இறை அருளால் புதுப்பிக்கப்படும் மனிதகுலம்: புனித அகுஸ்தினாரின் பாதையில் ஒரு புனிதப் பயணம்!

நம்பிக்கை என்பது வாழ்க்கையின் கடினமான சூழலை வெல்லும் ஒரு ஆற்றலாக மாறுகிறது. இது நம் வாழ்வின் வறண்ட நிலப்பரப்புகளை நம்பிக்கையுடன் செழிக்கச் செய்து, மலரச் செய்கிறது. இருப்பினும், இந்த அழகான அழைப்பு ஒரு சவாலையும் நம்முன் நிறுத்துகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 14, செவ்வாயன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக அன்னபாவில் உள்ள புனித அகுஸ்தினார் பெருங்கோவிலுக்குச் சென்றார். அங்கு இடம்பெற்ற திருப்பலியின்போது வழங்கிய அருளுரை. 

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

மனித வரலாற்றில் வாழும் இறைவார்த்தை

இறைவார்த்தை மனித வரலாற்றின் ஆழத்திற்குள் புகுந்து, மீட்பரின் உயிருள்ள மானுடக் குரல் வழியாக அந்த வரலாற்றைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இன்று, இந்தப் புனிதமான இடத்தில், ஒவ்வொரு காலத்திலும் தலைமுறையிலும் எதிரொலிக்கும் நற்செய்திக்கு நாம் மீண்டும் ஒருமுறை செவிமடுக்கிறோம். பண்டைய ஹிப்போ நகரின் சிறந்த ஆயரான புனித அகுஸ்தினாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அன்னாபா பெருங்கோவிலில் நாம் ஆன்மீக ரீதியில் ஒன்று கூடுகிறோம்.

நூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும், இடங்களின் பெயர்கள் மாறினாலும், புனிதர்களின் சாட்சியம் மாறாமல் நிலைத்திருக்கிறது. அவர்கள் வாழ்ந்த, செபித்த, பணியாற்றிய மண்ணிலேயே வேரூன்றி விண்ணரசிற்கான நிலையான அடையாளங்களாகத் திகழ்கிறார்கள். இறைவனின்அருள், காலத்தின் வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்பதையும், நம்பிக்கையுள்ள இதயங்களின் மூலம் அது வரலாற்றைத் தொடர்ந்து வடிவமைக்கிறது என்பதையும் அவர்களுடைய வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.

நிக்கொதேமுவுடனான சந்திப்பு: ஒரு நம்பிக்கைப் பயணம்

இதே இறை செயல்பாட்டின் மூலம் தான் ஆண்டவர் நிக்கொதேமுவுக்கு இரவு நேரத்தில் தன்னை வெளிப்படுத்தினார். நிக்கொதேமு கேள்விகள், நிச்சயமற்ற தன்மை மற்றும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நேர்மையான விருப்பத்துடன் இயேசுவை அணுகினார். அவரது தயக்கத்திலும் தேடலிலும், நமது சொந்த நம்பிக்கைப் பயணத்தை நாம் காண்கிறோம். நம்மைக் கண்டித்து ஒதுக்குவதற்காக அல்லாமல், புதிய நம்பிக்கையையும் மேலான வாக்குறுதியையும் கொண்ட ஓர் அழைப்போடுதான் கிறிஸ்து நம்மைத் தேடி வருகிறார்.பலவீனத்தின் மீது வலிமை ஊற்றப்படுகிறது, தேடுவதில் உள்ள விடாமுயற்சியின் பரிசாக உண்மை வெளிப்படுத்தப்படுகிறது.

