திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
டிசம்பர் 10, புதன்கிழமை, வத்திகானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. முன்னதாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், வத்திக்கான் வளாகம் முழுவதும் தனது திறந்த வாகனத்தில் வலம் வந்து அங்கு நிறைந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். அப்போது மகிழ்ச்சி பொங்க திருப்பயணிகள் அனைவரும் தங்கள் கரங்களைத் தட்டி திருத்தந்தையை வரவேற்றனர். சரியாக காலை 10 மணிக்கு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார். “இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு” என்ற யூபிலி ஆண்டு தலைப்பில் நான்காவது பிரிவாக, "கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் தற்போதைய உலகின் சவால்களும்" என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரை சிந்தனைகளை வழங்கி வருகிறார் திருத்தந்தை. இந்நாளில் "இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா" என்ற ஏழாவது துணைத்தலைப்பில், "நமது இறப்பு பற்றிய கேள்விக்கான இறுதி பதில்" என்ற தலைப்பில் திருப்பயணிகளுடன் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் லூக்கா நற்செய்தியிலிருந்து (லூக் 23:52–54) இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
நற்செய்தி வாசகம் (லூக் 23:52–54)
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். 53அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை. அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம்.
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே!
இறப்பின் மறைபொருள் என்பது எப்போதும் மனிதரில் ஆழமான கேள்விகளைக் கிளறி வருகிறது. உண்மையில், அது மிகவும் இயற்கையானதாகவும் அதேவேளையில், மிகவும் இயற்கைக்கு மாறான நிகழ்வாகவும் தோன்றுகிறது. இது இயற்கையானது, ஏனென்றால் புவியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இறக்கிறது. இது இயற்கைக்கு மாறானது, ஏனென்றால் நமக்காகவும் நாம் அன்புகூரும் மக்களுக்காகவும் நாம் உணரும் வாழ்க்கை மற்றும் நிலைவாழ்விற்கான ஆசை, இறப்பை ஒரு தண்டனையாக, ஒரு பொருளற்றதாகப் பார்க்க வைக்கிறது.
பல பழங்கால மக்கள், உயர்ந்த மறையுண்மையை நோக்கிச் செல்பவர்களுடன் சென்று அவர்களை நினைவுகூருவதற்காக, இறந்தவர்களின் வழிபாட்டுடன் இணைக்கப்பட்ட சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை உருவாக்கினர். இருப்பினும், இன்று நாம் ஒரு வித்தியாசமான போக்கைக் காண்கிறோம். இறப்பு என்பது ஒரு வகையான தடைசெய்யப்பட்ட நிகழ்வாகத் தெரிகிறது, தூரத்தில் வைத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு; நமது உணர்திறன் மற்றும் நிலையமைதியைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்க, மெல்லிய குரலில் பேச வேண்டிய ஒன்று. இந்தக் காரணத்தினால்தான், நமக்கு முன் சென்றவர்கள் உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கும் கல்லறைகளுக்குச் செல்வதைக் கூட நாம் பெரும்பாலும் தவிர்க்கிறோம்.
அப்படியானால், இறப்பு என்றால் என்ன? அது உண்மையிலேயே நம் வாழ்க்கையின் கடைசி வார்த்தையா? மனிதர் மட்டுமே இந்தக் கேள்வியைக் கேட்கிறார், ஏனென்றால் அவர் மட்டுமே இறக்க வேண்டும் என்பதை அறிவார். ஆனால் அதை அறிந்திருப்பது அவரை இறப்பிலிருந்து காப்பாற்றாது; உண்மையில், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், மற்ற எல்லா உயிரினங்களுடனும் ஒப்பிடும்போது அது அவரை பலுவாக்குகிறது. விலங்குகள் நிச்சயமாக துன்பப்படுகின்றன, இறப்பு நெருங்கும்போது அவை உணர்கின்றன, ஆனால் இறப்பு அவற்றின் விதியின் ஒரு பகுதி என்பதை அவை அறியாது. அவை வாழ்க்கையின் அர்த்தம், நோக்கம், விளைவு ஆகியவற்றைக் கேள்வி கேட்பதில்லை.
இதை உணர்ந்து, நாம் முரண்பாடான, மகிழ்ச்சியற்ற உயிரினங்கள் என்று ஒருவர் நினைக்கலாம் - நாம் இறப்பதால் மட்டுமல்ல, இந்த நிகழ்வு எப்படி அல்லது எப்போது நிகழும் என்று நமக்குத் தெரியாவிட்டாலும், அது நிகழும் என்பதில் நாம் உறுதியாக இருப்பதால் கூட. நாம் விழிப்புணர்வோடும் அதேநேரத்தில் வலிமையற்றவர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம். இங்கிருந்துதான் இறப்பு என்ற கேள்வியை அடக்குவது அல்லது அதிலிருந்து தப்பிப்பது அடிக்கடி நிகழ்கிறது.
