நம்பிக்கையின் ஒளியில் உயிர்ப்பின் பயணம்!

நம்பிக்கை என்பது எப்போதும் எளிதானது அல்ல, அது உறுதிப்படுத்தப்பட வேண்டும், இதற்காகவே, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருஅவை நற்கருணை வழிபாட்டிற்காகக் கூடுகிறது, அங்கே நாம் இறைவார்த்தையைக் கேட்கிறோம், இறைவேண்டல் செய்கிறோம் மற்றும் கிறிஸ்துவின் திருவுடல் மற்றும் திருஇரத்தத்தைப் பெறுகிறோம்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

தன் காயங்களைத் தொடுமாறு இயேசு அழைத்தபோது, தோமா அவர்மீது நம்பிக்கை கொண்டு, 'என் ஆண்டவரே, என் கடவுளே!' என்று முழக்கமிடுகிறார் என்றும், நம்பிக்கை என்பது தனிப்பட்ட ஒன்று மட்டுமல்ல; அது திருஅவை எனும் கூட்டமைப்பில் கிறிஸ்துவைச் சந்திப்பதாலும், அவருடைய அளவற்ற அன்பின் அடையாளங்களைக் கண்டுகொள்வதாலும் உருவாகிறது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 12, உயிர்ப்பு பெருவிழா காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இறை இரக்கத்தின் ஞாயிறான இன்று,  நண்பகல் 12 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இன்றைய நாளின் நற்செய்திப் பகுதியை (காண்க யோவா 20 : 29 ) மையமாகக் கொண்டு தனது அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் இறை இரக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த உயிர்ப்பு பெருவிழா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில், இன்றைய நற்செய்தி உயிர்த்தெழுந்த இயேசு தோமாவுடன் கொண்ட சந்திப்பை நினைவுபடுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் நம்பிக்கை என்பது எப்போதும் எளிதானது அல்ல என்று கூறிய திருத்தந்தை, அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காகவே, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருஅவை  நற்கருணை வழிபாட்டிற்காகக் கூடுகிறது என்றும், அங்கே நாம் இறைவார்த்தையைக் கேட்கிறோம், இறைவேண்டல் செய்கிறோம் மற்றும் கிறிஸ்துவின் திருவுடல் மற்றும் திருஇரத்தத்தைப் பெறுகிறோம் என்றும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து நற்கருணை நம்மை வலுப்படுத்துகிறது மற்றும் உயிர்ப்பின் சாட்சிகளாக நம்மை உலகிற்கு பறை சாற்றுகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அபிடினே நகர் மறைசாட்சிகள் (Martyrs of Abitene), ஆண்டவருடைய நாள் இன்றி எங்களால் வாழ முடியாது என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக அமைதிக்காக ஏங்கும் இவ்வுலகில், நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கவும், அன்பு மற்றும் மனமாற்றத்தின் தூதர்களாக மாறவும் அழைக்கப்படுகிறோம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அன்னை கன்னி மரியா நம்மை நம்பிக்கையிலும் உண்மையிலும் வழிநடத்துவாராக என்று இறைவேண்டல் செய்து தனது அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை நிறைவு செய்தார் .

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஏப்ரல் 2026, 09:16