திருத்தந்தை திருத்தந்தை  

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தை வரவேற்ற திருத்தந்தை!

பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரும் நல்லெண்ணமே, உலகம் முழுவதும் நிலவும் பிற மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு கருவியாக மாறக்கூடும்: திருத்தந்தை

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 8, புதன்கிழமை இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில், மத்திய கிழக்கில் பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றமான சூழல் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

ஏப்ரல் 7 , செவ்வாயன்று மாலை வெளியான இரண்டு வார கால போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, அதனை மிகுந்த மனநிறைவோடும், ஒரு பெரிய நம்பிக்கையின் அடையாளமாகவும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த நம்பிக்கையாளர்களிடம் பேசிய திருத்தந்தை, பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படுவதன் மூலம் மட்டுமே நம்மால் போரை நிறுத்த முடியும் என்று தெரிவித்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தூதரக முயற்சிகளுக்கு இறைவேண்டல் மூலம் ஆதரவு தருமாறு அங்கிருந்த நம்பிக்கையாளர்களை கேட்டுக்கொண்ட திருத்தந்தை 'பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரும் நல்லெண்ணமே, உலகம் முழுவதும் நிலவும் பிற மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு கருவியாக மாறக்கூடும்' என்று சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 11, சனிக்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் 'அமைதிக்கான திருவிழிப்பு செப வழிபாடு' (Prayer Vigil for Peace) நடைபெறவுள்ளதை நம்பிக்கையாளர்களுக்கு எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இதில் நேரில் வருபவர்கள் மற்றும் இல்லங்களில் இருந்து நேரலையில் இணைபவர்கள் என அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த திருவிழிப்பு செப வழிபாடு உரோம் நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும், இதற்கு திருத்தந்தை  தலைமை தாங்குவார். இதில் பங்கேற்க நுழைவுச் சீட்டுகள் எதுவும் தேவையில்லை.

போர்நிறுத்த ஒப்பந்தம்

மத்திய கிழக்கு மாநிலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் போரை நிறுத்த, ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன. ஈரானிய 'நாகரிகத்தின்' மீது தாக்குதல் நடத்தப்படும் எனத் தான் விடுத்திருந்த மிரட்டல்களை, செவ்வாயன்று மாலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து புதன்கிழமையன்று, காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் முடிவை ஆதரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் தெரிவித்தார். இருப்பினும், இந்த போர்நிறுத்தம் லெபனோனுக்குப் பொருந்தாது என்றும், அங்கு ஏற்கனவே 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஏப்ரல் 2026, 14:51