இறைவனின் உடனிருப்பு: புயலின் நடுவே ஒரு புது விடியல்

நம்பிக்கை என்பது சோதனைகளை நீக்குவது அல்ல, மாறாக சோதனைகளின் நடுவே இயேசுவின் உடனிருப்பை உணர்வதாகும். கலிலேயக் கடலில் சீடர்களுடனும், நீரில் மூழ்கிய பேதுருவுடனும் இயேசு இருந்தது போல, நம் வாழ்வின் இருண்ட காலங்களிலும் 'அஞ்சாதீர்கள்' என்ற சொல்லின் மூலம் அவர் நமக்குத் துணிவைத் தருகிறார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 18, சனிக்கிழமையன்று, கேமரூன் நாட்டின் தலைநகரான யாவுண்டேவில் (Yaoundé) உள்ள யாவுண்டே வில்லே விமான நிலைய வளாகத்தில் இடம் பெற்ற திருப்பலியின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்பு சகோதர சகோதரிகளே,

உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்! நம் பாதையை ஒளிரச் செய்து, வாழ்வின் புயல்களை அமைதிப்படுத்தும் கிறிஸ்துவின் அமைதி உங்களோடு இருப்பதாக. எனது இந்தப் பயணத்தின் நிறைவாக, இந்தத் திருப்பலிக் கொண்டாட்டத்தின் முடிவில், உங்கள் அன்பான வரவேற்பிற்கும், நாம் இணைந்து பகிர்ந்துகொண்ட நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புயலின் நடுவே இறைவனின் கரம்

நற்செய்தி நமக்கு நினைவூட்டுவது போல, நம்பிக்கை என்பது சோதனைகளையும் சிரமங்களையும் நம் வாழ்விலிருந்து முழுவதுமாக அகற்றிவிடுவதில்லை. சில நேரங்களில், அச்சமே நம்மை ஆட்கொள்வது போலத் தோன்றலாம். இருப்பினும், கலிலேயக் கடலில் சீடர்களை அவர் கைவிடாதது போலவே, இயேசு நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. நற்செய்தியாளர்கள் இந்த நிகழ்வை வெவ்வேறு கோணங்களில் விவரிக்கின்றனர்: புனித மாற்குவின் கூற்றுப்படி, பலத்த காற்றிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த சீடர்களை நோக்கி இயேசு நடந்து வருகிறார்; அவர் படகிற்குள் நுழைந்ததும் காற்று அடங்கி அமைதி உண்டாகிறது. நம்பிக்கைக்கும் அச்சத்திற்கும் இடையிலான போராட்டத்தை புனித மத்தேயு,பேதுருவின் வழியாகக் காட்டுகிறார். நீரில் மூழ்கிய பேதுருவை இயேசு கரம் பிடித்துத் தூக்குகிறார். இன்று புனித யோவான் நமக்கு நினைவூட்டுவது போல, நம் வாழ்வின் இருள் சூழ்ந்த நேரங்களில் 'அஞ்சாதீர்கள்' என இயேசு தரும் உறுதிமொழி நமக்கு மாபெரும் நம்பிக்கையைத் தருகிறது. வெள்ளமும் இருளும் அழிவின் அடையாளங்கள் மட்டுமல்ல, அவை கடவுள் நிகழ்த்தும் அற்புதங்களின் களமும்கூட. செங்கடல் பிளந்து இஸ்ரயேல் மக்களுக்குப் பாதையானது போல, நம் வாழ்வின் இருண்ட காலங்களிலும் கடவுள் ஒரு புதிய வழியை உருவாக்குகிறார். சோதனைகள் நம்மை நிலைகுலையச் செய்யும்போது, அதுவே இறைவனின் மீட்பு தொடங்கும் புள்ளியாக அமைகிறது. எந்தவொரு இருளையும் வெல்லும் ஒளியாக இயேசு நம்மோடு இருக்கிறார். 'பயப்படாதே' என்ற அவரது குரல் நம் வாழ்வின் புயல்களை அடக்க வல்லது. எனவே, தடைகளைக் கண்டு நாம் தளர்ந்துவிடத் தேவையில்லை; அவரது கரத்தைப் பிடித்துக்கொண்டு நாம் நம்பிக்கையுடன் முன்னேறுவோம்.

தனிமையைத் தகர்க்கும் சமூக ஒருமைப்பாடு

இயேசு எப்போதும் புயலை உடனடியாக அடக்கிவிடுவதில்லை; மாறாக, அந்தப் புயலின் நடுவே அவர் நம்மைத் தேடி வருகிறார். அவர் நம்மோடு இருக்கவும், நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்து நிற்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறார். துன்பப்படுபவர்களிடமிருந்து நாம் விலகிச் செல்லாமல், அவர்களுக்கு அருகே சென்று, அவர்களுடன் பயணித்து, அவர்களுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எவரும் வாழ்வின் சவால்களைத் தனிமையில் எதிர்கொள்ளக் கூடாது. இதற்காகவே, ஒவ்வொரு சமூகமும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்; அங்கு ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ளவும், தங்களால் இயன்றதை மற்றவர்களுக்கு வழங்கவும் வேண்டும். மனித மாண்பை மதிக்கும் ஒரு சமூகத்தில், ஒவ்வொரு தனிமனிதனின் பங்களிப்பும் விலைமதிப்பற்றது மற்றும் தனித்துவமானது.

