பு.

சவால்கள் இருந்தபோதிலும், லெபனோனியர்கள் எப்போதும் தங்கள் நாட்டின் மீதான ஆழமான அன்பாலும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையாலும் தூண்டப்பட்டு, மீண்டும் தொடங்குவதற்கான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

03. நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பின் மொழி

லெபனோனில் காணப்படும் பன்முகத்தன்மையை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். ஒரு பொதுவான மொழியால் அதாவது, லெவண்டைன் அரபு மட்டுமல்ல, நம்பிக்கையின் மொழியால் ஒன்றுபட்ட ஒரு நாடு  இது.

பல்வேறு சமூகங்களிலிருந்து இணக்கமான, பல ஒலிகளைக் கொண்ட குரலை உருவாக்கக்கூடிய அமைதி என்ற பகிரப்பட்ட இலக்கின் பின்னால் ஒன்றுபட லெபனான் அதிகாரிகளை நான் ஊக்குவிக்கிறேன். லெபனோனின்  சமூகம், குறிப்பாக அதன் துடிப்பான இளைஞர்கள், ஒன்றுபட்ட எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

04. அமைதிக்கான பாதையாக ஒப்புரவு

நீடித்த அமைதிக்கு ஒப்புரவு தேவை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். இதில் தனிப்பட்ட மற்றும் கூட்டு வலிகளை (wounds) நிவர்த்தி செய்தல், காயம்பட்ட நினைவுகளை குணப்படுத்துதல் மற்றும் உரையாடலை வளர்ப்பது ஆகியவை அடங்கும்.

மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதுதான் உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.  மேலும் கடந்த கால மோதல்கள் மற்றும் அநீதிகளுக்கு அப்பால் நகர்ந்து சென்று, சமூகங்கள் ஒரு பொதுவான குறிக்கோளுடன் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் அமைதி வளரும்.

05. அமைதிக்கான விடாமுயற்சி மற்றும் தியாகம்

அமைதிக்கான பாதை கடினமாக இருந்தாலும், விடாமுயற்சி முக்கியம் என்பதை நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன். பல லெபனோன் இளைஞர்கள் வெளிநாடுகளில் சிறந்த வாய்ப்புகளைத் தேடுவதால், இடம்பெயர்வின் வலியை என்னால் உணரமுடிகிறது. ஆனால் உள்நாட்டில் தங்கி அமைதிக்காக உழைப்பதன் மதிப்பையும் வலியுறுத்த விரும்புகின்றேன். யாரும் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படக்கூடாது என்று திருஅவை விரும்புகிறது, மேலும் திரும்பி வர விரும்புவோர் பாதுகாப்பாக திரும்புவதை ஆதரிக்கிறது.

06. அமைதியைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கு

அமைதிக்கான செயல்பாட்டில் பெண்களின் அத்தியாவசிய பங்களிப்பு மிகவும் அவசியம். உறவுகளை வளர்ப்பதற்கும் வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் அவர்களின் தனித்துவமான திறன் அவர்களை அமைதியின் முக்கிய முகவர்களாக ஆக்குகிறது. லெபனோன் மற்றும் அதற்கு அப்பால் புதுப்பித்தலை வளர்க்க சமூக, அரசியல் மற்றும் மத வாழ்க்கையில் பெண்கள் அதிகம் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றேன்.

07. லெபனோனின் எதிர்காலத்திற்கான ஒரு தொலைநோக்கு பார்வை

இறுதியாக, லெபனோனின் கலாச்சார வளமையைப் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். அமைதியின் நல்லிணக்கத்தைக் குறிக்கும் இசையின் மீதான நாட்டின் அன்பிலிருந்து உத்வேகம் பெற வேண்டும்.

அமைதி என்பது வெறும் மனித முயற்சியின் விளைவு மட்டுமல்ல, அது கடவுளின் ஒரு கொடை. இது மக்களின் இதயங்களில் குடிகொண்டு தெய்வீக அன்பினால் வழிநடத்தப்படுகிறது.  இசை மக்களை மகிழ்ச்சியிலும் உறவிலும் ஒன்றிணைப்பது போல, அமைதி லெபனோனை ஒன்றிணைத்து, மக்கள் ஒன்றாக வாழும் விதத்தையும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தையும் மாற்றும்.

லெபனோன் மக்களின் தலைவர்கள் பொது நன்மைக்காக தங்கள் பணியைத் தொடரவும், கடவுள் ஆழமாக அன்புகூரும் இந்த நிலத்தில் அமைதியை வளர்க்கவும் ஊக்குவிக்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 டிசம்பர் 2025, 14:18