"மேலிருந்து பிறப்பதற்கான" அழைப்பு

தன்னால் இயன்ற இடமெல்லாம் வீசுகின்ற இறைவனின் ஆவியால் அனுப்பப்பட்ட இயேசு, நிக்கொதேமுவின் வாழ்க்கையில் ஆழமான மற்றும் எதிர்பாராத விருந்தினராக மாறுகிறார். பழக்கமானவற்றிற்கு அப்பால் முற்றிலும் புதிய ஒன்றிற்கு அவரை இயேசு அழைக்கிறார். நீங்கள் மேலிருந்து பிறக்க வேண்டும் என்று இயேசு அவரிடம் கூறுகிறார். இந்த வார்த்தைகள் இரவு நேரத்தில் ஒரு மனிதனிடம் மட்டும் கூறப்பட்டவை அல்ல, மாறாக மீட்பிற்காக ஏங்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அழைப்பாக வரலாறு முழுவதும் எதிரொலிக்கின்றன. “மேலிருந்து பிறப்பது” என்பது வெறும் மனித முயற்சியால் அல்ல, கடவுளிடமிருந்தே வாழ்வைப் பெறுவதைக் குறிக்கிறது. இந்த அழைப்பு முழு திருஅவையையும் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகத்தின் பணியையும் வடிவமைக்கிறது. இறை அருளால் புதுப்பிக்கப்பட்ட மக்களாக வாழ்வதே அந்த அழைப்பாகும்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நம்பிக்கை என்பது வாழ்க்கையின் கடினமான சூழலை வெல்லும் ஒரு ஆற்றலாக மாறுகிறது. இது நம் வாழ்வின் வறண்ட நிலப்பரப்புகளை நம்பிக்கையுடன் செழிக்கச் செய்து, மலரச் செய்கிறது. இருப்பினும், இந்த அழகான அழைப்பு ஒரு சவாலையும் நம்முன் நிறுத்துகிறது. மாற்றம் கடினமானது என்பதை நற்செய்தி மறைப்பதில்லை, மாறாக இறைவனின் அருளை நம்பி அதை நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்கொள்ள நம்மை அழைக்கிறது.

அருளின் முரண்பாடு: கட்டளையும் வரமும்

முதலில், “நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும்” என்ற கிறிஸ்துவின் கட்டளை மலைக்க வைப்பதாகவும், சாத்தியமற்றதாகவும் கூடத் தோன்றலாம். ஒருவன் எப்படி புதிதாக தனது வாழ்வை தொடங்க முடியும்? துன்பம், பாவம் அல்லது தோல்வியால் பாரமான ஒரு வாழ்க்கையை உண்மையிலேயே எப்படி மாற்ற முடியும்? என்ற கேள்விகள் நம்முள் தோன்றலாம். ஆனால் நாம் கவனமாகக் கேட்கும்போது, இந்தக் கட்டளை ஒரு சுமை அல்ல, ஒரு வரம் என்பதை உணர்கிறோம். இது வெளியில் இருந்து திணிக்கப்பட்டது அல்ல, மாறாக சுதந்திரத்திற்கான பாதையாக வழங்கப்படுகிறது. கடவுள் நம்மிடம் எதைக் கேட்கிறாரோ, அதை அவரே சாத்தியமாக்குகிறார். அவருடைய அருளின் மூலம், மீண்டும் தொடங்குவதற்கான ஆற்றல் நமக்கு வழங்கப்படுகிறது.

புனித அகுஸ்தினார் தனது செபத்தில் இதை அழகாக வெளிப்படுத்துகிறார்: “நீர் எதை கட்டளையிடுகிறீரோ அதை எனக்குத் தாரும், உமக்கு விருப்பமானதை எனக்குக் கட்டளையிடும்.” இந்த வார்த்தைகள் ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. அதாவது கடவுளின் விருப்பமும் அதனை நிறைவேற்றுவதற்கான அவரது அருளும் இணைந்தே வருகிறது. அவர் நம்மைப் பேணிக்காக்காமல் ஒருபோதும் நம்மை அழைப்பதில்லை. எனவே, புதுப்பித்தலுக்கான அழைப்பு என்பது நாம் தனியாகச் சாதிக்கும் ஒன்று அல்ல, மாறாக நாம் பெற்றுக்கொண்ட அன்போடு ஒத்துழைக்கும் ஒன்றாகும்.

