மனிதாபிமானப் பகிர்வே வறுமைக்குத் தீர்வு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உலகளவில் செல்வம் பெருகியிருந்தாலும், வறுமை விகிதம் அதிகரித்து வருவது நீதியற்ற சமத்துவமின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும், இது நாட்டின் வளங்களை மிகவும் நேர்மையாகவும், அறநெறி சார்ந்த முறையிலும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 10, வெள்ளியன்று, தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, எளிய நிலையில் உள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதில் இந்த நிறுவனத்தின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார்.
மேலும் வளங்களை நேர்மையான முறையில் பகிர்ந்தளிப்பதன் மூலமும், பொது நலனை மேம்படுத்துவதன் மூலமும், விளிம்புநிலை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் ஒரு கருவியாக இந்த நிறுவனம் திகழ வேண்டும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
கத்தோலிக்க சமூகப் போதனைகளை, குறிப்பாக திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரேரும் நோவாரும்’ (Rerum Novarum) என்ற திருமடலை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத பங்கை வலியுறுத்திய திருத்தந்தை, இது உழைக்கும் வர்க்கத்தினரின் மாண்பைப் பாதுகாப்பதையும், அவர்களுக்கு நியாயமான பாதுகாப்பு கிடைப்பதையும் உறுதி செய்கிறது என்று எடுத்துக்காட்டினார்.
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் முதல் திருத்தந்தை பிரான்சிஸ் வரையிலான திருஅவை போதனைகள், சமூக நலனை ஒரு அடிப்படை மனித உரிமையாக உறுதிப்படுத்துகின்றன என்றும், இந்த உரிமையானது ஒருமைப்பாடு, துணைநிலைத்தன்மை மற்றும் மனித மாண்பு ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையால் இன்றைய பணிச்சூழல் பெரும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இத்தகைய சூழலில் சமூக நிறுவனங்கள் புதிய சவால்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொள்வது அவசியம் என்றும், அதே வேளையில், எளியோருக்கான நீதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பு முறைகளை உறுதி செய்வதில் அவை உறுதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனத்தின் செயல்பாடானது, சமூகத்தின் விளிம்புநிலை மக்களைக் காப்பதற்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆதரவாக நிற்பதற்கும் விடுக்கப்பட்ட ஒரு அறைகூவலாகும் என்று கூறிய திருத்தந்தை,மதம், இனம் அல்லது பொருளாதார அந்தஸ்து என எவ்விதப் பாகுபாடுமின்றி, ஒவ்வொரு மனிதனின் மாண்பினை உறுதிப்படுத்துவதே இதன் இலக்கு என்று எடுத்துரைத்தார்.
இறுதியாக, மக்களுக்குப் பொறுப்புணர்வோடும், இரக்கத்தோடும் பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்த திருத்தந்தை, நீதியான மற்றும் மனிதாபிமானம் மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே இதன் இறுதி இலக்காகும் என்று கூறி இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கி உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
