திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தி!

“ஆண்டவருடைய உயிர்ப்புப் பெருவிழாவாகிய இந்நன்னாளில், மோதல், ஆதிக்கம் மற்றும் அதிகாரம் மீதான எல்லா ஆசைகளையும் கைவிட்டு, போர்களால் சிதைக்கப்பட்டு, தீமையின் முன் நம்மைச் வலிமையற்றவர்களாக உணரவைக்கும் வெறுப்பு மற்றும் அலட்சியத்தால் குறிக்கப்பட்ட இந்த உலகிற்குத் தமது அமைதியை அருளுமாறு ஆண்டவரிடம் மன்றாடுவோம்” - திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கான் வானொலியின் அன்பு உள்ளங்களே, உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள். இயேசுவின் உயிர்ப்பின் வல்லமை உங்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்து விளங்குவதாக! ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா ஆகிய இரு முக்கிய நாள்களில், திருத்தந்தையர், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து, 'ஊருக்கும் உலகிற்கும்' எனப் பொருள்படும் ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi) என்ற சிறப்புச் செய்தி, மற்றும் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர் வழங்கும் பழக்கம், 13-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிரகோரி அவர்களின் தலைமைப் பணி காலத்தில் தொடங்கியது.

ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நாளில், திருத்தந்தையை நேரில் கண்டு, அவர் வழங்கும் செய்திக்கு செவிமடுத்து, அவரது ஆசீரைப் பெறுவதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகள் தங்களின் குழந்தைகளுடன் புனித பேதுரு பெருங்கோவிலின் வளாகத்தில் குவிந்திருந்தனர். சரியாக பகல் 12 மணிக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நடுமாடத்திற்கு வந்ததும் திருப்பயணிகள் மகிழ்ச்சி பொங்க கரங்களை உயர்த்தி ஆரவாரம் செய்தனர். அவர்களைக் கண்டு பேரானந்தம் கொண்ட திருத்தந்தையும் பதிலுக்குத் தனது திருக்கரங்களை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, 'ஊர்பி எத் ஓர்பி' எனப்படும் சிறப்புச் செய்தியை அவர்களுக்கு வழங்கத் தொடங்கினார் திருத்தந்தை.

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

“என் நம்பிக்கையான கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் / கிறிஸ்து உண்மையாகவே சாவிலிருந்து உயிர்த்தெழுந்தார் / வெற்றியின் அரசரே, என்றும் ஆளும் அரசரே, இரக்கம் காட்டும்" என்று பல நூற்றாண்டுகளாக, திருஅவை தனது விசுவாசத்தின் தோற்றுவாயும் அடித்தளமுமான இந்த நிகழ்வைப் பற்றி ஆனந்தமாகப் பாடி வருகிறது.

உயிர்ப்பு என்பது இறப்பின் மீது வாழ்வின் வெற்றி

உயிர்ப்பு என்பது இறப்பின் மீது வாழ்வின் வெற்றி, இருளின் மீது ஒளியின் வெற்றி, வெறுப்பின் மீது அன்பின் வெற்றி. இந்த வெற்றி மிக அதிக விலை கொடுத்துப் பெறப்பட்டது: வாழும் இறைத்தந்தையினுடைய ஒரே திருமகனாகிய கிறிஸ்து (மத் 16:16), அநியாயத் தண்டனைக்கு உள்ளாகி, ஏளனப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, தன் இரத்தம் முழுவதையும் சிந்தியபின், உயிர்துறக்க வேண்டியிருந்தது, அதுவும் சிலுவையில் இறக்க வேண்டியிருந்தது.

உண்மையான பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியாக, அவர் உலகின் பாவத்தைத் தம் மீது ஏற்றுக்கொண்டு (யோவான 1:29; 1 பேதுரு 1:18–19), அதன் வழியாக நம் அனைவரையும், நம்மோடு சேர்த்து, படைப்புகள் அனைத்தையும் தீமையின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்தார். ஆனால் இயேசுவால் எப்படி வெற்றி பெற முடிந்தது? பழம்பெரும் எதிரியாகிய, இவ்வுலகத்தின் தலைவனை (காண்க. யோவா 12:31) அவர் எந்த வலிமையால் முற்றிலுமாகத் தோற்கடித்தார்? அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்ததன் வல்லமை என்ன? அவர் தமது முந்தைய வாழ்க்கைக்குத் திரும்பாமல், நிலைவாழ்விற்குள் நுழைந்து, இவ்வாறு தமது சொந்த உடலில் இவ்வுலகத்திலிருந்து தந்தையாம் கடவுளிடம் செல்லும் வழியைத் திறந்தார்.