அல்ஜீரியா மற்றும் உலகிற்கான நம்பிக்கையின் செய்தி

நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தால் குறிக்கப்பட்ட எதிர்காலத்தைப்பற்றி நாம் சிந்திக்கும்போது, நிக்கொதேமுவைப் போலவே நாமும் அதே கேள்வியைக் கேட்கிறோம். நம் வாழ்வு உண்மையிலேயே மாற முடியுமா? தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களும் உலகளாவிய நெருக்கடிகளும் தரும் சுமையால், நம்பிக்கை என்பது எட்டாத தூரத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படலாம். இருப்பினும், கடவுளின் பதில் தெளிவானது மற்றும் அன்பு நிறைந்தது. ஆம், மாற்றம் சாத்தியம். நம் சுமைகள் எவ்வளவு கனமாக இருந்தாலும், கிறிஸ்து அவற்றை நம்முடன் இணைந்து சுமக்கிறார். நம் மனச்சோர்வு எவ்வளவு ஆழமாக இருந்தாலும், கடவுள் துல்லியமாக நமது பலவீனத்தின் மூலமே தனது வலிமையை வெளிப்படுத்துகிறார்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இந்த நம்பிக்கையின் மையத்தில் நிலை கொண்டுள்ளது. புதிய வாழ்க்கை என்பது ஒரு மாயையல்ல, அது ஒரு எதார்த்தம் என்பதை அது நமக்கு உறுதிப்படுத்துகிறது. மீட்பரின் மீதான நம்பிக்கையின் மூலம் இந்தப் புதிய வாழ்க்கையை அனுபவிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். புனித அகுஸ்தினாரின் சொந்த மனமாற்றமே இந்த உண்மைக்கு ஒரு சக்திவாய்ந்த சாட்சியமாகும். தனது தாயார் புனித மோனிகாவின் இடைவிடாத செபங்களாலும் கண்ணீராலும் வழிநடத்தப்பட்ட அவர், உண்மையான வாழ்க்கை கடவுளிடம் மட்டுமே உள்ளது என்பதைக் கண்டறிந்தார். கடவுளைப் பிரிந்து நாம் வாழ முடியாது என்ற அவரது உணர்தல், ஒவ்வொரு மனித இதயத்தின் ஆழமான ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

மீண்டும் பிறந்தவர்களின் குடும்பமாக திருஅவை

“மேலிருந்து பிறந்தவர்கள்” ஒரு புதிய குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சகோதர சகோதரிகள் என அழைக்கப்படுகிறார்கள். திருஅவை தனது அருள்சாதனங்களின் மூலம் இந்த வாழ்வை வளர்த்து, அனைத்து மக்களையும் அரவணைக்கிறது. திருத்தூதர் பணிகள் நூல், புதுப்பிக்கப்பட்ட இந்த மனிதகுலம் இதயத்தாலும் ஆன்மாவாலும் ஒன்றிணைந்த ஒரு சமூகமாகத் திகழ்கிறது என்பதை நமக்கு ஒரு முன்மாதிரியாகக் காட்டுகிறது. இந்த ஒற்றுமை வெறும் மனித உடன்படிக்கையின் அடிப்படையில் அமைந்தது அல்ல, மாறாக கிறிஸ்துவில் பகிரப்பட்ட வாழ்வின் அடிப்படையில் அமைந்தது.

