திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் ஆறாம் நாள் நிகழ்வுகள்

ஏப்ரல் 18, சனிக்கிழமை இன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் யாவுண்டே வில்லே விமான நிலையத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், திருத்தந்தை அவர்களுக்கு கேம்ரூன் நாட்டிற்கான திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்து, பிரியாவிடை கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து புறப்பட்டு, அங்கோலா நாட்டின் தலைநகராகிய லுவாண்டாவின் பிப்ரவரி 4 சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். அங்கு வரவேற்புக் கொடுக்கப்படுகிறது. பின்னர் குடியரசு தலைவர், அதிகாரிகள், தூதரகம் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டு தனத

இம்மானுவேல் மரியான் – வத்திக்கான் 

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் ஆறாம் நாளை இன்று ஏப்ரல் 18ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியிருக்கிறார்.

காலை மணி  09.30 க்கு யாவுண்டே-வில்லே விமான நிலையத்தில் திருத்தந்தை அவர்கள் திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். ஏன் விமான நிலையத்தில் திருப்பலி நடைபெறுகிறது என்று யோசிக்க தோன்றும். காரணம் என்னவென்றால் விமான நிலையத்தின் ஓடுதளங்கள் (Runways) மிகவும் அகலமானவை மற்றும் சமதளமானவை. ஆயிரக்கணக்கானஇ ஏன் லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி அமர்வதற்கு ஏற்ற இடமாக இது அமைகிறது. எந்தவொரு மைதானத்தை விடவும் இது பெரிய இடவசதியை வழங்குகிறது.

ஓடுதளத்தின் ஒரு முனையில் ஒரு பெரிய மேடை அமைக்கப்படும். இதில் திருத்தந்தை மற்றும் மற்ற ஆயர்கள் அமர்ந்து திருப்பலி நிறைவேற்ற ஒரு 'பீடம்' (Altar) உருவாக்கப்படும். வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க இதன் மேல் ஒரு பெரிய கூரை அமைக்கப்பட்டிருக்கும். விமான நிலையங்கள் ஏற்கனவே சுற்றிலும் வேலிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுடன் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக இருக்கும். இலட்சக்கணக்கான மக்கள் கூடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விமான நிலையம் மிகவும் வசதியான இடமாகும்.

மக்கள் மிகத் தொலைவில் இருந்தாலும் திருப்பலியை தெளிவாகப் பார்க்கவும் கேட்கவும் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி (LED) திரைகளும், நவீன ஒலிபெருக்கிகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

கத்தோலிக்க திருஅவையில் திருப்பலியின் இறுதியில் "சென்று வாருங்கள்" என்று கூறப்படும். விமான நிலையம் என்பது ஒரு பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் இடம். எனவே, திருத்தந்தை ஒரு 'அமைதிப் பயணியாக' (Pilgrim of Peace) ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு தனது செய்தியை எடுத்துச் செல்கிறார் என்பதை இது குறிக்கிறது.

சுருங்ககூறின், அதிக மக்கள் கலந்து கொள்ள, திருஅவையின் “வெளியே செல்லும்” பணியை காட்ட மற்றும் இது உலகளாவிய இணைப்பின் சின்னமாகவும் கருதப்படுகிறது.

திருத்தந்தை அவர்கள் திருப்பலி நிறைவேற்றியபின், பகல் 12 மணிக்கு திருதந்தைக்கு பிரியாவிடை விழா நடைபெறுகிறது.

மதியம் மணி 12:30 க்கு திருத்தந்தை அவர்கள் அங்கோலா நாட்டின் தலைநகரான லுவாண்டா நோக்கி தனது பயணத்தை தொடர்கிறார். தனது அங்கோலா நாட்டிற்கான முதல் பயணத்தை தொடங்குகிறார்.

அங்கோலா (Angola) ஒரு மிக நீண்ட வரலாறு, ஆழமான கலாச்சாரம் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கையுடன் பின்னிப் பிணைந்த ஒரு சுவாரஸ்யமான நாடு. அங்கோலாவின் வரலாறு பழங்கால பாண்டு (Bantu) பேரரசுகளில் தொடங்குகிறது. பின்னர் 15-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் இங்கு வந்தனர். சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இது போர்த்துகீசியர்களின் காலனியாக இருந்தது. இதுவே அந்நாட்டில் கத்தோலிக்க நம்பிக்கை பரவவும்இ போர்த்துகீசிய மொழி அதிகாரப்பூர்வ மொழியாக மாறவும் காரணமாக அமைந்தது.

1975 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி அங்கோலா சுதந்திரம் பெற்றது. 1975-இல் சுதந்திரம் பெற்ற பிறகு, அங்கோலா சுமார் 27 ஆண்டுகள் நீடித்த ஒரு கடுமையான உள்நாட்டுப் போரைச் சந்தித்தது. 2002-இல் இந்த போர் முடிவுக்கு வந்த பிறகு, நாடு இன்று பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

அங்கோலாவின் கலாச்சாரம் ஆப்பிரிக்க பழங்குடி மரபுகளும் போர்த்துகீசிய கலாச்சாரமும் கலந்த ஒரு கலவையாகும். அங்கோலா உலகின் புகழ்பெற்ற கிசோம்பா (Kizomba) மற்றும் குடுரோ (Kuduro) ஆகிய இசை மற்றும் நடன வடிவங்களின் பிறப்பிடம். இவை இன்று உலகளவில் சிறப்பிடம் பெறுகிறது. சோக்வே (Chokwe) பழங்குடியினரின் மர வேலைப்பாடுகள்இ குறிப்பாக அவர்களின் 'முகமூடிகள்' அங்கோலாவின் கலை அடையாளமாகும். இவை பெரும்பாலும் மூதாதையர்களைக் கௌரவிக்கவும் சடங்குகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