இந்த வலிமையும், இந்த ஆற்றலும் கடவுளே ஆவார்; ஏனெனில் அவரே படைத்து உருவாக்கும் அன்பு, இறுதிவரை உண்மையுள்ள அன்பு, மன்னித்து மீட்கும் அன்பு. நமது வெற்றியின் அரசரான கிறிஸ்து, இறைத்தந்தையின் திருவுளத்திற்கும் அவருடைய மீட்பின் திட்டத்திற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தமது போராட்டத்தில் போராடி வெற்றி பெற்றார் (காண்க. மத் 26:42).

இவ்வாறு அவர் இறுதிவரை உரையாடலின் பாதையில், சொற்களால் அல்ல, செயல்களால் நடந்தார்: வழிதவறிய நம்மைக் கண்டறிய, அவர் மனிதரானார்; அடிமைகளாக இருந்த நம்மை விடுவிக்க, அவர் அடிமையானார்; இறக்கும் மனிதர்களாகிய நமக்கு வாழ்வளிக்க, சிலுவையில் கொல்லப்படத் தம்மை அனுமதித்தார். கிறிஸ்துவின் உயிர்ப்பின் வல்லமை முற்றிலும் அகிம்சையை (வன்முறையற்ற) அடிப்படையாகக் கொண்டது. அது, மண்ணில் மடிந்துபோன ஒரு கோதுமை மணி வளர்ந்து, மண் கட்டிகளைத் துளைத்துக்கொண்டு வந்து, முளைவிட்டு, பொன்னான கோதுமைக் கதிராக மாறுவதைப் போன்றது. இது, ஒரு குற்றத்தால் காயமுற்ற மனித இதயம், பழிவாங்கும் உள்ளுணர்வை நிராகரித்து, இரக்கத்தால் நிரம்பி, அக்குற்றத்தைச் செய்தவருக்காக இறைவேண்டல் செய்வதைப் போன்றது.

கிறிஸ்துவின் உயிர்ப்பு ஒரு புதிய மனிதகுலத்தின் தொடக்கம்

சகோதரர் சகோதரிகளே, இதுவே மனிதகுலத்திற்கு அமைதியைக் கொண்டுவரும் உண்மையான வலிமையாகும். ஏனெனில் இது தனிநபர்கள், குடும்பங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் நாடுகள் என அனைத்து நிலைகளிலும் மரியாதைக்குரிய உறவுகளை வளர்க்கிறது. அது தனிப்பட்ட நலன்களை நாடுவதில்லை, மாறாகப் பொதுநலனையே நாடுகிறது; அது தனது சொந்தத் திட்டத்தைத் திணிக்க முற்படுவதில்லை, மாறாக மற்றவர்களுடன் இணைந்து ஒரு திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்த உதவுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு புதிய மனிதகுலத்தின் தொடக்கமாகும்; அது நீதி, சுதந்திரம் மற்றும் அமைதி ஆட்சி செய்யும், அன்பு, வாழ்வு மற்றும் ஒளியாக விளங்கும் ஒரே தந்தையாம் கடவுளின் பிள்ளைகளாக அனைவரும் ஒருவரையொருவர் சகோதரர் சகோதரிகளாக அங்கீகரிக்கும் உண்மையான வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைவதாகும்.

ஆயுதங்களைக் களைந்து அமைதியை விதைப்போம்

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் தமது உயிர்த்தெழுதலின் வழியாக, நமது விடுதலையின் வியத்தகு எதார்த்தத்தை இன்னும் வலிமையாக நமக்கு உணர்த்துகிறார். வெற்றுக் கல்லறைக்கு முன்பாக, சீடர்களைப் போல நாமும் நம்பிக்கையாலும் வியப்பாலும் நிரப்பப்படலாம்; அல்லது, தண்டனை விதிக்கப்பட்டவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பொய்களையும் சூழ்ச்சிகளையும் கையாள நிர்பந்திக்கப்பட்ட காவலர்களையும் பரிசேயர்களையும் போல அச்சத்தாலும் நிரப்பப்படலாம் (காண்க. மத் 28:11–15)!

உயிர்த்தெழுதலின் ஒளியில், கிறிஸ்துவைக் கண்டு நாம் வியப்படைவோம்! நம்மீது அவர் கொண்டுள்ள அளவற்ற அன்பினால் நம் இதயங்கள் மாற்றமடைய அனுமதிப்போம்! ஆயுதங்களைக் கொண்டிருப்பவர்கள் அவற்றைக் கீழே போடட்டும்! போர்களைத் தொடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் அமைதியைத் தேர்ந்தெடுக்கட்டும்! அது பலவந்தமாகத் திணிக்கப்படும் அமைதியல்ல, மாறாக உரையாடலின் வழியாக எற்படும் அமைதி! மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தும் ஆசையுடன் அல்ல, மாறாக அவர்களை எதிர்கொள்ளும் ஆசையுடன் கூடிய அமைதி!