இத்தகைய ஒற்றுமை கண்கூடான பலனைத் தருகிறது. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். எவரும் தேவையற்ற நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். இந்த தீவிரமான தாராள மனப்பான்மை ஒரு எதார்த்தமற்ற இலட்சியம் அல்ல, மாறாக அன்பின் உறுதியான வெளிப்பாடாகும். இது நம்பிக்கையால் மாற்றமடைந்த இதயங்களிலிருந்து பிறந்தது. உண்மையான நம்பிக்கை நம்மை மற்றவர்களின் நலனைத் தன் நலனைப் போலவே நாடும் அன்பை வெளிப்படுத்தும்  தொண்டு செய்ய அழைக்கிறது.

புதிய வாழ்க்கை முறையின் சாட்சிகள்

சமத்துவமின்மை மற்றும் பிளவுகளால் சூழப்பட்ட உலகில், இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. கிறிஸ்தவர்கள் தொண்டு என்ற கோட்பாட்டின் படி வாழ அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் தங்களுக்காக விரும்பும் அதே மாண்புடனும் அக்கறையுடனும் மற்றவர்களை நடத்த அழைக்கப்படுகிறார்கள். எங்கு மனத்தளர்ச்சி இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் நம்பிக்கையைக் கொண்டு வர வேண்டும்; எங்கு வேதனை இருக்கிறதோ அங்கு மாண்பையும், எங்கு மோதல் இருக்கிறதோ அங்கு நல்லிணக்கத்தையும் கொண்டு வர வேண்டும்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் அறிவிப்பானது இந்த புதிய வாழ்க்கை முறையில் மையமாக விளங்குகிறது. திருத்தூதர்கள் இந்த உண்மையை தைரியத்துடனும் உறுதியுடனும் சான்று பகர்ந்தனர். அவர்களுடைய பணி இன்றும் திருஅவையின் வாழ்வில் தொடர்கிறது. ஆயர்களும் நம்பிக்கையாளர்களும் குறிக்கோளில் ஒன்றுபட்டும் நம்பிக்கையில் அசைக்க முடியாதவர்களாகவும் ஒன்றாக இருந்து கடவுளின் அன்பின் சாட்சிகளாக இருக்க அழைக்கப்படுகிறார்கள்.

அல்ஜீரிய மண்ணில் நற்செய்தியின் நறுமணம்

அல்ஜீரியாவில் வசிக்கும் அன்புள்ள கிறிஸ்தவர்களே, உங்கள் உடனிருப்பு ஒரு அமைதியான அதே வேளையில் சக்திவாய்ந்த சான்றாக விளங்குகிறது. எளிய இரக்கச் செயல்கள், உண்மையான உறவுகள் மற்றும் தினசரி உரையாடல்கள் மூலம், நீங்கள் நற்செய்தியின் ஒளியைப் பிரதிபலிக்கிறீர்கள். நறுமணப்புகையைப் போல, உங்கள் வாழ்க்கை ஒரு மென்மையான நறுமணத்தைப் பரப்புகிறது. அது உங்களை நோக்கிய கவனத்தை ஈர்க்காமல், மற்றவர்களை கடவுளை நோக்கி அழைத்துச் செல்கிறது.

உங்கள் வரலாறு விடாமுயற்சி, விருந்தோம்பல் மற்றும் நம்பிக்கையால் அறியப்படுகிறது. இந்த நிலத்தில், மறை சாட்சிகள் செபித்திருக்கிறார்கள், குறிப்பாக புனித அகுஸ்தினார் ஒரு காலத்தில் தனது மக்களை பேரார்வத்துடனும் ஞானத்துடனும் வழிநடத்தியுள்ளார். இந்த வளமான பாரம்பரியத்திற்கு நீங்கள் வழித்தோன்றல்களாக இருக்கிறீர்கள். சகோதர அன்பின் மூலம் இந்த பாரம்பரியத்தில் தொடர்ந்து வாழுங்கள், மேலிருந்து பிறந்தவர்களின் சுதந்திரத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சான்றாக இருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள்  உங்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்காகவும் ஒரு நம்பிக்கையின் அடையாளமாக மாறுகிறீர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஏப்ரல் 2026, 08:52