உண்மையான ஆசிரியர் உண்மைக்கான விருப்பத்தைத் தூண்டுகிறார்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
லாஸ் ஏஞ்சல்ஸின் அனாஹெய்மில் இடம்பெறும் 70-வது துறவறக் கல்வி மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், "இந்த நிகழ்வு இறைவேண்டல்,உருவாக்கப் பயிற்சி மற்றும் தோழமை மூலம் ஆன்மிகப் புதுப்பித்தலை வளர்க்கும்" என்று தான் நம்பிக்கைகொள்வதாகவும் கூறியுள்ளார்.
பிப்ரவரி 20, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள இந்தச் சிறப்புச் செய்தியில், இம்மாநாட்டில் பங்கேற்கும் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் மொழிந்துள்ளார் திருத்தந்தை.
துறவறக் கல்வியாளர்களின் முக்கிய பங்களிப்பை ஒப்புக்கொண்டுள்ள திருத்தந்தை, நற்செய்தியைப் பரப்புவதிலும், இறைவனுடனான உண்மையான சந்திப்பைத் தூண்டுவதிலும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
"ஓர் உண்மையான ஆசிரியர் உண்மைக்கான விருப்பத்தைத் தூண்டுகிறார்" என்று தனது திருத்தூது மடலில் இருந்து பார்வையாளர்களுக்கு நினைவூட்டியுள்ள திருத்தந்தை, மற்றவர்களை அவர்களின் ஆன்மிக வளர்ச்சியில் வழிநடத்த இயேசுவுடனான உறவை வலுப்படுத்துமாறு கல்வியாளர்களை ஊக்குவித்துள்ளார்.
இளம் பங்கேற்பாளர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியையும் வழங்கியுள்ள திருத்தந்தை, குறிப்பாக திருநற்கருணை மூலம், கடவுளின் அன்பிற்கு தங்கள் இதயங்களைத் திறக்க அவர்களை அழைத்துள்ள அதேவேளை, இது வாழ்க்கையின் அனைத்து சவால்களிலும் வலிமையின் ஆதாரமாக உள்ளதாக விவரித்துள்ளார்.
இறுதியாக அவர்கள் அனைவரையும் அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையில் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை, அவர்களின் விசுவாசப் பயணத்தில் அவர்களுக்கு ஞானம், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை கிடைக்க வாழ்த்தியும், அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கியும் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
