மனமாற்றம் மற்றும் சமூக மாற்றத்திற்கு அழைப்பு!

திருத்தந்தை தனது மறையுரையில், தவக்காலம் என்பது உள்நோக்கிப் பார்க்கவும், மனமாற்றத்தைத் தழுவவும், பாஸ்காவில் வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் இறுதி கொண்டாட்டத்திற்குத் தயாராகவும் ஒரு நேரம் என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 18, புதனன்று, உரோமை புனித சபீனா பேராலயத்தில் நிகழ்த்திய திருநீற்றுப் புதன் திருப்பலி மறையுரையில், .தவக்காலத்தின் போது மனந்திரும்புதல் மற்றும் சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ

"மக்களை ஒன்று திரட்டுங்கள்" என்ற இறைவாக்கினர் யோவேலின் அழைப்பை எடுத்துக்காட்டிய திருத்தந்தை லியோ அவர்கள், இன்றைய உலகில் தனிப்பட்ட மற்றும் கூட்டு மனமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்.

"விசுவாசிகள் தங்கள் பாவங்களை வெளிப்புற அடையாளமாக அல்ல, மாறாக தங்கள் சொந்த இதயங்கள் மற்றும் செயல்களின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, "சவால்கள் இருந்தபோதிலும், தங்கள் தவறுகளுக்குப் பொறுப்பேற்று, புதுப்பித்தலை நாடும் விசுவாசிகளின் சமூகத்தை உருவாக்குவதற்கு தவக்காலம் ஒரு வலிமை வாய்ந்த காலமாக உள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த 1966-ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் திருப்பலியை வெளிப்படையாகக் கொண்டாடிய திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திருத்தந்தை, அதை "கடுமையான மற்றும் குறிப்பிடத்தக்க தவக்கால விழா" என்று அழைத்தார்.

சாம்பலை, போர், சுற்றுச்சூழல் சிதைவு மற்றும் நீதி இழப்பு உள்ளிட்ட உலகின் கலவரங்களின் நினைவூட்டலுக்கு ஒப்பிட்டுக்காட்டிய திருத்தந்தை, அதேவேளையில், நம்பிக்கை மற்றும் உயிர்த்தெழுதலையும் அடையாளப்படுத்தினார்.

தவக்காலம் என்பது உள்நோக்கிப் பார்க்கவும், மனமாற்றத்தைத் தழுவவும், பாஸ்காவில் வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் இறுதி கொண்டாட்டத்திற்குத் தயாராகவும் ஒரு நேரம் என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 பிப்ரவரி 2026, 11:13