அஞ்சாதீர்கள்': நீதிக்கான கூட்டு அர்ப்பணிப்பு

அஞ்சாதீர்கள்' என்ற விவிலிய அழைப்பு, தனிமனித மனதிடத்தைத் தாண்டி ஒரு உன்னதமான சமூகப் கடமையையும் உள்ளடக்கியது. வறுமை மற்றும் நீதியுடன் தொடர்புடைய சவால்களை, பொறுப்புணர்வோடும் அர்ப்பணிப்போடும் நாம் அனைவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று அது நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்பிக்கை என்பது நம்மை உலகிலிருந்து பிரித்து வைப்பதல்ல; மாறாக, மற்றவர்களின் தேவைகளுக்கு குறிப்பாக மிகவும் நலிவடைந்தவர்களின் தேவைகளுக்கு பதிலளிக்க அது நம்மைப் பலப்படுத்துகிறது. தனிமனித முயற்சிகள் மட்டுமே போதுமானவை அல்ல; நற்செய்தியின் விழுமியங்களை நமது நிறுவனங்களிலும் கட்டமைப்புகளிலும் கொண்டு வரும் ஒரு கூட்டு அர்ப்பணிப்பு நமக்குத் தேவை. அந்த விழுமியங்களே நமது அமைப்புகளைப் பொது நலனுக்கான கருவிகளாக மாற்றியமைக்கின்றன.

திருஅவையின் வளர்ச்சி: பிளவுகளைப் பிணைப்பாக்கும் நற்செயல்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம் இதனைத் தெளிவாக விளக்குகிறது. ஆரம்பகாலத் திருஅவை வளர்ந்து வந்தபோது, தேவையுள்ளவர்களை குறிப்பாகக் கைம்பெண்களை பராமரிப்பதில் பல சிரமங்களைச் சந்தித்தது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்புகள் திருஅவையின் ஒற்றுமைக்கே அச்சுறுத்தலாக அமைந்தன. இதற்குத் திருத்தூதர்கள் வெறும் அதிகாரத்தைக் கொண்டு தீர்வு காணாமல், ஒன்றாகக் கூடி, செபித்து, இறையாற்றலை நாடினர். தூய ஆவியாரின் வழிகாட்டுதலின்படி, நற்பெயர் கொண்ட ஆண்களை இந்தப் பணிவிடைக்காக அவர்கள் நியமித்தனர். இதன் மூலம் அந்த நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டதோடு, சமூகம் மேலும் வலுவடைந்தது. பிரிவினையை ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஒரு சூழல், திருஅவையின் வளர்ச்சிக்கும் புதுப்பித்தலுக்கும் ஒரு நல்வாய்ப்பாக மாறியது. அதேபோல, ஒவ்வொரு நபரினுடைய மாண்பும் நிலைநாட்டப்படவும், ஏற்றத்தாழ்வுகள் களையப்படவும் நமது குடும்பங்களும் சமுதாயங்களும் தங்கள் மனப்பாங்குகளையும் கட்டமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டிய துணிவு தேவைப்படுகிறது. கடவுள் தாமே நம்மிடையே உள்ள மிகச்சிறியவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்; இதன் மூலம் ஏழைகள் மீது அக்கறை காட்டுவதை கிறிஸ்தவ வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக அவர் மாற்றியுள்ளார்.

கமெரூன் திருஅவைக்கு வாழ்த்தும் ஆசியும்

நாம் இப்போது ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெறும் வேளையில், நம் ஒவ்வொருவருடைய மனஉறுதியாலும், இறைவனின் பேரருளாலும் வழிநடத்தப்படும், திருஅவையாக நமது பயணத்தைத் தொடர்வோம். நாம் இணைந்து பகிர்ந்துகொண்ட இந்தத் தருணங்களை நம் இதயங்களில் போற்றிப் பாதுகாப்போம். நம் வாழ்வில் இயேசுவுக்கு என்றும் இடமளிப்போம்; அவர் ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுப்பித்து, நல்வழிப்படுத்த நம்மை அவரிடம் கையளிப்போம். கமெரூன் திருஅவை துடிப்புமிக்கது, நம்பிக்கை நிறைந்தது; இளைஞர்களைப் பலமாகப் பெற்று, தனது பன்முகத்தன்மையில் ஒற்றுமையாய் விளங்குவது. அன்னை மரியாவின் உதவியால், உங்கள் விசுவாசம் தொடர்ந்து செழித்தோங்கட்டும். வாழ்வின் புயல்கள் அனைத்தும் நீங்கள் வளருவதற்கான நல்வாய்ப்புகளாக மாறட்டும்; ஒருவருக்கொருவர் பகிர்தல், செவிமடுத்தல், செபம் மற்றும் இணைந்து வளரும் மாறாத விருப்பத்தின் வழியாக, இறைவனுக்கும் பிறருக்கும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்ய அவை உங்களை வழிநடத்தட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஏப்ரல் 2026, 13:29