சிட்னி தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி சிட்னி தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி   (AFP or licensors)

சிட்னி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற தாக்குதலின் இந்தக் கடினமான நேரத்தில் அந்நாட்டின் அனைத்து மக்களுடனும் திருப்பீடம் தனது ஒன்றிப்பை வெளிப்படுத்தும் விதமாக, இரங்கல் செய்தியொன்றை சிட்னியின் பேராயர் அந்தோணி ஃபிஷர் அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிட்னியின் பேராயர் அந்தோணி ஃபிஷர் அவர்களுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியொன்றில், அண்மையில் சிட்னியில் நிகழ்ந்த தாக்குதலில் ஹனுக்கா கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த யூதச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 15, திங்கள்கிழமையன்று, திருப்பீடச் செயலர் பியெத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ள இந்தச் செய்தியில், துயரமான மற்றும் அர்த்தமற்ற வன்முறைச் செயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது உடனிருப்பை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.

மேலும் இந்தத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்கள் விரைவில் நலம் 'பெறுவதற்காகவும், இத்துயர நிகழ்வில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயருறுவோர் ஆறுதல் அடைவதற்காகவும் தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் அச்செய்தியில் மொழிந்துள்ளார் திருத்தந்தை.

வன்முறையால் தூண்டப்பட்டவர்கள் அமைதி மற்றும் ஒன்றிப்பின் பாதைக்குத் திரும்புவார்கள் என்று தான் நம்பிக்கைகொள்வதாகவும், அதேவேளையில் இத்தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் நிறையமைதி பெறவேண்டி இறைவேண்டல் செய்வதாகவும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, அனைத்து ஆஸ்திரேலிய மக்கள் மீதும் அமைதி மற்றும் வலிமையின் தெய்வீக ஆசீர்வாதங்களை வேண்டி தனது இரங்கல் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 டிசம்பர் 2025, 12:23