திருப்பீட மனிதவள அலுவலகத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏப்ரல் 01, புதன்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், Dr. Paola Fanelli அவர்களை, பொருளாதாரத்திற்கான செயலகத்தின் கீழ் இயங்கும் திருப்பீடத்தின் மனிதவள அலுவலகத்தின் இயக்குநராக நியமித்துள்ளதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
Dr. Fanelli அவர்கள், மிலானில் உள்ள பொக்கோனி பல்கலைக்கழகத்தில் (Bocconi University) செயல்பாட்டு ஆராய்ச்சி (Operations Research) துறையில் பட்டம் பெற்றவர் என்றும், அவர் ஆக்சென்ச்சர் (Accenture) நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, பல்வேறு தொழில் துறைகளில் நிறுவன மாற்றம் (Organizational change) மற்றும் மனிதவள செயல்முறைகளை மறுசீரமைத்தல் (Redesign of HR processes) ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.
இத்தாலியைச் சேர்ந்த ஒரு முக்கியமான பொதுத்துறை வங்கியான Mediocredito Centrale என்ற நிறுவனத்தில், திட்டத் தொகுப்பு மேலாளராக (Program Manager) பணியாற்றியபோது, Banco di Sicilia மற்றும் Sicilcassa ஆகிய இரு வங்கிகளுக்கு இடையிலான இணைப்பை நிர்வகித்தார்.
1999 ஆம் ஆண்டில், அவர் கஸ்ஸா டி ரிஸ்பார்மியோ டி ஃபெர்மோ(Cassa di Risparmio di Pescara) வங்கியின் துணைப் பொது மேலாளராகப் பொறுப்பேற்றார்; அங்கு செயல்முறைகள், வளங்கள் மற்றும் தகவல் அமைப்புகளில் (Information systems) சிறப்புடன் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து, BNL BNP பரிபாஸ் தலைமையகத்தில், மனிதவள மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு ஆகிய துறைகளில் முக்கியப் பதவிகளை வகித்தார்.
அவர் தனது மேலாண்மைப் பணியுடன், விரிவான கல்விசார் மற்றும் பொதுத் தொடர்பு அனுபவத்தையும் இணைத்து செயல்பட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
