சமூகப் பொறுப்புடன் பணியாற்ற நிர்வாகத் தலைமை அலுவலர்களுக்கு அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 16, திங்களன்று, திருப்பீடத்தில் இத்தாலியின் நிர்வாகத் தலைமை அலுவலர்களுக்கு ஆற்றிய உரையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், வலுக்குறைந்தவர்களைப் பாதுகாப்பதற்கும், பொது நன்மையை நிலைநிறுத்துவதற்கும் அவர்களின் தார்மீக மற்றும் குடிமைப் பொறுப்பை வலியுறுத்தினார்.
புனித அம்புரோசின் வாழ்விலிருந்து உள்ளொளிப் பெற்று, திருஅவைக்கும் அரசுக்கும் இடையிலான வரலாற்று ஒத்துழைப்புக் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, அதிகாரத்தை வலிமையின் ஓர் அடையாளமாகக் காட்டுவதற்குப் பதிலாக சேவையின் ஒரு வடிவமாகக் கருதுமாறு அவர்களை ஊக்குவித்தார்.
மேலும் “பொது ஒழுங்கைப் பேணுவது என்பது குற்றங்களைத் தடுப்பது மட்டுமல்ல, சமூக வன்முறை, பொய்கள் மற்றும் கலாச்சாரத்தின் வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதும் ஆகும்” என்று குறிப்பிட்டுக் காட்டினார் திருத்தந்தை.
ஹிப்போவின் அகுஸ்தினாரையும் இத்தாலிய அரசியலமைப்பையும் மேற்கோள் காட்டி, "பொது ஊழியர்கள் சட்டம் மற்றும் மனசாட்சியால் வழிநடத்தப்பட்டு, நேர்மையுடன் செயல்பட வேண்டும்" என்று கோடிட்டுக் காட்டினார் திருத்தந்தை.
நவீன சவால்களையும், குறிப்பாக, பொது நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவின் அறநெறிமுறை நிர்வாகத்தையும் எடுத்துரைத்த திருத்தந்தை, “தொழில்நுட்பம் மேட்டுக்குடியினரின் நலன்களுக்காகப் பணியாற்றுவதற்குப் பதிலாக, பொது நன்மைக்கு சேவை செய்ய வேண்டும்” என்று எச்சரித்தார்.
"குறிப்பாக புலம்பெயர்ந்தோர் மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவுவதற்காக திருஅவை அரசுத் தலைவர்களுடன் இணைந்து செயல்படும்" என்று மீண்டும் அவர்களுக்கு உறுதிப்படுத்தி, அவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