அங்கோலாவில் கத்தோலிக்க மதம் வெறும் ஒரு மதம் மட்டுமல்லஇ அது மக்களின் சமூக வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது. அங்கோலாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம்  முதல் 60 சதவீதம் மக்கள் கத்தோலிக்கர்கள். உள்நாட்டுப் போரின் போது, கத்தோலிக்க திருஅவை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. "அமைதி மற்றும் ஒப்புரவு" (Peace and Reconciliation) என்பது அங்கோலா கத்தோலிக்க திருஅவையின் அடிப்படை சித்தாந்தமாகும். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அரசு எட்ட முடியாத தொலைதூர கிராமங்களில் கூட கத்தோலிக்க பள்ளிகளும், மருத்துவமனைகளும் உருவாக்கி, மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றன.

தற்போது அங்குள்ள கத்தோலிக்க திருஅவைஇ சமூக நீதி (Social Justice) மற்றும் பொருளாதார சமத்துவம் பற்றி அதிகம் பேசுகிறது. அங்கோலாவின் இயற்கை வளங்கள் ஏழை மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே இன்றைய அங்கோலா கத்தோலிக்க தலைவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால்இ அங்கோலா என்பது போரின் வடுக்களைத் தாண்டிஇ இசையாலும்இ ஆழ்ந்த ஆன்மீக நம்பிக்கையாலும் எழுந்து நிற்கும் ஒரு நாடு.

பிற்பகல் 3 மணிக்கு திருத்தந்தைக்கு லுவாண்டாவின் பிப்ரவரி 4 சர்வதேச விமான நிலையம்  (4 de Fevereiro) சர்வதேச விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு விழா நடைபெறுகிறது.

ஏன் இந்த விமான நிலையத்திற்கு பிப்ரவரி 4 சர்வதேச விமானநிலையம் என பெயரிடப்பட்டிருக்கிறது என்று சற்று ஆராய்ந்துபார்த்தோமானால், அது அங்கோலா மக்களின் வாழ்வில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.

பிப்ரவரி 4 சர்வதேச விமான நிலையம்” என்பது ஒரு தேதியின் பெயர் மட்டுமல்ல; அது அங்கோலாவின் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க நாளை நினைவுகூறும் தேசிய சின்னம் ஆகும். 1961 பிப்ரவரி 4 அன்று, லுவாண்டா நகரத்தில் அங்கோலா மக்கள் போர்ச்சுகீசியக் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக எழுச்சி செய்தனர். சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தேசியவாதிகளை விடுவிக்க முயற்சி செய்யப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றன. இது அங்கோலாவின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது. பலர் உயிரிழந்தாலும், இந்த நிகழ்வு பின்னர் முழுமையான விடுதலை இயக்கமாக வளர்ந்தது.

அதன் முடிவாக, அங்கோலா 1975 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அந்த வரலாற்று நாளை என்றும் நினைவில் வைத்திருக்க, பிப்ரவரி 4 என்ற பெயர் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், நாட்டிற்குள் வரும் ஒவ்வொருவருக்கும் அங்கோலாவின் சுதந்திர வரலாறு நினைவூட்டப்படுகிறது.

லுவாண்டா, அங்கோலா நாட்டின் தலைநகரம் ஆகும். இது அட்லாண்டிக் பெருங்கடலோரத்தில் அமைந்துள்ளது. போர்த்துகீசியக் காலனித்துவத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது. 1975ல் அங்கோலா சுதந்திரம் பெற்றபின் தலைநகரமாகியது. இது அங்கோலாவின் அரசியல், பொருளாதார மையம். எண்ணெய் மற்றும் வைரம் வளங்களால் செழித்த நகரம். ஆப்பிரிக்காவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்று. லுவாண்டாவில், லுவாண்டா உயர்மறைமாவட்டம் பல்வேறு பணிகளை முனைப்புடன் செய்துவருகிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம், சமூக சேவைகளில் முழுப்பங்காற்றுகின்றன. இங்கு பல பழமையான பேராலயங்கள் இருக்கின்றன, இவை அவர்களின் நம்பிக்கை வாழ்வின் மையமாக அமைகின்றது.

தனது அங்கோலா நாட்டிற்கான முதல் பயணத்தின் முதல்கட்டமாக பிற்பகல் மணி 3:40க்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அங்கோலா நாட்டின் குடியரசு தலைவர் ஜோவோ லூரென்கோ (João Lourenço) அவர்களை குடியரசு தலைவர் மாளிகையில் அதிகாரப்பூர்வமாக சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது அவர்கள் அமைதி, நீதி மற்றும் சமூக மேம்பாடு குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வார்கள் எனக் கருதப்படுகிறது.

பின்னர் மாலை மணி 4:15 க்கு அதிகாரிகளையும், தூதரகத்தையும் மரியாதையின் நிமித்தமாகச் சந்திக்கிறார். இரவு 7 மணிக்கு தனது தனிப்பட்ட சந்திப்பைத் தொடங்குகிறார்.

இத்துடன் இன்றைய நாளுக்கான திருத்தந்தையின் பயணம் திட்டக் குறிப்பு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வத்திக்கான் வானொலியுடன் இணைந்திருங்கள். உடனடித் தகவல்களைப் பெற்று பயன்பெறுங்கள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஏப்ரல் 2026, 12:01