அன்பு, அமைதி மற்றும் சமூக ஈடுபாட்டிற்கு திருத்தந்தை அழைப்பு!

உரோமையின் ஓஸ்தியா லிதோவிலுள்ள புனித மரியா ரெஜினா பாசிஸ் பங்குத் தளத்தில் இடம்பெற்ற திருப்பலியின் மறையுரையில், "பங்குத் தளச் சமூகம் கல்வி, நேர்மை மற்றும் தாராள மனப்பான்மையை தீவிரமாக வளர்த்தெடுக்க வேண்டும்" என்று ஊக்குவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நம்முடைய அமைதி கிறிஸ்துவிடமிருந்து வருகிறது, அவர் நம்மை வழிநடத்தவும் மாற்றவும் அனுமதிப்பதன் மூலமும், நம் இதயங்களை அவருக்கும், அவருடைய அருளின் மூலம், நாம் சந்திக்கும் மக்களுக்கும் திறப்பதன் மூலமும் அவரைப் பின்பற்றுகிறோம்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பிப்ரவரி 15, ஞாயிறன்று, மாலை 05.00 மணிக்கு உரோமையின் ஓஸ்தியா லிதோவிலுள்ள புனித மரியா ரெஜினா பாசிஸ் பங்குத்தளத்தில் இடம்பெற்ற திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கடவுளின் சட்டத்தின் மாற்றும் வலிமையையும், அன்பு மற்றும் ஒப்புரவிற்கான அழைப்பையும் வலியுறுத்திக் கூறினார்.

"பத்து கட்டளைகள் என்பவை கட்டுப்பாடுகள் அல்ல, மாறாக அவை உண்மையான சுதந்திரம் மற்றும் மனித நிறைவிற்கான பாதை" என்றும், "மற்றவர்களை மதிக்கும் மற்றும் அவர்கள் மீது அக்கறை கொள்ளும் தன்மையில் அவை வேரூன்றியுள்ளன" என்றும் விசுவாசிகளிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இன்றைய ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மேற்கோள் காட்டி, "ஆன்மிகத் தீங்கு உள்ளத்திற்குள் தொடங்கும் போது, ​​விசுவாசிகள் தங்கள் இதயங்களில் கோபத்தையும் வெறுப்பையும் அகற்றிவிட வேண்டும்" என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

தலத்திருஅவையின் சவால்கள் குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஓஸ்தியா லிதோவில் இளைஞர்களைப் பாதிக்கும் வன்முறை மற்றும் குற்றங்களைப் பற்றி விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டி விளக்கினார் திருத்தந்தை.

மேலும் "பங்குத் தளச் சமூகம் கல்வி, நேர்மை மற்றும் தாராள மனப்பான்மையை தீவிரமாக வளர்த்தெடுக்க வேண்டும்" என்று ஊக்குவித்த திருத்தந்தை, "நற்செய்தி அநீதிக்கு எதிரான ஓர் எதிர்ப்பாக அமைந்துள்ளது" என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

முதலாம் உலகப் போரின் போது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் நிறுவப்பட்ட பங்குத்தள வரலாற்றை, துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் அடையாளமாகக் குறிப்பிட்டுக் காட்டினார் திருத்தந்தை.

இறுதியாக, "அமைதியின் அரசியாம் அன்னை கன்னி மரியாவின் வழிகாட்டுதலின் கீழ், தாழ்ச்சி மற்றும் விசுவாசத்தின் மூலம் அமைதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்து தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 பிப்ரவரி 2026, 09:23