கேதுரு மரங்களைப் போல வளர்ந்து வலிமை பெறுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
டிசம்பர் 01, திங்களன்று, மாலை 05.45 மணிக்கு லெபனோனின் பிகெர்கேவிலுள்ள அந்தியோக்கியாவின் மாரோனைட் முதுபெரும் தந்தை ஆட்சி பீடத்திற்கு முன் உள்ள சதுக்கத்தில் இளையோரைச் சந்தித்து அவர்களுக்கு அருளுரை வழங்கினார்.
லெபனோன், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் இளையோரே உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் வரவேற்கின்றேன். துன்பம், போர் மற்றும் சமூக அநீதிக்கு மத்தியிலும் உங்களின் துணிவையும் நம்பிக்கையையும் பாராட்டுகிறேன். உங்களின் துயரங்களையும் காயங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் இளைஞர்கள் நம்பிக்கையின் தனித்துவமான கொடையையும் வன்முறையை விட அன்பின் மூலம் வரலாற்றை மாற்றும் திறனையும் கொண்டுள்ளனர் என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
பல இளைஞர்களின் சாட்சியங்களை, மீள்தன்மை மற்றும் தொண்டுக்கான எடுத்துக்காட்டுகளாக நான் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். அவற்றை ஒப்புரவு மற்றும் ஒருவருக்கொருவர் ஏற்படுத்தும் உதவியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு புதிய எதிர்காலத்தின் அடையாளங்கள் என்று அழைக்க ஆசிக்கின்றேன். லெபனோனின் தேவதாரு மரத்தின் உருவத்தைப் பயன்படுத்தி, உங்களின் சமூகத்தின் "நல்ல வேர்களிலிருந்து" அதாவது, பொது நன்மைக்காக அமைதியாக உழைக்கும் பல மக்களிடமிருந்து வலிமையைப் பெற உங்களை ஊக்குவிக்கின்றேன்.
அமைதிக்கான அடித்தளம் ஒரு நுண்மமான யோசனை அல்ல, மாறாக கிறிஸ்துவே அதன் அடித்தளம். அவருடைய இரக்கம், நீதி மற்றும் மன்னிப்பு மூலம் உண்மையான அமைதியைக் கொண்டு வருகிறது. தன்னலத்தை விட தன்னை இழப்பதை அடிப்படையாகக் கொண்ட உண்மையான நட்பையும் நீடித்த அன்பையும் கட்டியெழுப்புங்கள். உண்மையான அன்பு "உங்களை" "நான்" என்பதற்கு முன் வைக்கிறது மற்றும் கடவுளின் நிலையான அன்பைப் பிரதிபலிக்கிறது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தொண்டு என்பது கடவுளின் பிரசன்னத்தின் மிகப்பெரிய அடையாளம். மேலும் ஊக்கமின்மையை எதிர்த்து, வரவேற்பு, உதவி மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் அன்றாட அடையாளங்கள் மூலம் சிறந்ததோர் உலகத்தை உருவாக்கிட உழைத்திடுங்கள். புனிதத்தன்மை, இரக்கம் மற்றும் அருள்நிலை சிந்தனையின் எடுத்துக்காட்டுகளாக பியர் ஜியோர்ஜியோ ஃப்ராசாத்தி கார்லோ அக்குதிஸ், புனித ரஃப்கா, அருளாளர் யாகூப் எல்-ஹதாத் மற்றும் புனித சார்பெல் போன்ற புனிதர்களை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அமைதி, இறைவேண்டல், திருவிவிலியம், திருப்பலி மற்றும் திருநற்கருணை ஆராதனை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளவும், நம்பிக்கையுடன் அன்னை கன்னி மரியாவைப் பார்க்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளைஞர்களை அழைக்கிறார். அன்பு, ஒன்றிப்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் மகிழ்ச்சியை விதைத்து, அமைதியின் கருவிகளாக மாறுமாறு கேட்டுக்கொள்ளும் அவரின் இறைவேண்டலில் உங்கள் அனைவரையும் நான் கையளிக்கிறேன்.
கடவுளின் திருபிரசன்னமும், அன்னையாம் திருஅவையின் ஆதரவும் என்றும் உங்களுக்கு உண்டு என்று நான் உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரையும் அன்னை மரியாவின் பரிந்துரை செபத்திலும் பாதுகாவலிலும் ஒப்படைக்கிறேன். லெபனோனின் கேதுரு மரங்களைப் போல வலிமையாக வளர்ந்து உலகிற்கு நம்பிக்கையை அளிக்க உங்களை ஊக்குவிக்கிறேன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
