அமலமரி அர்ப்பணத் துறவு சபையினர் அமலமரி அர்ப்பணத் துறவு சபையினர்  

ஒரே குடும்ப உணர்வு என்ற உங்களின் தனிவரத்தைக் கடைபிடியுங்கள்!

திருத்தந்தை தனது உரையில், இரு துறவு சபைகளின் பகிரப்பட்ட மறைபரப்புப் பணிக்கான இறையழைத்தலை எடுத்துரைத்ததுடன், ஒதுக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கும், தேவையில் இருப்போருக்குப் பணியாற்றுவதற்கும் அவர்களிடம் இருக்க வேண்டிய உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியர் மற்றும் அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவ பொதுநிலையினருக்கு ஒரே குடும்ப உணர்வு என்பது முக்கியமாக கடவுளுடனான அவர்களின் உறவு, திருநற்கருணை, இறைவேண்டல் மற்றும் வழிபாடு, இறைவார்த்தையைக் கேட்பது மற்றும் அருளடையாளங்களைக் கொண்டாடுவது ஆகியவற்றிலிருந்து வருகிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

"அமலமரி அர்ப்பணத் துறவு சபையினர் தங்கள் விதிகள் மற்றும் அமைப்புவிதித் தொகுப்பு அங்கீகரிக்கப்பட்டதன் 200-வது ஆண்டு நிறைவையும், திருத்தூதர்களின் அன்னை சபையின் அருள்சகோதரிகள் தங்கள் நிறுவுநரின் 150-வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் வேளை பிப்ரவரி 21, சனிக்கிழமையன்று, அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் திருத்தந்தை.

தனது உரையில், இரு துறவு சபைகளின் பகிரப்பட்ட மறைபரப்புப் பணிக்கான இறையழைத்தலை  எடுத்துரைத்த திருத்தந்தை, ஒதுக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கும், தேவையில் இருப்போருக்குப் பணியாற்றுவதற்கும் அவர்களிடம் இருக்க வேண்டிய உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

"ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க அவர் என்னை அனுப்பியுள்ளார்" என்ற இறைவார்த்தையை தனது விருதுவாக்காகத் தேர்ந்தெடுத்த அமலமரி அர்ப்பணத் துறவு சபையினரின் நிறுவுநர் புனித யூஜின் தெ  மசெனோத்தின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் அவர்களின் உலகளாவியப் பணியைப் பாராட்டினார்.

அவ்வாறே, புனித லூக்கா நற்செய்தியில் வரும், "இயேசுவின் தாயான மரியாளுடன்" என்ற இறைவார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு தங்கள் பணியைத் தொடரும் திருத்தூதர்களின் அன்னை சபையின் அருள்சகோதரிகள் பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

குறிப்பாக, கடினமான மற்றும் ஆபத்தான பகுதிகளில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்த பணிகளைப்  பாராட்டிய திருத்தந்தை, உடன்பிறந்த உறவு மற்றும் அமைதியின் சாட்சிகளாகத் தங்கள் பணியைத் தொடருமாறு அவர்களை ஊக்குவித்தார்.

இறுதியாக, துறவறச் சமூகங்களுக்குள் குழும உணர்வு, இறைவேண்டல் மற்றும் ஒன்றிப்பில் வேரூன்றிட அழைப்பு விடுத்த திருத்தந்தை, இந்த இரு துறவு சபைகளுக்கும் தனது இறைவேண்டல்களையும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 பிப்ரவரி 2026, 11:04