இல்லங்கள் கடந்து இதயங்களை இணைக்கும் குடும்பம்!

உங்கள் வழியாக, கடவுளின் கனிவான அன்பு வெளிப்படுகிறது. அந்த அன்பு சோதனைக் காலங்களில் தளர்ந்துவிடாத, ஒருபோதும் ஏமாற்றாத நம்பிக்கையான அன்பாக விளங்குகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 15, புதன்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக கேமரூன்நாட்டின் தலைநகரான யாவுண்டேவில் அமைந்துள்ள நகுல் ஜாம்பா (Nakoul Zamba) குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆற்றிய உரை. இப்போது அவ்வுரைக்கு செவிமெடுப்போம்.

அன்பு குழந்தைகளே, அருமை நண்பர்களே,

உங்களுடைய இல்லமாக மாறியுள்ள இந்த குழந்தைகள் காப்பகத்திற்கு வருகை தந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நமது விண்ணகத் தந்தை உங்களைத் தமது பிள்ளைகளாக அன்புடன் வரவேற்கிறார். அவர் தனது கனிவான அன்பை உங்களுக்குக் காட்டவும், உங்களைத் தனது இதயத்தோடு அணைத்துக்கொள்ளவும் விரும்புகிறார். அவருடைய பெயரால், நானும் அதையே செய்ய விரும்புகிறேன்.

உண்மையில், துன்பங்களால் பாதிக்கப்பட்ட ஒரே மாதிரியான கடந்த கால நிகழ்வுகளைக் கொண்ட சகோதர சகோதரிகளுடன் நீங்கள் இங்கே ஒரு உண்மையான குடும்பமாக இருக்கிறீர்கள். இந்தக் குடும்பத்தில், இயேசுவே உங்களின் மூத்த சகோதரர்! அவரைச் சுற்றி சகோதர சகோதரிகளாக ஒன்று கூடி வாழ்வதுதான் உங்களை வலிமையாக்குகிறது, வாழ்க்கையின் சுமைகளை ஒன்றாகச் சுமக்க உதவுகிறது மற்றும் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடிகிறது.

அலட்சியமும் சுயநலமும் நிறைந்த உலகில், நாம் நம் சகோதர சகோதரிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியவர்கள் என்பதை  நினைவில் கொள்வோம். கடவுளின் பெரிய குடும்பத்தில் யாரும் ஒரு அந்நியரைப் போல நடத்தப்படுவதில்லை என்பதற்கும் அவர்கள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும், கடவுள் அவர்களை ஒருபோதும் மறப்பதில்லை என்பதற்கு இந்த இல்லமே சாட்சி.

அன்பு குழந்தைகளே, உங்களில் பலர் கடினமான சோதனைகளைச் சந்தித்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களில் சிலர் பெற்றோர் அல்லது அன்புக்குரியவர்களின் இறப்பினால் பிரிவின் வலியை அறிந்திருக்கிறீர்கள். மற்றவர்கள் பயம், நிராகரிப்பு, கைவிடப்படுதல், வறுமை மற்றும் நிச்சயமற்ற தன்மையை அனுபவித்திருக்கிறீர்கள். இருப்பினும், உங்கள் காயங்களை விட மேலான ஒரு எதிர்காலத்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு வாக்குறுதியை இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்கிறீர்கள்.

அது என்னவென்றால்,  எங்கெல்லாம் வறுமை, துன்பம் அல்லது அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார்; அவர் உங்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் அறிவார் மற்றும் உங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். இயேசு உங்களைப் போன்ற குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறை காட்டினார் என்பதையும், அவர் பெரும்பாலும் அவர்களைக் கூட்டத்தின் மையத்தில் நிறுத்துவார் என்பதையும் நற்செய்தி நமக்கு நினைவூட்டுகிறது. இன்று அவர் உங்கள் ஒவ்வொருவரையும் அதே அன்புடன் உற்று நோக்குகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்தக் குழந்தைகளை அரவணைப்புடன் பராமரித்து வரும் இந்த இல்லத்தின் இயக்குநர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மிக முக்கியமாக அருள்சகோதரிகள் என அனைவரையும் நன்றியுடன் வாழ்த்த விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கை மிகுந்த அர்ப்பணிப்பு அன்பின் அழகான சான்றாக விளங்குகிறது. இந்தக் குழந்தைகளைப் பராமரிப்பதன் மூலம், மத்தேயு நற்செய்தியாளர் குறிப்பிடுவது போல "எளியவர்களுக்குச் சேவை செய்பவர்களுக்கு ஆண்டவர் வாக்குறுதி அளித்த மகிழ்ச்சியை நீங்கள் முன்கூட்டியே பெறுகிறீர்கள்"  (மத் 25:40). உங்கள் பொறுமை இறைவனின் கருணைமிக்க முகத்தைப் பிரதிபலிக்கிறது. உங்கள் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம், நீங்கள் வெறும் பொருள் உதவியை விட மேலான ஒன்றை வழங்குகிறீர்கள்: நீங்கள் இந்தக் குழந்தைகளுக்கு உறுதுணையாகவும், செவிசாய்க்கும் காதுகளாகவும், ஒரு குடும்பமாகவும், ஒரு எதிர்காலமாகவும் விளங்குகிறீர்கள்.

உங்கள் வழியாக, கடவுளின் கனிவான அன்பு வெளிப்படுகிறது. அந்த அன்பு சோதனைக் காலங்களில் தளர்ந்துவிடாத, ஒருபோதும் ஏமாற்றாத நம்பிக்கையான அன்பாக விளங்குகிறது. நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன், மேலும் நீங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பணியில் துணிவுடன் நிலைத்திருக்க உங்களை ஊக்குவிக்கிறேன்.

எனது இதயப்பூர்வமான ஆசீரை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் நமது அன்னையாகிய புனித கன்னி மரியாளரின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். அவர் எப்போதும் உங்களைக் காத்து, உங்கள் துயரமான நேரங்களில் உங்களுக்கு ஆறுதல் அளித்து, அவருடைய மகன் இயேசுவின் உண்மையான நண்பர்களாக நீங்கள் வளர உதவுவாராக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஏப்ரல் 2026, 11:29