திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்  (ANSA)

பணிவும் நேர்மையும்: எதிர்காலத் தலைவர்களுக்கான அறிவுசார் அடித்தளம்

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் அதன் மக்களின் நேர்மையான மனச்சான்றில் உள்ளது. அநீதி மற்றும் ஊழலுக்கு எதிராக, அறநெறி வழுவாத மற்றும் பொதுநலச் சேவை செய்யும் தலைவர்களை உருவாக்க வேண்டிய கடமை கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 17, வெள்ளியன்று, மத்திய ஆப்பிரிக்க கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான சந்திப்பின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய உரை. மாண்புமிகு அதிபர் அவர்களே, ஆயர்பெருந்தகைகளே, பல்கலைக்கழகத்தின் மதிப்புக்குரிய ஆசிரியர்களே, அதிகாரிகளே மற்றும் என் அன்பு மாணவச் செல்வங்களே!

ஆராய்ச்சி, கல்வி மற்றும் இளைஞர்களை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த மையமான மத்திய ஆப்பிரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கல்வித்துறை அதிகாரிகளின் அன்பான வரவேற்பிற்கும், கல்வியின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1989-இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், திருஅவைக்கும் ஆப்பிரிக்காவிற்கும் உண்மையை தேடுவதிலும், நீதி மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதிலும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.

கல்விக்கூடத்திலிருந்து வாழ்வாதாரச் சமூகமாக

இன்றைய காலகட்டத்தில், பல்கலைக்கழகங்கள்முக்கியமாக கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் வெறும் கல்விக்கூடங்களாக மட்டும் இல்லாமல், வாழ்வியலையும் ஆராய்ச்சியையும் ஒன்றிணைக்கும் உண்மையான வாழ்வாதாரச் சமூகங்களாக உருவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அறிவின் மூலம் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் சந்திப்பு கலாச்சாரத்தைப் பரப்புவதற்கும் அவை அழைக்கப்படுகின்றன. உண்மை என்பது பிணைப்பையும் ஒருமைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது; இது இறை அன்பின் ஒளியில் பல்வேறு கலாச்சாரங்கள் தங்களின் தனித்துவமான கொடைகளைப் பகிர்ந்துகொள்ளும் புனிதமான இடங்களை உருவாக்குகிறது. ஆன்மீக மற்றும் அறம்சார் வழிகாட்டுதலை பலர் இழந்து வரும் உலகில், பல்கலைக்கழகம் நட்பு, சிந்தனை மற்றும் உண்மையைத் தேடுவதற்கான ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த இடமாக உள்ளது. பல்கலைக்கழகங்கள் தோன்றிய காலத்திலிருந்தே, உண்மையைத் தேடுவதையே அவற்றின் இறுதி இலக்காகக் கொண்டுள்ளன. பேராசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து இந்த பொதுவான பணியை ஏற்றுக்கொண்டு, அனைத்து அறிவும் இறுதியில் இறைவனை நோக்கியே செல்கிறது என்பதை அங்கீகரிக்க அழைக்கப்படுகிறார்கள்.

நம்பிக்கையும் அறிவியலும்: உலகை ஒளிரச் செய்யும் இரு சுடர்கள்

உண்மையான அன்புடன் இணைந்த நம்பிக்கையின் ஒளி, இந்த உலகிலிருந்து தனித்து நிற்பதில்லை. மாறாக, அது உலகைப் ஒளிரச் செய்கிறது. நம்பிக்கை எதார்த்தத்தை எதிர்கொள்ள ஊக்குவிக்கிறது, விமர்சன ரீதியான சிந்தனையை ஆழப்படுத்துகிறது மற்றும் படைப்பின்முன் வியப்பைத் தூண்டுகிறது. இது அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது மற்றும் அறிவியல் ஆய்வுகளை மேம்படுத்துகிறது. நம்பிக்கை கொள்ளப் போராடும் ஒரு உலகின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் ஆப்பிரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு துறைகளையும் கலாச்சாரங்களையும் ஒருங்கிணைக்கும் அணுகுமுறைகளை ஏற்கவும், சமகாலச் சூழலில் இறை நம்பிக்கையைப்பற்றி சிந்திக்கவும் அழைக்கப்படுகிறார்கள். அநீதி, சமத்துவமின்மை மற்றும் மோதல்களால் சூழப்பட்ட சமூகங்களில் இது மிகவும் முக்கியமானது.

நேர்மையான மனச்சான்று: ஒரு நீதியான தேசத்தின் அஸ்திவாரம்

ஒரு நாட்டின் பெருமை அதன் செல்வத்தால் மட்டும் அளவிடப்படுவதில்லை, மாறாக அதன் மக்களின் நேர்மையால் அளவிடப்படுகிறது. ஒரு நீதியான சமூகம் உண்மையினால் உருவாக்கப்பட்ட நேர்மையான மனச்சான்றின் மீது கட்டமைக்கப்படுகிறது. தனிநபர்களையும் சமூகத்தையும் மாற்றும் நம்பிக்கைக்கு, சுதந்திரமான மற்றும் பொறுப்புணர்வுள்ள மனச்சான்றுகளை உருவாக்குவது அவசியம்; இது நீதி, அமைதி மற்றும் இறைவனை நோக்கிய தேடலைத் தூண்டுகிறது. இருப்பினும், இன்று சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களால் அறம் சார்ந்த விழுமியங்கள் சிதைந்து வருவதைக் காண்கிறோம்.எண்ணிமப் புரட்சி ஏற்படுத்தும் நவீன சவால்களைக் கண்டு இளைஞர்கள் ஒருபோதும் அஞ்ச வேண்டியதில்லை; மாறாக எத்தகைய மாற்றத்தையும் எதிர்கொள்ளும் துணிவைப் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பம் வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மை போன்ற கடுமையான கவலைகளையும் எழுப்புகிறது. இந்த உண்மைகளை அலட்சியப்படுத்துவது முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும்.

