திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள்

பிரிவினைகளும் போர்களும் நாட்டையும் குடும்பங்களையும் சிதைத்து வரும் இவ்வுலகில், அல்ஜீரிய மக்களின் இந்த 'ஒற்றுமை மற்றும் அமைதி' வாழ்வு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரி : திருத்தந்தை

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது ஆப்பிரிக்கத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

ஏப்ரல் 13, திங்கள்கிழமை  காலை திருத்தந்தை அல்ஜீரியா வந்தடைந்தார். உரோமில் இருந்து விமானத்தில் வரும்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புனித அகுஸ்தினார் வாழ்ந்த இந்த மண்ணிற்கு மீண்டும் வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

புனித அகுஸ்தினாரைப் பற்றிக் குறிப்பிடுகையில், மதங்களுக்கு இடையேயான உரையாடலில் அவர் ஒரு மிக முக்கியமான பாலமாகத் திகழ்கிறார் என்று திருத்தந்தை புகழாரம் சூட்டினார்.

தியாகிகள் நினைவிடம் (மக்காம் எசாஹித்)

திருத்தந்தை அல்ஜியர்ஸ் வந்தடைந்ததும், 1954 முதல் 1962 வரை நடைபெற்ற அல்ஜீரிய சுதந்திரப் போரில் உயிர்நீத்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள 'மக்காம் எசாஹித்' (Maqam Echahid) எனப்படும் மறைசாட்சிகள் நினைவுச் சின்னத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தனது பயணத்தின் முதல் பொது உரையில், "எதிர்காலம் மக்களுக்கு சொந்தமானது" என்பதை அங்கிருந்தவர்களுக்கு நினைவுபடுத்தியதுடன், "உண்மையான சுதந்திரம் என்பது வெறும் பாரம்பரியமாகப் பெறப்படுவது மட்டுமல்ல; அது ஒவ்வொரு நாளும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று" என்று ஆழமாக வலியுறுத்தினார்.

மக்காம் எசாஹித் நினைவிடத்தில் திருத்தந்தை

அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு

திருத்தந்தை அவர்கள் அல்ஜீரியக் குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்காகக் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மரியாதை நிமித்தமான வருகையை மேற்கொண்டார். அதன் பின்னர், Djamaa El Djazair எனப்படும் அல்ஜியர்ஸ் பெரிய மசூதி மாநாட்டு மையத்தில் அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றினார். அந்த உரையில், தேவையற்ற புரிதல் குறைபாடுகளையும் மோதல்களையும் வளர்ப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் மதிக்க வேண்டும் என்றும், பிறருடைய துயரத்தைக் கண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் இரக்கம் கொள்ள வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

மசூதியில் ஒரு மௌனத் தருணம்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அல்ஜியர்ஸ் பெரிய மசூதிக்கு (Great Mosque of Algiers) ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டார். அங்கு மசூதியின் நிர்வாகி முகமது மாமுன் அல் காசிமி அவர்களுடன் இணைந்து சிறிது நேரம் மௌனமான தியானத்தில் ஈடுபட்டார். இஸ்லாமியப் பெரும்பான்மை கொண்ட அல்ஜீரியாவில், கிறிஸ்தவர்கள் ஒரு சிறிய ஆனால் துடிப்பான சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் சூழலில், திருத்தந்தையின் இந்த வருகை மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தின் மிக முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

அல்ஜியர்ஸ் பெரிய மசூதியில் திருத்தந்தை

அகுஸ்தினார்  துறவற சபை அருள்சகோதரிகளைச் சந்தித்த திருத்தந்தை

பாப் எல் ஓயட் பகுதியில் உள்ள புனித அகுஸ்தினார்  துறவற சபை அருள் சகோதரிகளின் இல்லத்திற்குச் சென்ற திருத்தந்தை, அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது கொல்லப்பட்ட சகோதரிகளுக்கு  அஞ்சலி செலுத்தினார். அவர்கள் காட்டிய மன உறுதி, அகுஸ்தினார் ஆன்மீகத்தின் உண்மையான 'சாட்சிய வாழ்வு' என்று போற்றினார். மேலும், இக்கட்டான சூழலிலும் அங்கேயே தங்கி மக்கள் பணியாற்றும் சகோதரிகளின் துணிவையும், அவர்களின் இரக்கச் செயல்களையும் பாராட்டித் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அல்ஜியர்ஸ் வரவேற்பு மற்றும் நட்பு மையத்தில் திருத்தந்தை
அல்ஜியர்ஸ் வரவேற்பு மற்றும் நட்பு மையத்தில் திருத்தந்தை   (ANSA)

ஆப்பிரிக்க அன்னை பேராலயத்தில் திருத்தந்தை

திருத்தந்தை அவர்கள் ஆப்பிரிக்க அன்னை பேராலயத்தில் அல்ஜீரிய சமூகத்தினரைச் சந்தித்தார். அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். அங்கு ஒரு இஸ்லாமியப் பெண் மற்றும் ஒரு பெந்தகோஸ்து மாணவர் உட்பட பல்வேறு மதத்தினர், தாங்கள் எவ்விதப் பாகுபாடுமின்றி சகோதரத்துவத்துடன் இணைந்து வாழும் அனுபவங்களைச் சாட்சியங்களாகப் பகிர்ந்துகொண்டனர். மக்களின் இந்த ஒருமைப்பாட்டை வியந்து பாராட்டிய திருத்தந்தை, பிரிவினைகளும் போர்களும் நாட்டையும் குடும்பங்களையும் சிதைத்து வரும் இவ்வுலகில், அல்ஜீரிய மக்களின் இந்த 'ஒற்றுமை மற்றும் அமைதி' வாழ்வு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரி என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஏப்ரல் 2026, 13:04