புதன் மறைக்கல்வி உரை வழங்கும் திருத்தந்தை புதன் மறைக்கல்வி உரை வழங்கும் திருத்தந்தை   (AFP or licensors)

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

இப்போது கிறிஸ்து தந்தையின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பதால், அவர் உலகில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் மக்களைத் திருஅவைக்கு அழைத்துச் செல்கிறார், மேலும் திருஅவையின் வழியாக அவர்களைத் தம்மிடம் நெருங்கி வரச் செய்கிறார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 18, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு 'மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஆவணத்தில், "திருஅவையின் மறைபொருள், கடவுளுடன் ஒன்றிணைவதற்கான அருளடையாளம் மற்றும் முழு மனித இனத்தின் ஒன்றிப்பு" என்ற தலைப்பில் இந்நாளில் தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் திருத்தூதர் புனித பவுல் கொலோசேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

"அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு  இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொலோ1:15, 18, 19–20).

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

இந்த மறைக்கல்வி உரையை நாம் எந்த ஆவணங்களுக்கு அர்ப்பணிக்கிறோமோ, அந்த ஆவணங்களுக்குத்தான் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம், திருஅவையை விவரிக்க விரும்பியபோது, ​​முதலில் அது எங்கிருந்து வருகிறது என்பதை விளக்குவதில் அக்கறை கொண்டிருந்தது. அவ்வாறு செய்ய, 1964.-ஆம் ஆண்டு, நவம்பர் 21-ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு 'மக்களினங்களின் ஒளி' என்ற ஆவணம், புனித பவுலின் கடிதங்களிலிருந்து "மறைபொருள்" என்ற வார்த்தையைப் பெற்றது. இந்த வார்த்தையைத் தேர்ந்தெடுப்பதன் வழியாக, "மறைபொருள்" என்ற வார்த்தையைக் கேட்கும்போது சில வேளைகளில் பொதுவாக நினைப்பது போல, திருஅவை என்பது விளக்க முடியாதது அல்லது புரிந்துகொள்ள முடியாதது என்று கூறுவது அர்த்தமற்றது. இதற்கு நேர்மாறாக, புனித பவுல் இந்த வார்த்தையைப் பயன்படுத்தும்போது - குறிப்பாக எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில், ஒரு காலத்தில் மறைக்கப்பட்டு இப்போது வெளிப்படுத்தப்பட்ட ஓர் எதார்த்தத்தைக் குறிக்க விரும்புகிறார் (காண்க எபே 3:5)

இது கடவுளின் திட்டமாகும், இதற்கு ஒரு நோக்கம் உள்ளது: இயேசு கிறிஸ்துவின் ஒப்புரவுச் செயலின் மூலம் அனைத்து உயிரினங்களையும் ஒன்றிணைப்பது, மக்கள் வழிபாட்டிற்காக கூடும்போது இது மிகத் தெளிவாகக் காணப்படுகிறது. அந்த நேரத்தில், அவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் முக்கியத்துவம் குறைந்துவிட்டன. உண்மையிலேயே முக்கியமானது என்னவென்றால், ஒன்றிணைந்திருப்பது, கிறிஸ்துவின் அன்பால் ஒன்றிணைந்திருப்பது, இது மக்களுக்கும் சமூகக் குழுக்களுக்கும் இடையிலான தடைகளை உடைத்துவிட்டது (காண்க. எபே 2:14).

புனித பவுலுக்கு, இந்த மறைபொருள் என்பது கடவுள் அனைத்து மனிதகுலத்திற்கும் செய்துமுடிக்க விரும்பியதன் திட்டமாகும். மேலும் அது படிப்படியாக அனைத்து மனிதர்களையும், உலகத்தையும் உள்ளடக்கிய உள்ளூர் அனுபவங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது. இங்கே உள்ளூர் அனுபவம் என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தின் கலாச்சாரம், மக்கள், உணவு மற்றும் வாழ்க்கை முறையை அந்த ஊர் மக்களின் பார்வையில் நேரடியாக உணர்ந்து, அறிந்து கொள்ளும் நிகழ்வுகளைக் குறிக்கிறது.

மனிதகுலத்தின் நிலை பகுதி பகுதியாக (துண்டு துண்டாக) இருப்பது, அதை மனிதர்களால் சரிசெய்ய முடியாது, இருப்பினும் ஒன்றிப்பை நோக்கிய பதற்றம் அவர்களின் இதயங்களில் வாழ்கிறது. இந்த நிலையில், தூய ஆவியாரின் வழியாக, பிரிவினைச் சக்திகளையும், பிரிவினையாளரையும் வெல்லும் இயேசு கிறிஸ்துவின் செயல் நுழைகிறது. நற்செய்தி அறிவிப்பை நம்புவதால் நாம் கொண்டாட ஒன்றுகூடும்போது, ​​அது இயேசுவின் சிலுவை மரணத்தில் காட்டப்பட்ட அன்பால் ஈர்க்கப்படுவது போன்றது. சிலுவை கடவுளின் அன்பின் மிகப்பெரிய அடையாளம். அதாவது, கடவுள் நம்மை ஒன்றாக ஒன்றுகூட அழைக்கிறார் என்று நாம் உணர்கிறோம்.

