Pope Leo XIV visits Doula, Cameroon Pope Leo XIV visits Doula, Cameroon  (ANSA)

டுவாலாவில் நம் திருத்தந்தை

ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை இன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் டுவாலா நகருக்குச் செல்கிறார். அங்கு ஜபோமா மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றியபின் புனித பவுல் கத்தோலிக்க மருத்துவமனையைப் பார்வையிடுகிடுகிறார். பின்னர் யாவுண்டே நகர பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியரைச் சந்தித்து தனது இன்றைய நாளுக்கான பயணத்தை நிறைவுசெய்கிறார்.

இம்மானுவேல் மரியான் – வத்திக்கான் 

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் ஐந்தாம்  நாளை ஏப்ரல் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று தொடங்கியிருக்கிறார்.

காலை 9 மணிக்கு யவுண்டே நகரின் என்சிமாலென் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கேமரூனின் மற்றொரு முக்கியமான நகரமான டுவாலாக்குச் செல்கிறார். இறால்களின் ஆறு (Rio dos Camarões) 1472-இல் போர்ச்சுகீசிய ஆய்வாளர் பெர்னாவ் டோ போ (Fernão do Pó) வூரி (Wouri) ஆற்றை அடைந்தபோது, அங்கு ஏராளமான இறால்கள் (Prawns) இருப்பதைக் கண்டு வியந்து, அதற்கு ரியோ டு கேமரூஸ்  (Rio dos Camarões) என்று பெயரிட்டார். இந்தப் பெயரே காலப்போக்கில் மருவி இன்று அந்த நாட்டின் பெயராக "கேமரூன்" (Cameron) என்று அழைக்கப்படுகிறது.

காலை மணி 9:55 க்கு டுவாலா சர்வதேச விமான நிலையம் வந்து சேர்கிறார். டுவாலா, கேமரூன் நாட்டின் மிகப்பெரிய நகரமும், பொருளாதாரத் தலைநகரமும் ஆகும். வூரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வூரி ஆறு, டுவாலா மக்களின் வாழ்க்கையில் ஒரு புனித அடையாளம், ஆன்மீக மற்றும் பாரம்பரிய விழாக்களின் மையம் ஆகும். ந்கோண்டோ என்னும் நீர் ஆவிகளை மதிக்கும் பாரம்பரியம் திருவிழா இந்த ஆற்றிலே கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா மக்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விழா மட்டுமல்ல, மக்கள் மற்றும் இயற்கை இடையேயான புனித உறவை கொண்டாடுகிறது.

“டுவாலா” என்ற பெயர் அங்கிருந்த டுவாலா (Duala) இன மக்களிலிருந்து வந்தது. 1907-இல் "டுவாலா" என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஒரு பழமையான வணிக மையம். கிங் பெல், கிங் ஆக்வா (King Bell, King Akwa) என்னும் உள்ளூர் அரசர்கள் ஐரோப்பியர்களுடன் வணிகம் செய்தனர். இதன் கடலோர அமைப்பினால் இது ஒரு முக்கிய வணிகத் துறைமுகமாக வளர்ந்தது. எனவே இது வர்த்தகம், கலாசாரம், மக்கள் இடம்பெயர்வு ஆகியவற்றின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.

டுவாலாவில் கத்தோலிக்க திருஅவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் மறைபணியாளர்கள் வந்தனர். இங்கு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் திருஅவையின் ஆன்மீக பணியிடங்களை நிறுவினார்கள். குறிப்பாக 1930-களில் கட்டப்பட்ட புனித பேதுரு பவுல் பேராலயம் இம்மக்களின் நம்பிக்கை வாழ்வின் அடையாளமாகவும் ஆன்மீக மையமாகவும் திகழ்கின்றது. எனவே திருத்தந்தையின் வருகை நம்பிக்கை வாழ்வை மேம்படுத்துவதாகவும், அமைதியையும், ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உள்ளூர் டூவாலா திருஅவை உலக அங்கீகாரம் பெறும் எனவும், இளைஞர்களுக்கான ஆன்மீக சமூகசேவைக்கான அழைப்பாகவும் அமையும் எனவும் கருதப்படுகிறது.

முற்பகல் 11 மணிக்கு ஜபோமா மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். இது கேமரூனின் மிக முக்கியமான நவீன விளையாட்டு அரங்குகளில் ஒன்றாகும். இது 2020 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் இருக்கைகள் கொள்ளும் திறன் கொண்டதாகக் கட்டப்பட்டது. பொதுவாக இங்கு கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும் பெரிய அளவிலான திருப்பலி, ஆன்மீக கூட்டங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் மையமாகவும் இது திகழ்கின்றது.

மதியம் மணி 1:20 க்கு புனித பவுல் கத்தோலிக்க மருத்துவமனையை தனிப்பட்ட முறையில் பார்வையிடுகிறார். இது ஒரு மருத்துவமனை மட்டும் அல்ல,  திருஅவையின் அன்பு சேவையை வெளிப்படுத்தும் இடமாகவும், உடல் மற்றும் ஆன்மா இரண்டையும் பராமரிக்கும் ஒரு நம்பிக்கையின் மையம் என்றும் கூறலாம்.

பிற்பகல் மணி 14:10 க்கு டூவாலாவிலிருந்து யாவுண்டேவுக்குப் புறப்படுகிறார். பிற்பகல் மணி 3:15க்கு யாவுண்டே வந்திறங்குகிறார்.

மாலை மணி 5:30 க்கு யாவுண்டேவிலுள்ள மத்திய ஆப்பிரிக்க கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைச் சந்திக்கிறார். இந்த பல்கலைக்கழகம் மத்திய ஆப்பிரிக்க ஆயர்கள் கூட்டமைப்பால்  1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கேமரூன் மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதாகவும், தலைமைத்துவப் பயிற்ச்சி மையமாகவும் இது திகழ்கின்றது. அறிவு, நம்பிக்கை, சமூகப்பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கல்வியை கொடுப்பதே இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும். எனவே திருத்தந்தையின் இந்த சந்திப்பு மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் இளைஞர்களை ஒருங்கிணைந்த கல்விபெறுவதில் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pope visit Cameron fifth day

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஏப்ரல் 2026, 10:42