இறை அருளின் திட்டம்: புனித அகுஸ்தினாரின் தாயகத்தில் அமைதியின் பாலமாகத் திருத்தந்தை

அன்னபா என்று அழைக்கப்படும் ஹிப்போ நகரின் ஆயராகப் பணியாற்றிய அகுஸ்தினாருடன் தொடர்புடைய இடங்களைப் பார்வையிடுவது ஒரு தனிப்பட்ட ஆசீர்வாதம்

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தின் போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அல்ஜீரியாவில் உள்ள புனித அகுஸ்தினாருடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பார்வையிட்டார்.

அங்கு ஒரு மலர்வளையத்தை வைத்து, பண்டைய சிதைவுகளுக்கு நடுவே இறைவேண்டல் செய்த திருத்தந்தை, மேலும் அமைதியின் அடையாளமாக ஒரு ஆலிவ் மரத்தை அங்கு நட்டார்.

அன்னாபாவில் உள்ள இசைப் பள்ளியைச் சேர்ந்த பாடகர் குழுவினர், அமைதி மற்றும் சகோதரத்துவம் குறித்து புனித அகுஸ்தினார் எழுதிய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பாடல்களைப் பாடியதை கேட்டு மகிழ்ந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மேலும் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் ஆற்றிய உரையில், பேதுருவின் வழித்தோன்றலாக அங்கு திரும்பி வந்ததற்கு நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, இந்த வருகையை "இறை அருளின் ஒரு திட்டம்" என்று குறிப்பிட்டார்.

முன்னதாக உரோமில் இருந்து அல்ஜிரியாவிற்குச் செல்லும் விமானத்தில் பேசிய திருத்தந்தை, புனித அகுஸ்தினார் மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கு ஒரு முக்கியப் பாலமாக இருந்ததாகவும், அவரது தாயகத்தில் ஆழமாக நேசிக்கப்படுபவர் என்றும் விவரித்தார்.

தற்போது அன்னாபா என்று அழைக்கப்படும் ஹிப்போ நகரின் ஆயராகப் பணியாற்றிய அகுஸ்தினாருடன் தொடர்புடைய இடங்களைப் பார்வையிடுவது ஒரு தனிப்பட்ட ஆசீர்வாதம் என்று தெரிவித்துள்ள திருத்தந்தை, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பாலங்களைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் இது நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார்.

திருத்தந்தை ஏழைகளின் சிறிய சகோதரிகளால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தை பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து புனித அகுஸ்தினார் துறவற சபை உறுப்பினர்களைச் சந்தித்த பிறகு புனித அகுஸ்தினார்  பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றினார்.

பின்னர் அல்ஜிரியாவிற்குத் திரும்பியபின் திருத்தந்தை, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்குவடோரியல் கினியாவிற்குத் தனது திருத்தூதுப் பயணத்தைத் தொடர்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஏப்ரல் 2026, 09:45