திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
கேமரூன் தலைநகர் யவுண்டே அருகே அமைந்துள்ள யாவுண்டே-நிசிமாலன் சர்வதேச விமான நிலையத்தில், உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 15, புதன்கிழமை மணி 2:57 க்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் விமானம் தரையிறங்கியது. இது அவரது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
ஏப்ரல் 18, சனிக்கிழமை வரை திருத்தந்தை கேமரூனில் தங்கியிருப்பார். அதன்பின்னர், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, ஏப்ரல் 23, வியாழனன்று உரோமைக்குத் திரும்புவார்.
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களை அந்நாட்டின் பிரதமர் ஜோசப் தியோன் இங்குட் (Joseph Dion Ngute) வரவேற்றார். இரண்டு சிறுவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, இரு நாடுகளின் பிரதிநிதிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, திருத்தந்தை பிரதமருடன் ஒரு சுருக்கமான சந்திப்பை மேற்கொண்டார்."
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் கேமரூன் நாட்டின் திருத்தூதுப் பயணத்தின் முதல் நிகழ்வு தலைநகர் யாவுண்டேவில் உள்ள அதிபர் மாளிகையில் (Etoudi Palace) தொடங்கியது. அங்கு அவர் கேமரூன் குடியரசுத் தலைவர் மேதகு பால் பார்த்தலெமி பியா (Paul Barthélemy Biya) அவர்களைச் சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய அமைதி குறித்துத் தனிப்பட்ட முறையில் உரையாடினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, மாளிகையின் பொது மண்டபத்தில் கூடி இருக்கும் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகளிடையே திருத்தந்தை தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார்.
அதன்பின்னர், திருத்தந்தை லியோ 'இங்குல் ஜாம்பா' (Ngul Zamba) குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அவர்களோடு உரையாடினார். அதனைத் தொடர்ந்து, அன்றைய தினத்தின் இறுதி நிகழ்வாக, ஆயர் பேரவையின் தலைமையகத்தில் கேமரூன் நாட்டு ஆயர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
