அமைதியும் ஒன்றிப்பும் ஆட்சி செய்யும் ஓர் உலகைக் கட்டியெழுப்புவோம்!

"இன்றைய நம் உலகில், நம்மைப் பிரித்து வைக்கும் அச்சம், அவநம்பிக்கை, அநீதி போன்ற பல "கல்லறைகள்" இன்னும் திறக்கப்பட வேண்டியுள்ளன. ஆனால், நமக்கு முன் பலர் செய்ததைப் போலவே, நாமும் இறைவனின் அருளால் அந்தக் கற்களை உருட்டி அகற்றி, அமைதியும் ஒன்றிப்பும் ஆட்சி செய்யும் ஓர் உலகைக் கட்டியெழுப்பும் துணிவைப் பெற அழைக்கப்படுகிறோம்" - திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 04, சனிக்கிழமை இரவு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த இயேசு ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலியில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய மறையுரை.

அன்பான சகோதர் சகோதரிகளே,

இன்று இரவு ஒளியும் மகிழ்ச்சியும் நிறைந்த திருவிழிப்பு நாள். இது கிறிஸ்தவப் பாரம்பரியத்திலேயே மிகவும் தொன்மையானதும் ஆழமானதுமாகும். இந்த இரவில்தான், நாம் நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக்கொண்டு, இறப்பு மற்றும் தீமையின் மீதான கிறிஸ்துவின் வெற்றியை நினைவுகூருகிறோம்.

பாஸ்கா மெழுகுவர்த்தியால் அடையாளப்படுத்தப்படும் இந்த ஒளி, நாம் கிறிஸ்துவின் சுடரை உலகிற்கு எடுத்துச் செல்லும்போது, ​​திருஅவையில் நம்மை ஒன்றிணைக்கிறது என்பதை நாம் இத்தருனத்தில் புரிந்துகொள்வோம்.

இந்த இரவு, கடவுள் ஒழுங்கற்ற நிலையிலிருந்து ஒழுங்கைக் கொண்டுவந்து, உலகைப் பராமரிக்கும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்த அவருடைய தொடக்கப் படைப்புச் செயலில் வேரூன்றியுள்ளது என்பதை நாம் நினைவுகூர்கிறோம். மனிதகுலம் பாவத்தில் வீழ்ந்தபோதும், கடவுள் நம்மைக் கைவிடாமல், தமது இரக்கத்தையும் மன்னிப்பையும் காட்டினார்.

இன்று இரவு நாம் கேட்ட இறைவார்த்தைகள், ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் கதையிலிருந்து எகிப்திலிருந்து இஸ்ரேல் மக்களின் விடுதலை வரை, மனிதகுலத்தின் போராட்டங்களுக்குக் கடவுள் காட்டும் அன்பான பதிலை நமக்கு நினைவூட்டுகின்றன.

கிறிஸ்துவின் பாஸ்கா மறைநிகழ்வின் வழியாக, நாம் இறை அருள் நிறைந்த வாழ்வில் இறைவனுடன் ஐக்கியமாகி, அவருடைய அரசில் உயிருள்ள கற்களாக மாறுகிறோம். உயிர்த்தெழுதல் என்பது கடவுளின் அன்பின் உன்னதமான அடையாளம்; அது இறப்பை விட வலிமையான அன்பு. நமது விசுவாசத்தின் வழியாக, நாமும் இந்தப் புதிய வாழ்விற்குச் சான்றுகளாகின்றோம்.

நாம் நற்செய்தியைத் தியானிக்கும்போது, ​​பெண்கள் தங்கள் துயரத்திற்கு மத்தியிலும், உயிர்த்தெழுதலை முதலில் கண்டவர்கள் அவர்களே என்பதைப் பார்க்கிறோம். தீமையின் எல்லா அழுத்தங்களையும் வென்ற இறைவனின் அன்பின் வல்லமையை அவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார், அவர் வழியாக நாமும் அமைதியும் ஒன்றிப்பும் நிறைந்த ஒரு புதிய உலகத்தைக் கொண்டுவர முடியும் என்பதுதான் நாம் உலகத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய செய்தி.

இன்று, திருமுழுக்கின் வழியாக புதிய உறுப்பினர்களைத் திருஅவைக்குள் நாம் வரவேற்கும் வேளையில், நமது செயல்களால் நற்செய்தியை வாழ்ந்து காட்டி, சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவைப் அறிவிக்கும் நமது பணி நமக்கு நினைவூட்டப்படுகிறது. தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போலவே, நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் இந்தச் செய்தியைப் பரப்புவதற்கு நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய நம் உலகில், நம்மைப் பிரித்து வைக்கும் அச்சம், அவநம்பிக்கை, அநீதி போன்ற பல "கல்லறைகள்" இன்னும் திறக்கப்பட வேண்டியுள்ளன. ஆனால், நமக்கு முன் பலர் செய்ததைப் போலவே, நாமும் இறைவனின் அருளால் அந்தக் கற்களை உருட்டி அகற்றி, அமைதியும் ஒன்றிப்பும் ஆட்சி செய்யும் ஓர் உலகைக் கட்டியெழுப்பும் துணிவைப் பெற அழைக்கப்படுகிறோம்.

இந்தப் புனித இரவில், ஒப்புரவு மற்றும் அமைதிக்கான பணிகளைத் தொடர நாம் நம்மை அர்ப்பணிப்போம். இதன் வழியாக, அன்பு மற்றும் நல்லிணக்கம் எனும் உயிர்ப்புவிழா கொடைகள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் தழைத்தோங்கட்டும்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஏப்ரல் 2026, 08:42