போர் என்பது உயிருக்கும் நலவாழ்விற்கும் எதிரான மிகப்பெரிய தாக்குதல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"உங்கள் அர்ப்பணிப்பு, கடவுள் தம்முடைய எல்லாப் பிள்ளைகள் மீதும் அக்கறை கொண்டிருப்பதால், அவர் நம்முடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார் என்பதை வெளிப்படுத்தும் ஒருவருக்கொருவர் கொள்ளும் அக்கறைக்குப் பயனுள்ள சான்று பகர்தலாக இருக்கட்டும்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
பிப்ரவரி 16, திங்களன்று, பாப்பிறை வாழ்வு கழகத்தின் உறுப்பினர்களை அவர்தம் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காக அவர்களை மனநிறைவுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
நலவாழ்வுப் பாதுகாப்புக்கான உலகளாவிய அணுகலுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, “அரசுகளும் நிறுவனங்களும் இலாபம் மற்றும் இராணுவச் செலவினங்களை விட நிலைத்தன்மை, சமத்துவம் மற்றும் பொது நன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார்.
"அனைவருக்கும் நலவாழ்வுப் பராமரிப்பு: நிலைத்தன்மை மற்றும் சமத்துவம்" என்ற ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் கருப்பொருளை சுட்டிகாட்டிப் பேசிய திருத்தந்தை, “நலவாழ்வு என்பது ஒரு சலுகை அல்ல, உலகளாவிய உரிமை” என்று அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
கோவிட்-19 பெருந்தொற்று நோய் தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான ஆழமான ஒன்றையொன்று சார்ந்திருப்பதை எவ்வாறு வெளிப்படுத்தியது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, மருத்துவம், அரசியல், அறநெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கை முழுவதிலும் ஒத்துழைப்பின் அவசியத்தை கோடிட்டுக் காட்டினார்.
வருமானம், கல்வி, வாழ்க்கை நிலைமைகள் மற்றும் போர் ஆகியவை நலவாழ்வு ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கிய காரணிகளாக சுட்டிக்காட்டி, ஆயுட்காலம் மற்றும் பராமரிப்பு கிடைப்பதில் உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளை விமர்சித்தார் திருத்தந்தை.
“மோதல் மண்டலங்களில் உள்ள மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் மனித வாழ்க்கை மற்றும் பொது நலவாழ்வின் மீதான மிகவும் அபத்தமான தாக்குதலை குறித்துக்காட்டுகின்றன” என்று மேலும் எச்சரித்தார் திருத்தந்தை.
மனிதர், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு ஆகியவற்றை இணைக்கும் "ஒற்றை நலவாழ்வு" அணுகுமுறையை ஆதரித்துப் பேசிய திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‘இறைவா உமக்கே புகழ்!’ (Laudato si) என்ற தனது திருத்தூது மடலில் கூறியது போல, வீட்டுவசதி, போக்குவரத்து, விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நலவாழ்வைக் கருத்தில் கொள்ளும் பொதுக் கொள்கைகளுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் உலகளாவிய பொது நலவாழ்வு அமைப்புகளைப் பாதுகாக்கவும், மோதல்களைத் தடுக்கவும் வலுவான அனைத்துலக மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பையும் தனது உரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இறுதியாக, “நலவாழ்வு வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், மிகவும் நியாயமான மற்றும் நிலையான நலவாழ்வு அமைப்புகளை உருவாக்குவதில் பராமரிப்பு, ஒருமைப்பாடு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பின் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும்” என்று ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
