உரோமை மறைமாவட்ட  அருள்பணியாளர்களுடன் உரையாடும் திருத்தந்தை உரோமை மறைமாவட்ட அருள்பணியாளர்களுடன் உரையாடும் திருத்தந்தை   (ANSA)

விசுவாசத்திற்குப் புத்துயிர் அளிக்க திருத்தந்தை அறைகூவல்!

திருத்தந்தை தனது உரையில், விசுவாசம் என்னும் கொடையை மீண்டும் சுடர்விடச் செய்வதன் அவசியத்தையும் நற்செய்தியை அறிவிப்பதிலும், திருஅவையிலிருந்து விலகி இருப்பவர்களைச் சென்றடைவதிலும் தங்களின் பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிதன் தேவையையும் எடுத்துக்காட்டினார்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

அருள்பணியாளர்கள் அனைவரும் விசுவாசத்தை மீண்டும் வலுப்படுத்தவும், தங்கள் பணிகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவும், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் மக்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பிப்ரவரி 19, வியாழனன்று உரோமை மறைமாவட்ட அருள்பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.

இன்றைய சூழலில் அருள்பணியாளர்கள் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, ஆனால் விமர்சன ரீதியாக சிந்திக்காமல் அல்லது ஈடுபடாமல், ஏற்கனவே உள்ள திட்டங்களைப் பின்பற்ற வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக, செயலற்ற நிறைவேற்றுநர்களாக (passive executors) இருப்பதற்கு மேலாக, தங்கள் பணியில் தீவிரமாகப் பங்கேற்பவர்களாக இருக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.

விசுவாசம் என்னும் கொடையை மீண்டும் சுடர்விடச் செய்வதன் அவசியத்தை அவர்களிடம் வலியுறுத்திய திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பதிலும், திருஅவையிலிருந்து விலகி இருப்பவர்களைச் சென்றடைவதிலும் தங்களின் பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், இளம் அருள்பணியாளர்களுக்கு  ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தையும், இளைஞர்களுடன் தொடர்புகொள்ள வேண்டியதன் தேவையையும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்களுக்கு நமது உடனிருப்பு, பொறுமை மற்றும் உரையாடல் ஆகியவற்றின் மூலம் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அருள்பணியாளர்களிடையே நிலவவேண்டிய ஆதரவின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறிய திருத்தந்தை, "விசுவாசத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்குத் தனிப்பட்ட முயற்சி மட்டும் போதாது, அது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 பிப்ரவரி 2026, 12:32