எல்லைப்புற பகுதிகளில் நற்செய்திக்கு சான்று பகர்வதற்காக நன்றி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தற்போதைய காலம் விரைவான மாற்றத்தாலும், பல அவசரத் தேவைகளாலும் குறிக்கப்பட்டுள்ளது என்றும், எல்லைப்புற பகுதிகளில் ஒத்துழைப்பு மற்றும் மறைபரப்புப் பணியில் பெண் துறவியரின் அர்ப்பணிப்பு நற்செய்திக்கு ஒரு வலிமைவாய்ந்த சான்றாக மாறுகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பின் 60-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் தலைவர் அருள்சகோதரி Oonah O’Shea அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
அவர்களின் இந்த ஆண்டுவிழா எதிர்நோக்கின் யூபிலி ஆண்டுடன் ஒன்றிணைந்து செல்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பெண் துறவறத்தார் யாவரும் இறைமக்கள் அனைவருடனும் இணைந்து திருப்பயணிகளாகவும் மறைபரப்புப் பணியின் சீடர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறுபது ஆண்டுகளில், ஆறு கண்டங்களிலிருந்தும் வந்த பெண் துறவு சபைகளின் தலைவர்களிடையே உரையாடலுக்கான இடத்தை UISG அமைப்பு எவ்வாறு வளர்த்துள்ளது என்பதை நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை, அவர்களின் தனிவரங்களின் வளமையையும் தூய ஆவியாரின் கொடைகளையும் திருஅவை மற்றும் உலகத்தின் நன்மைக்காக எவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பில், 97 நாடுகளிலிருந்து, 1,900-த்திற்கும் மேற்பட்ட பெண் துறவு சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 25 ஐரோப்பிய நாடுகளிலிருந்து 1046 பேரும், 16 ஆசிய நாடுகளிலிருந்து 184 பேரும், 30 அமெரிக்க நாடுகளிலிருந்து 479 பேரும், 22 ஆப்ரிக்க நாடுகளிலிருந்து 166 பேரும், 4 ஓசியானியா நாடுகளிலிருந்து 28 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