நாம் வன்முறைக்குப் பழக்கமாகி, அதை ஏற்றுக்கொண்டு, உணர்வற்றவர்களாக மாறி வருகிறோம். மோதல்களில் ஏற்படும் வெறுப்பு மற்றும் பிரிவினையால் உண்டாகும் தீங்குகளைப் பற்றியோ, ஆயிரக்கணக்கானோரின் இறப்புகளைப் பற்றியோ நாம் பொருட்படுத்துவதில்லை. அவை உருவாக்கும் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை நாம் அனைவரும் உணர்கிறோம், ஆனால் அவற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை

உலகெங்கிலும் உள்ள துன்பங்களைப் பற்றி மக்கள் அக்கறை இழந்து வருவதைக் குறிக்கும், அதிகரித்து வரும் "உதாசீனத்தின் உலகமயமாக்கல்" குறித்து முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசியுள்ளார். ஓராண்டுக்கு முன்பு, இதே இடத்திலிருந்து, எல்லா இடங்களிலும் பரவலாக நிகழும் வன்முறை மற்றும் மோதல்களை அவர் உலகிற்கு நினைவூட்டி, "உலகின் பல பகுதிகளில் ஒவ்வொரு நாளும் இறப்பு மற்றும் கொலைக்கான பெரும் தாகத்தை நாம் காண்கிறோம்!" என்று கூறினார் (உர்பி எத் ஓர்பி செய்தி, 20 ஏப்ரல் 2025).

இயேசுவின் உயிர்த்தெழுதலை அன்புகூர்வோம்

கிறிஸ்துவின் சிலுவையானது, இறப்பைச் சூழ்ந்திருக்கும் துன்பத்தையும் வலியையும், அது தரும் வேதனையையும் நமக்கு எப்போதும் நினைவூட்டுகிறது. நாம் அனைவரும் இறப்பிற்கு அஞ்சுகிறோம்; அந்த அச்சத்தின் காரணமாக, நாம் அதை எதிர்கொள்ள விரும்பாமல், விலகிச் செல்கிறோம். நாம் தொடர்ந்து அலட்சியமாக இருக்க முடியாது! மேலும், தீமைக்கு நம்மை நாமே ஒப்படைத்துவிடவும் முடியாது!  “நீங்கள் இறப்பிற்கு அஞ்சினால், உயிர்த்தெழுதலை அன்புகூருங்கள்!” என்று புனித அகுஸ்தினார் படிப்பிக்கிறார் (மறையுரை 124, 4). தீமை முடிவல்ல, ஏனெனில் அது உயிர்த்தெழுந்தவரால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதை நமக்கு நினைவூட்டும் உயிர்த்தெழுதலை நாமும் அன்புகூர்வோம்.

நமக்கு வாழ்வையும் அமைதியையும் அளிப்பதற்காக இயேசு இறப்பைக் கடந்து சென்றார்: "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" (யோவான் 14:27). இயேசு நமக்கு அளிக்கும் அமைதி என்பது ஆயுதங்களின் அமைதி மட்டுமல்ல, அது நம் ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட்டு மாற்றி அமைக்கும் அமைதியாகும்! கிறிஸ்துவின் அமைதியால்  நாம் மாற்றமடைய நம்மை அனுமதிப்போம்! நம் இதயங்களிலிருந்து எழும் அமைதிக்கான மன்றாட்டை நாம் உரக்கக் கேட்போம்! இந்தக் காரணத்திற்காக, வரும் 11-ஆம் தேதி, சனிக்கிழமையன்று, புனித பேதுரு சதுக்கத்தில் நாம் கொண்டாடவிருக்கும் அமைதிக்கான இறைவேண்டல்  வழிபாட்டில் என்னுடன் இணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

ஆண்டவருடைய உயிர்ப்புப் பெருவிழாவாகிய இந்நன்னாளில், மோதல், ஆதிக்கம் மற்றும் அதிகாரம் மீதான எல்லா ஆசைகளையும் கைவிட்டு, போர்களால் சிதைக்கப்பட்டு, தீமையின் முன் நம்மைச் வலிமையற்றவர்களாக உணரவைக்கும் வெறுப்பு மற்றும் அலட்சியத்தால் குறிக்கப்பட்ட இந்த உலகிற்குத் தமது அமைதியை அருளுமாறு ஆண்டவரிடம் மன்றாடுவோம். துன்புறும் மற்றும் அவரால் மட்டுமே அளிக்கப்படக்கூடிய உண்மையான அமைதிக்காகக் காத்திருக்கும் எல்லா உள்ளங்களையும் ஆண்டவரிடம் ஒப்படைப்போம். நம்மை அவரிடம் ஒப்படைத்து, நம் இதயங்களை அவருக்குத் திறப்போம்! அவரே எல்லாவற்றையும் புதிதாக்குபவர் (திவெ 21:5).

உங்கள் அனைவருக்கும் இயேசு ஆண்டவரின் உயிர்ப்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!

இவ்வாறு ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தியை வழங்கிய பிறகு விசுவாசிகள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஏப்ரல் 2026, 14:49