உண்மையின் சாட்சிகளாக உருவெடுப்போம்!

இயேசுவின் உயிர்ப்பு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கானது, அது நமது கடந்த காலக் குறைகளை நீக்கி, மரணத்திற்குப் பிறகும் நமக்கொரு நம்பிக்கை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி, எதிர்காலத்திற்கான கதவைத் திறக்கிறது: திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஆண்டவர் உருவாக்கிய இந்தப் புதிய நாளை நாம் கொண்டாடும் வேளையில், இந்த மகிழ்ச்சியான வாழ்த்து நம்மோடு இணைந்து பயணிக்கிறது என்றும், இயேசுவின் வழியாக, மரணம் தந்த அந்த விரக்தி என்றென்றும் முறியடிக்கப்பட்டுவிட்டது என்பதை இது நமக்கு அறிவிக்கிறது என்றும்  கூறினார்  திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஏப்ரல் 6, இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு அடுத்த நாளான இத்திங்களன்று, நண்பகல் 12 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இன்றைய நாளின் நற்செய்திப் பகுதியை (காண்க மத் 28:8-15) மையமாகக் கொண்டு தனது அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, காலியான கல்லறை இருவேறு மனநிலைகளை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

ஒருபுறம், உயிர்த்தெழுந்த ஆண்டவரை நேரில் கண்டு, மரணத்தின் மீதான அவரது வெற்றியை உலகுக்குப் பறைசாற்றிய பெண்களின் சாட்சியம் என்றும், மறுபுறம், இயேசுவின் உடல் திருடப்பட்டுவிட்டதாகப் பொய்க்கதையைப் பரப்பிய காவலர்களின் செயல் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

ஒரே ஒரு நிகழ்வுதான், ஆனால் அதிலிருந்து இருவேறு பார்வைகள் உருவாகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒரு பார்வை வாழ்வையும் நம்பிக்கையையும் நோக்கிய பயணமாக அமைகிறது என்றும், மறுபுறம் மற்றொரு பார்வையோ ஐயப்பாட்டிற்கும் இருளிற்கும் இட்டுச் செல்கிறது என்றும் விளக்கினார்.

இந்த முரண்பாடு, ஒரு கிறிஸ்தவச் சாட்சியாக வாழ்வதைக் குறித்தும், உண்மையானத் தகவல்களைப் பகிர வேண்டிய பொறுப்பைக் குறித்தும் சிந்திக்கும்படி நம்மை அழைக்கிறது என்று தெரிவித்தார்.

பொய்களாலும், பழிச்சொற்களாலும் அல்லது இன்று நாம் குறிப்பிடும் "போலிச் செய்திகளாலும்" உண்மை மறைக்கப்படும்போது கூட, அது என்றென்றும் புதைந்து கிடக்காது, வெளிப்பட்டே தீரும் என்று கூறிய திருத்தந்தை, உயிர்த்தெழுந்த கிறிஸ்து, அன்று கல்லறையில் பெண்களைச் சந்தித்தது போலவே நம்மையும் சந்திக்கிறார் என்றும், பயப்படாதீர்கள்; போய் மற்றவர்களிடம் சொல்லுங்கள் என்று நமக்குக் கட்டளையிடுகிறார் என்றும் எடுத்துக்காட்டினார்.

நமது வாழ்க்கையின் மூலம் நாம் பிறருக்கு அறிவிக்க வேண்டிய நற்செய்தியாக இயேசுவே இருக்கிறார் என்றும், இயேசுவின் உயிர்ப்பு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கானது, அது நமது கடந்த காலக் குறைகளை நீக்கி, மரணத்திற்குப் பிறகும் நமக்கொரு நம்பிக்கை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி, எதிர்காலத்திற்கான கதவைத் திறக்கிறது என்றும் மொழிந்தார் திருத்தந்தை.

போர், துன்புறுத்தல், அநீதி மற்றும் கல்வி அறிவின்மை ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு இந்தச் செய்தி மிகவும் அவசியமான ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

சொற்களின் மூலமாகவும் செயல்களின் மூலமாகவும் உயிர்ப்பு பெருவிழாவின் உண்மையை அறிவிக்கும்போது, வன்முறையும் பயமும் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, எங்கெல்லாம் நற்செய்தி வாழ்வாக்கப்படுகிறதோ மற்றும் பிறரோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறதோ, அங்கெல்லாம் ஒளி இருளை வெல்கிறது என்றும் தெரிவித்தார்.

கடந்த வருடம் உயிர்ப்பு பெருவிழா திங்களன்று இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நாம் மிகுந்த அன்புடன் நினைவுகூருகிறோம் என்றும், அவரது நம்பிக்கை மற்றும் அன்பின் சாட்சியத்தால் தூண்டப்பட்டு, நாம் உண்மையை பறைசாற்றும் ஒளிரும் சாட்சிகளாக மாறும்படி, 'ஞானத்தின் இருப்பிடமே' எனப் போற்றப்படும் அன்னை மரியாவிடம் செபிப்போம் என்றும் கூறி தனது அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஏப்ரல் 2026, 14:14