அன்னை புனித கன்னி மரியா இந்த மனிதகுலத்தை கண்ணோக்குகிறார்!

ஆண்டுதோறும் நிகழும் இந்தப் பெருவிழாவிற்காகக் கூடியிருந்த ஏறத்தாழ 30,000 மக்களை வரவேற்று மகிழ்ந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ. அவர்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் அடங்குவர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 8, இத்திங்கள்கிழமை, புனித கன்னி மரியாவின் அமல உற்பவப் பெருவிழாவன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், உரோம் நகரின் Spagna சதுக்கம் சென்று, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தி, மக்களுக்கு ஆசீர் வழங்கும் பாரம்பரிய நிகழ்வைத் தொடர்ந்தார்.

நீண்டகால திருத்தந்தையரின் வழக்கமான இந்த நிகழ்வில், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறவு சபைகளின் தலைவர்கள் அன்னை மரியாவின் திருவுருவத்திற்கு முன்பு இறைவேண்டல்கள் செய்து, மலரஞ்சலி செலுத்தி மகிழ்ந்தனர்.

பாடகர் குழு மற்றும் கூட்டத்தினரால் பாடப்பட்ட மரியன்னை பாடலின்போது அங்கு வந்த திருத்தந்தை, 12 மீட்டர் தூணின் அடிவாரத்தில் உள்ள அன்னை கன்னி மரியாவின் திருவுருவத்திற்கு ஒரு பூங்கொத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உரோமை மறைமாவட்டம் மற்றும் ஜான் இலாத்தரன் பெருங்கோவிலின் முதன்மை அருள்பணியாளர் கர்தினால் பல்தசாரே ரெய்னா மற்றும் உரோமை மேயர் ரொபெர்த்தோ குவால்த்தியேரி இருவரும் இப்பெருவிழாவில் பங்கேற்க வருகை தந்திருந்த திருத்தந்தையை வரவேற்றனர்.

திருத்தந்தை தனது நீண்டதொரு இறைவேண்டலில், மரியாளின் தூய்மையைப் போற்றி, உரோமை, திருஅவை மற்றும் தற்போது துயருற்று நொறுங்குண்ட நிலையில் இருக்கும் மனிதகுலத்தை பாதுகாக்கும்படி வேண்டிக்கொண்டார்.

மேலும் யூபிலி ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட எதிர்நோக்கிற்காகவும், இல்லங்களிலும், நகரங்களிலும் அமைதி நிலவிடவும், திருஅவை துரித வளர்ச்சியை எதிர்கொள்ளும்போது அதற்குத் துணிவு கிடைக்கவும் இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை.

சமூகங்கள் அகிம்சை மற்றும் ஒப்புரவைக் கற்றுக்கொள்ள உதவிடுமாறும், மேலும் கனவுகள், நோக்கங்கள் மற்றும் துணிவை ஊக்குவிக்குமாறும் அன்னை மரியாவிடம் வேண்டிக்கொண்டார் திருத்தந்தை.

இறுதியாக அங்கிருந்து வத்திக்கானுக்குப் புறப்படுவதற்கு முன்,  ஆண்டுதோறும் நிகழும் இந்தப் பெருவிழாவிற்காகக் கூடியிருந்த ஏறத்தாழ 30,000 மக்களை வரவேற்று மகிழ்ந்தார். அவர்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் அடங்குவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 டிசம்பர் 2025, 13:06