முரண்பாடுகள் மத்தியில் திருஅவை அன்பின் கோட்டையாகத் திகழட்டும்!

திருத்தந்தை தனது மறையுரையில், இயேசு அலகையை எதிர்த்தது போல, கடவுளிடமிருந்து சுதந்திரமாக இருக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, கடவுளுக்கு "ஆம்" என்று சொல்வதன் மூலம் உண்மையான சுதந்திரத்தைக் கண்டறிய கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"தவக்காலம் என்பது ஒரு தீவிரமான வழிபாட்டுக் காலமாகும், இது நமது திருமுழுக்கின் வளமையை மீண்டும் கண்டறியவும், இயேசுவின் மனுவுருவெடுத்தல், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட உயிரினங்களாக வாழவும் வாய்ப்பளிக்கிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

பிப்ரவரி 22, ஞாயிறன்று, உரோமை மார்சலாவிலுள்ள திரு இருதயப் பங்குத் தளத்தில் காலை 09.00 மணிக்கு தலைமையேற்று நடத்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின் ஆற்றல்மிக்க ஆதாரமாக திருமுழுக்கின் அருளை மீண்டும் கண்டுபிடிக்க விசுவாசிகளை ஊக்குவித்தார். 

"நாம் கேட்ட முதல் வாசகமும், நற்செய்தியும், திருமுழுக்கு என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அது இயேசுவுடனும் இறைத்தந்தையுடனும் விசுவாசிகள் ஒன்றிப்புடன் வாழ உதவும் ஒரு தொடர்ச்சியான அருள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன" என்று வலியுறுத்தினார்.

"தொடக்கநூலில் ஆதாம் மற்றும் ஏவா இருவரும் பாவத்தில் வீழும் கதை மனிதச் சுதந்திரம் மற்றும் கடவுளுடனான உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது" என்றும், "நற்செய்தியில் கிறிஸ்து எதிர்கொண்ட சோதனையுடன் அதை வேறுபடுத்துகிறது" என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இயேசு அலகையை எதிர்த்தது போல, கடவுளிடமிருந்து சுதந்திரமாக இருக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, கடவுளுக்கு "ஆம்" என்று சொல்வதன் மூலம் உண்மையான சுதந்திரத்தைக் கண்டறிய கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை.

இப்பங்குத் தளத்திலுள்ள பல்வேறு சவால்களை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, "இப்பங்குத் தளம் டெர்மினி இரயில் நிலையத்திற்கு மிகவும் அருகில் உள்ள நிலையில் பல்கலைக் கழக மாணவர்கள், குடியேறியவர்கள் மற்றும் வீடற்ற மக்களுக்குப் பணியாற்றி வருகிறது" என்று குறிப்பிட்டார்.

சிக்கல் நிறைந்த இன்றைய உலகில், நற்செய்தியின் புளிப்பு மாவின் அடையாளமாக விளங்கிடவும், இந்தப் பகுதியில் தொடர்ந்து நம்பிக்கை மற்றும் பிறரன்புப் பணிக்கான கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்திடவும் அப்பங்கு மக்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

இறுதியாக, "கிறிஸ்தவர்களின் சகாய அன்னை, நமது பயணத்தை எப்போதும் நிலைநிறுத்தி, சோதனையிலும் வேதனையிலும் நம்மைப் பலப்படுத்துவாராக! இதனால் நாம் கடவுளின் பிள்ளைகளுக்குரிய  சுதந்திரத்தையும் உடன்பிறந்த உறவையும் முழுமையாக வாழ்ந்து காட்ட முடியும்" என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 பிப்ரவரி 2026, 12:18