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி தனது புகழ்பெற்ற படைப்பான "இறப்பிற்கான தயாரிப்பு" என்ற நூலில், இறப்பின் கற்பித்தல் மதிப்பைப் பிரதிபலிக்கிறார், அது எவ்வாறு வாழ்க்கையின் சிறந்த ஆசிரியர் என்பதை எடுத்துக்காட்டுகிறார். அது இருப்பதை அறிந்துகொள்வதும், எல்லாவற்றிற்கும் மேலாக, அதைப் பற்றி தியானிப்பதும், நம் இருப்பை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யக் கற்றுக்கொடுக்கிறது.
இறையாட்சியின் பார்வையில் நமக்கு என்ன நன்மை பயக்கும் என்பதைப் புரிந்துகொள்வதும், இறைவேண்டல் செய்வதும், மிதமிஞ்சியதை - நிலையற்ற விடயங்களுடன் நம்மைப் பிணைப்பதும் - விட்டுவிடுவதும், பூமியில் நாம் கடந்து செல்வது நிலைவாழ்விற்கு நம்மைத் தயார்படுத்துகிறது என்பதை உணர்ந்து, உண்மையாக வாழ்வதற்கான இரகசியமாகும்.
ஆயினும்கூட, தற்போதைய பல மானுடவியல் பார்வைகள் அழியாமையின் உள்ளார்ந்த வடிவங்களை உறுதியளிக்கின்றன மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பூமிக்குரிய வாழ்க்கையை நீடிப்பதைக் கோட்பாடு செய்கின்றன. இது நமது காலத்தின் சவால்களின் தொடுவானத்தில் வெளிப்படும் மீவுமனிதத்துவம் (transhumanism) காட்சியாகும். இறப்பை உண்மையிலேயே அறிவியலால் வெல்ல முடியுமா? மேலும் இறக்காத வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்கும் என்று அறிவியலால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நிகழ்வு, இறப்பு வாழ்க்கைக்கு எதிரானது அல்ல, மாறாக நிலைவாழ்விற்கான ஒரு வழியாக அதன் முக்கியமான கூறாக உள்ளது என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது. இயேசுவின் பாஸ்கா, துன்பங்களும் சோதனைகளும் நிறைந்த இந்த நேரத்தில், இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதன் முழுமையை ஏற்கனவே "முன்சுவைக்க" நமக்கு அனுமதிக்கிறது.
கல்வாரியை இருள் சூழ்ந்திருந்த அந்த மதிய நேரத்தின் முடிவில், நற்செய்தியாளர் லூக்கா இருளில் ஒளியின் இந்த முன்னறிவிப்பைப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது, அவர் எழுதுகிறார்: "அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாள் விளக்குகள் ஏற்கனவே ஒளிர்ந்து கொண்டிருந்தன" (லூக் 23:54).
உயிர்த்தெழுதலின் காலையை எதிர்பார்க்கும் இந்த ஒளி, இன்னும் மூடியதாகவும் அமைதியாகவும் தோன்றும் வானத்தின் இருளில் ஏற்கனவே ஒளிர்கிறது. ஓய்வுநாளின் விளக்குகள், முதல் மற்றும் ஒரே முறையாக, ஓய்வுநாளுக்குப் பிறகு வரும் நாளின் விடியலை அறிவிக்கின்றன: உயிர்த்தெழுதலின் புதிய ஒளி.
இந்த நிகழ்வு மட்டுமே இறப்பின் மறையுண்மையை ஆழமாக ஒளிரச்செய்யும் திறன் கொண்டது. இந்த ஒளியில், இந்த ஒளியில் மட்டுமே, நம் இதயம் விரும்புவதும் நம்புவதும் உண்மையாகிறது. இறப்பு என்பது முடிவு அல்ல, மாறாக முழு ஒளியை நோக்கி, புனிதப்படுத்தப்பட்ட நிலைவாழ்வை நோக்கிய பாதை.
உயிர்த்தெழுந்தவர் இறப்பின் பெரும் சோதனையில் நமக்கு முன்பாகச் சென்று, தெய்வீக அன்பின் வல்லமையால் வெற்றி பெற்று வெளிப்பட்டுள்ளார். இந்த வழியில், அவர் நமக்காக முடிவற்ற இளைப்பாறுதல் இடத்தை, நாம் காத்திருக்கும் வீட்டைத் தயார் செய்துள்ளார்; இருள்களோ, முரண்பாடுகளோ இல்லாத முழு வாழ்க்கையை அவர் நமக்குக் கொடுத்துள்ளார்.
நம்மீது கொண்ட அன்பினால் இறந்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி, புனித பிரான்சிஸ் அசிசியாருடன் இணைந்து நாம் இறப்பை "சகோதரி" என்று அழைக்கலாம். உயிர்த்தெழுதலின் உறுதியான நம்பிக்கையுடன் அதற்காகக் காத்திருப்பது, என்றென்றும் மறைந்துவிடும் என்ற பயத்திலிருந்து நம்மைப் பாதுகாத்து, நிலைவாழ்வின் மகிழ்ச்சிக்கு நம்மைத் தயார்படுத்துகிறது.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