இந்தக் காரணத்திற்காகவே பேரவை அல்லது ஒன்றுகூடல் (ekklesía)  என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது, அதாவது, தாங்கள் ஒன்றாக அழைக்கப்பட்டிருப்பதை அங்கீகரிக்கும் மக்களின் கூட்டம். எனவே இந்த மறைபொருளுக்கும் திருஅவைக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட தற்செயல் நிகழ்வு உள்ளது. அது திருஅவை என்பது உணரக்கூடிய மறைபொருளாகும்.

இந்த ஒன்றித்த அழைப்பு, துல்லியமாக கடவுளால் மேற்கொள்ளப்படுவதால், இது ஒரு மக்கள் குழுவிற்கு மட்டும் வரையறுக்கப்பட முடியாது, ஆனால் அது அனைத்து மனிதர்களின் அனுபவமாக மாற விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு 'மக்களினங்களின் ஒளி' என்ற ஆவணத்தின் தொடக்கத்தில் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது: "திருஅவை, கிறிஸ்துவில், ஏதோ ஒரு வகையில் அருளடையாளம், அதாவது, கடவுளுடனான நெருக்கமான ஒன்றிப்பிற்கும் முழு மனித இனத்தின் ஒன்றிப்பிற்கும் அடையாளம் மற்றும் கருவியாகும்" (எண். 1).

அருளடையாளம் என்ற வார்த்தையையும் அதைத் தொடர்ந்து வரும் விளக்கத்தையும் பயன்படுத்துவதன் மூலம், மனிதகுல வரலாற்றில், கடவுள் நிறைவேற்ற விரும்புவதன் வெளிப்பாடாக திருஅவை உள்ளது என்பதைக் குறிக்க இது நோக்கமாகக் கொண்டுள்ளது; எனவே, திருஅவையை உற்றுநோக்குவதன் வழியாக, கடவுளின் திட்டத்தை, மறைபொருளை ஓரளவு நாம் புரிந்துகொள்கிறோம்: இந்த அர்த்தத்தில் திருஅவை ஓர் அடையாளம்.

அதேவேளையில், திருஅவை வெறும் அடையாளம் அல்ல, மாறாக ஒரு செயலில் உள்ள அடையாளம் (active sign) என்பதைக் காட்ட அருளடையாளத்துடன் கருவி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றில் கடவுள் செயல்படும்போது, ​​அவர் தனது செயலைப் பெறும் மக்களைச் சேர்த்து, அவர் செய்யும் செயல்களில் அவர்களை ஒரு பகுதியாக ஆக்குகிறார். திருஅவையின் வழியாகவே மக்களைத் தம்முடன் இணைத்து, தங்களுக்குள் ஒன்று சேர்க்கும் நோக்கத்தை கடவுள் நிறைவேற்றுகிறார்.

கடவுளுடனான ஒன்றிப்பு, மனிதர்களுடனான ஒன்றிப்பில் வெளிப்படுகிறது. இது மீட்பு எப்படி இருக்கிறது என்பதை விவரிக்கிறது. 'மக்களினங்களின் ஒளி' என்ற ஆவணத்தில் (பிரிவு VII, பத்தி 48), திருஅவை மீண்டும் ஓர் "அருளடையாளம்" என்று அழைக்கப்படுகிறது, ஆனால் இந்த முறை அது தெளிவாக "மீட்பின் அருளடையாளம்" என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்து சிலுவையில் உயர்த்தப்பட்டபோது, ​​அவர் எல்லா மக்களையும் தம்மிடம் ஈர்த்தார் என்று பொதுச் சங்கம் விளக்குகிறது. இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, அவர் தூய ஆவியாரை திருத்தூதர்களிடம் அனுப்பினார். ஆவியாரின் வழியாக அவர் தனது திருவுடலை உருவாக்கினார், அது திருஅவை, அதை மீட்பின்  உலகளாவிய அருளடையாளமாக மாற்றினார்

இப்போது கிறிஸ்து தந்தையின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பதால், அவர் உலகில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் மக்களைத் திருஅவைக்கு அழைத்துச் செல்கிறார், மேலும் திருஅவையின் வழியாக அவர்களைத் தம்மிடம் நெருங்கி வரச் செய்கிறார். அவர் தனது மாட்சிமையான வாழ்க்கையை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார், குறிப்பாக, அவரது உடல் மற்றும் இரத்தத்தால் அவர்களுக்கு உணவளிப்பதன் வழியாகப் பகிர்ந்துகொள்கிறார்.

இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் எவ்வாறு ஒன்றிப்பைக் கொண்டு வருகின்றன, மேலும் இது திருஅவை என்பது உண்மையில் என்ன என்பதோடு எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆவணம் நமக்கு உதவுகிறது. அதேவேளையில், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் உடலாகவும், வரலாற்றில் பயணிக்கும் கடவுளின் ஒரே மக்களாகவும் இருக்கும் திருஅவையைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கு இது நம்மை நன்றியுள்ளவர்களாக ஆக்குகிறது. இன்னும் பகுதி பகுதியாக (துண்டு துண்டாக) இருக்கும் மனிதகுலத்தின் மத்தியில் ஒரு புனிதப்படுத்தும் உடனிருப்பாக (sanctifying presence) வாழ்ந்து, மக்களிடையே ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவின் பயனுள்ள அடையாளமாக இது செயல்படுகிறது.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 பிப்ரவரி 2026, 13:34