எண்ணிம யுகத்தின் சவால்களும் மனித உறவுகளும்

செயற்கை நுண்ணறிவு குறிப்பாக நாம் சிந்திக்கும் மற்றும் பழகும் விதத்தை மாற்றியமைக்கிறது. இதற்குத் தொழில்நுட்பத் திறன்கள் மட்டுமல்லாமல், தார்மீக மற்றும் மனிதாபிமானப் பயிற்சியும் தேவைப்படுகிறது. எண்ணிம சூழல்கள் உண்மையான மனித சந்திப்புகளைக் குறைத்து, பிறருடன் உண்மையாகப் பழகும் திறனை வலுவிழக்கச் செய்யலாம். நாம் மற்றவர்களிடமிருந்து விலகி நமக்கான ஒரு தனி உலகில் வாழும்போது, ஒருவருக்கொருவர் பேசுவது குறைந்துவிடுகிறது. இதனால் பயமும் மோதல்களும் உருவாகி நம்மைப் பிரிக்கின்றன. இந்தச் சூழலில், கத்தோலிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு உள்ளது. அது என்னவென்றால், பல்கலைக்கழகங்கள் அறிவைப் பரப்புவது மட்டுமல்லாமல், பகுத்தறிவு, அன்பு மற்றும் சேவை செய்யும் திறன் கொண்ட நபர்களை உருவாக்க வேண்டும். வருங்காலத் தலைவர்களை நேர்மை மிக்கவர்களாகவும், அறநெறி வழுவாமல் பொதுநலச் சேவையில் ஈடுபடுபவர்களாகவும் பக்குவப்படுத்தும் மாபெரும் கடமை பல்கலைக்கழகங்களுக்கு இருக்கிறது.

நாட்டுப்பற்றுடன் கூடிய அறிவுசார் சேவை

மாணவர்களை நாம் சிறப்பாக ஊக்குவிக்க விரும்புகிறேன்: உங்கள் மனநிறைவை உங்களுக்கு வெளியேயோ அல்லது எங்கோ தூரத்திலோ தேடும் வீண் முயற்சியைக் கைவிடுங்கள்; மாறாக, உங்கள் அறிவை உங்கள் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தி, உங்கள் சொந்த நாட்டிற்குச் சேவை செய்யும் ஆழ்ந்த விருப்பத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஞானம், நீதி மற்றும் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தனிநபர்களை உருவாக்குவதே உங்கள் பல்கலைக்கழகத்தின் உண்மையான நோக்கம். ஒரு கத்தோலிக்க பல்கலைக்கழகம் திருஅவையின் இதயத்திலிருந்து பிறக்கிறது மற்றும் உண்மையைத் தேடி அறிவிக்கும் அதன் பணியில் பங்கு கொள்கிறது. இறை நம்பிக்கையும் அறிவியலும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல, மாறாக அவை ஒன்றையொன்று ஆதரிக்கின்றன. சமூகத்தின் நலனுக்காக அனைத்து அறிவுசார் துறைகளுடனும் உரையாடலில் ஈடுபடும் திருஅவையின் பணியில் பல்கலைக்கழக சமூகம் பங்கேற்கிறது.

பணிவு: உண்மையைத் தேடும் பயணத்தின் மணிமகுடம்

இந்த நிறுவனத்தைக் கட்டியெழுப்பிய முன்னோடிகளை நாம் நினைவு கூர்வோம், அவர்களின் தொலைநோக்குப் பார்வை இன்றும் உங்களை ஊக்கப்படுத்துகிறது. கல்வித் திறனைத் தாண்டி, இப்பல்கலைக்கழகம் மனிதனின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆன்மீக உருவாக்கம் மற்றும் சிந்தனை மூலம், மாணவர்கள் தங்கள் உள்ளார்ந்த வாழ்வின் ஆழத்தைக் கண்டறியவும், காலத்தால் அழியாத உயரிய விழுமியங்களை நோக்கித் தங்கள் வாழ்வின் திசையைத் திருப்பவும் வழிநடத்தப்படுகிறார்கள்.

அன்புப் பேராசிரியர்களே, உங்கள் பங்கு இன்றியமையாதது. நீங்கள் கற்பிப்பது மட்டுமல்லாமல், நீதி, நேர்மை, சேவை மற்றும் பொறுப்புணர்வு ஆகிய விழுமியங்களை உங்கள் வாழ்க்கையின் மூலம் சான்றாக காட்ட அழைக்கப்படுகிறீர்கள். ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது உங்கள் முன்மாதிரியால் வடிவமைக்கப்பட்ட இளைஞர்களின் உருவாக்கத்திலிருந்து தொடங்குகிறது. உங்கள் அர்ப்பணிப்பின் மூலம், நீங்கள் ஒரு வலுவான அறநெறி மற்றும் அறிவுசார் அடித்தளத்தை உருவாக்க உதவுகிறீர்கள்.

இறுதியாக, முழு பல்கலைக்கழக சமூகத்தையும் வழிநடத்த வேண்டிய பண்பு பணிவு ஆகும். நமது பொறுப்பு எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் கற்றுக் கொள்பவர்களே, உலகத்தின் மீதான அன்பினால் தம் உயிரையே கொடுத்த ஒரே ஆசிரியரின் கீழ் உண்மையைத் தேடுவதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இறையருள் உங்களோடு இருந்து வழிநடத்தட்டும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஏப்ரல் 2026, 12:30