திருத்தந்தை திருத்தந்தை  (ANSA)

அன்பின் திருத்தூதராக திருத்தந்தை: அல்ஜீரியப் பயணத்தின் நிறைவுச் செய்தி

இறைவன் அன்பானவர்; அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான தந்தை. ஆகவே, பணிவோடு நாம் இறைவனிடம் வருவோம்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 15, புதனன்று, திருத்தந்தையின் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவிற்கு மேற்கொண்ட தனது திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளில்  நிகழ்ந்த பிரியாவிடை நிகழ்வில் ஆற்றிய உரை. இப்போது இவ்வுரைக்கு செவிமெடுப்போம்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

ஒட்டுமொத்த சமூகத்தின் சார்பாக நீங்கள் வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு எனது நன்றிகள்! மேலும், கடந்த சில நாட்களாக நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த அன்பான வரவேற்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, எனக்கு அளிக்கப்பட்ட கனிவான விருந்தோம்பலுக்காகவும், எனது அல்ஜீரியப் பயணம் வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறைக்காகவும், அரசு அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப்பயணத்தை இறைப்பராமரிப்பின் ஒரு சிறப்பான பரிசாகவே நான் கருதுகிறேன்; ஓர் அகுஸ்தீனியத் திருத்தந்தையின் வாயிலாக, ஒட்டுமொத்தத் திருஅவைக்கும் ஆண்டவர் வழங்க விரும்பிய ஒரு கொடை இது.

இங்கு நான் மேற்கொண்ட பயணத்தின் சாராம்சத்தை இப்படிச் சொல்லலாம்: இறைவன் அன்பானவர்; அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான தந்தை. ஆகவே, பணிவோடு நாம் இறைவனிடம் வருவோம்.

கீழ்நோக்கிய வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இன்றைய உலகின் நிலைக்கு, அடிப்படையில் நமது ஆணவமே காரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம்.

நமக்கு இறைவனும் அவரது அளவற்ற கருணையும் அவசியமாகிறது. இறைவனில் மட்டுமே மனித இதயம் உண்மையான அமைதியைப் பெறுகிறது. அவரோடு ஒன்றித்திருக்கும்போதுதான், நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, நீதி, ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நல்லுறவு எனும் பாதையில் ஒன்றிணைந்து நடைபோட முடியும்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஏப்ரல் 2026, 10:52